Header Ads



அமைச்சரை பிடிக்காததால் 2 ஆண்டுகள் லீவு கேட்ட அதிகாரி - பாகிஸ்தானில் ருசிகரம்

மந்திரியின் அணுகுமுறை பிடிக்காததால் ரெயில்வே அதிகாரி 2 ஆண்டுகள் விடுப்பு கேட்ட சம்பவம் பாகிஸ்தானில் ருசிகரத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் ரெயில்வேத்துறையில் தலைமை வணிக மேலாளராக பணியாற்றி வருபவர் முகமது ஹனிப் குல். இவர், தனக்கு 730 நாட்கள் (2 ஆண்டுகள்) விடுப்பு கேட்டு திடீரென உயர் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், பாகிஸ்தானின் புதிய ரெயில்வே மந்திரியான ஷேக் ரஷித் அகமதுவின் அணுகுமுறை பிடிக்கவில்லை எனவும், அவரின் கீழ் பணியாற்ற முடியாது என்றும் அவர் கூறி உள்ளார். அவரது இந்த விடுப்பு கடிதம், சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதை பார்க்கும் பலரும் பாகிஸ்தான் ரெயில்வேத்துறையில் பிளவு ஏற்பட்டு இருப்பதாக கூறியுள்ளனர். சிலர் மந்திரியையும், அந்த அதிகாரியையும் கிண்டல் செய்து ருசிகரமான பதிவுகளை போட்டு வருகின்றனர். மேலும் சிலர், இது மிகவும் அபத்தமானது என கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான அரசு சமீபத்தில் பதவியேற்றது. அதில் ரெயில்வே மந்திரியாக ஷேக் ரஷித் அகமது கடந்த 20-ந் தேதிதான் பதவியேற்றார். அதற்குள் அவரது துறையை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர், மந்திரியின் கீழ் பணியாற்ற முடியாது எனக்கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

No comments

Powered by Blogger.