August 19, 2018

முஸ்லிம் ஒருவரை, முதலமைச்சராக்கியது நாங்கள்தான் - சுரேஷ் பிரேமச்சந்திரன்

இன்றைய -19- தமிழ் பத்திரிகையொன்றுக்கு ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வழங்கியுள்ள செவ்வியின் ஒரு பகுதி.

வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியப் பட வேண்டுமனில், தமிழர்கள் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கை வென்றெடுக்கப்பட வேண்டும். அதற்காகவே கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம்களுக்கு வழங்கியதாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகின்றது. அவ்வாறல்லாமல் தமிழர் முதலமைச்சராக வரவேண்டுமென வலியுறுத்துவதால் வட-, கிழக்கு இணைப்பென்பது சாத்திப்படாததாகவே போய்விடாதா?

இல்லை. பரஸ்பர நம்பிக்கையைக் கட்டியெழுப்பவே கிழக்கு முதல்வர் பதவி விட்டுக்கொடுக்கப்பட்டதாக சம்பந்தர் சொன்னாலும், அதற்கடுத்த கட்ட நகர்வெதனையும் அவர் மேற்கொண்டிருக்கவில்லை. இணைப்புப் பற்றி முஸ்லிம்களுடன் இதுவரை வாய் திறந்து எதனையும் பேசவில்லை. அதற்கு மாறாக இணைப்புக்கு கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அங்கீகாரத்தை உடனடியாகப் பெற இயலாது. அதுபற்றி இப்போதைக்குப் பேசவேண்டாம் என்றுதான் அவர் சொல்கின்றார். முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக்கியது நாங்கள் தான். எனவே எதிர்காலத்திலும் நாங்கள் இணைந்து பயணிப்பது அவசியம் என்றவாறாக எந்தவொரு முஸ்லிம் தரப்புடனும் ஏன் அவர் பேசவில்லை? அதற்கடுத்த கட்ட நகர்வெதனையும் மேற்கொள்ளவில்லை? என்ற பாரியதொரு குற்றச்சாட்டு அவர் மீது இருக்கின்றது. 

கிழக்கு மாகாண தமிழ் மக்களே இக்குற்றச்சாட்டை வலிமையாக முன்வைக்கின்றார்கள். கூட்டமைப்பு எதிர்காலத்திலும் அதுகுறித்து தீவிரமாக முயற்சிகளை மேற்கொள்ளும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாததோடு, முஸ்லிம் தரப்பில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தாங்கள் இணைப்பை திட்டவட்டமாய் எதிர்ப்பதாகவும் அவ்வாறு வடக்கும் கிழக்கும் இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என்றும் ஊடகங்களில் அறிக்கை விடுத்தும் வருகின்றார்கள. அவ்வாறு முஸ்லிம் அரசியல்வாதிகள் கூறுவது தவறெனக்கூட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாய்திறக்கவில்லை. வடக்கு,- கிழக்கு இணைப்புத் தேவையென்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. 

கிழக்கு மாகாணத்திலும் பல அமைப்புகளும், கட்சிகளும் அதனையே வலியுறுத்துகின்றன. ஆனால் அக்கோரிக்கையை சரியாக வழிநடத்தும் தலைமைத்துவம் அங்கில்லை என்பதுதான் வருத்தத்தத்துக்குரிய விடயம். நாங்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்களல்ல. முஸ்லிம்களது பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையக்கூடிய முறைமைகளின் தேவைபற்றி அஷ்ரப்பின் காலந் தொட்டு வலியுறுத்தப்பட்டு வருகின்றது. அவ்வாறான முறைமைகளை உருவாக்குவதற்குத் தமிழ்த்தரப்பும் தயாராகவே இருக்கின்றது. கிழக்கில் உள்ள தமிழர்களின் இருப்பும் அவர்களது பொருளாதார நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களது வாழ்விடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். 

அவர்களது எதிர்காலம், வேலைவாய்ப்பென்பன உறுதிப்படுத்தப்பட வேண்டும். இவையெல்லாம் சாத்தியமாக வேண்டுமெனில் நிச்சமாக வட-, கிழக்கு இணைக்கப்பட வேண்டும். எல்லோரும் இணைந்து திட்டமிடுவதன் மூலமே அதனை சாத்தியமாக்கலாம். அல்லாமல் முஸ்லிம் மக்கள் தனித்துப்போக விரும்பினால் அதனை ஏற்றுக்கொள்வதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அவர்கள் தனித்துப் போக விரும்பினால் போகலாம். ஆனால் தமிழ் மக்களின் வாழ்விடங்கள், பொருளாதாரம் என்பனவற்றைத் தீர்மானிக்கும் பொறுப்பும் கடமையும் தமிழ் மக்களுக்கே உரியது. அதனை வேறுயாரிடமும் விட்டுக்கொடுக்க முடியாது.

4 கருத்துரைகள்:

முஸ்லிம் ஒருவரை முதலமைச்சர் ஆக்கியது மஹிந்த ராஜபக்‌ஷ,நீங்கள் அல்ல நஜீப் அப்துல் மஜீத் 2012 முதல் 2015 வரை முதலமைச்சராக இருந்தார்

ஒரு முஃமின் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார்

தமிழர்களின் இருப்பு, பொருளாதாரம், வாழ்விடம்,வேலைவாய்ப்பு இவையெல்லாம் பாதுகாக்கப்பட வடக்கு கிழக்கு இணைந்தால் தான் சாத்தியமென்றால்.முஸ்லிம்களுக்கு இவையெல்லாம் சாத்தியமாக பிரிந்து இருப்பதே உகந்தது.அதற்கு உதாரணம் வடக்கில் துறத்தப்பட்டது, கிழக்கில் நடந்த கொடூரங்களே சாட்சி.

முஸ்லிம்களின் கால்களை நக்கி ஆட்சியை பங்குபோட 2012 இல் பிச்சை பாத்திரம் ஏந்தியவர்கள் நீங்கள். உங்கள் தயவில்லாமல் 2012ல் ஆட்சியமைத்தவர்களும் நாங்கள்

Post a Comment