Header Ads



"பண நப்பாசையிலும், அதிகார பேராசையிலும் எமது நாட்டை மஹிந்த ரஜாபக்ஷ விற்றுவிட்டார்"

பண நப்பாசையிலும் அதிகார பேராசையிலும் எமது நாட்டின் கொள்க‍ையையும் எமது சுயாதீனத்தையும் மஹிந்த ரஜாபக்ஷ விற்றுவிட்டார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் 7.6 மில்லியன் டொலர் நிதியை வழங்கியுள்ளதாக தகவல் வெளியிட்டு நியூயோர்க டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக  பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியினரால் கொண்டு வரப்பட்ட சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில்  கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு சீன நிறுவனம் 7.6 மில்லியன் டொலர் நிதியை வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அவரே இங்கு வந்து விளக்கமளித்திருக்க  வேண்டும். ஆனால் தற்போதைய விவாதத்தின் போது அதற்கு செவிசாய்த்து அது தொடர்பாக பதிலளிக்காது ஊழல் மோசடிகளுக்கு பின்னால் இருக்கும் மக்களின் பொது பணத்தை நாசப்படுத்தியவர்கள் குழப்ப முயற்சித்துள்ளனர். 

பஷில் ராஜபக்‌ஷவின் மனைவியுடன் தொடர்புடைய சீ.ஐ.சீ.டி நிறுவனத்தை பற்றி கூற வேண்டும். அவர்களால் எச்.எஸ்.பீ.சி வங்கியில் அமெரிக்க டொலர் மற்றும் ரூபா அடிப்படையிலான கணக்குகளை பேணி வந்துள்ளனர். கொழும்பு துறைமுகத்தின் தெற்கு துரையடி திட்டம் குறித்த நிறுவனத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. இதன்படி 2012.05.21 ஆம் திகதி ஒரு இலட்சத்து 57ஆயிரம் டொலர் இலங்கை ரூபாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. பின்னர் அது  புஸ்பா ராஜபக்‌ஷ மன்றத்தின் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சீ.ஐ.சீ.டியின் 95 வீதம் சீன நிறுவனத்தினுடையது. இதன்படி 35 வருடங்களின் அந்த துறைமுக திட்டத்தை  அரசாங்கம் மீள பொறுப்பேற்கும் போது புஸ்பாவுக்கும் வழங்கப்பட்ட பணத்தை அரசாங்கமே மீள செலுத்த வேண்டிய நிலைமை உருவாகும்.  

சைனா ஹாபர் நிறுவனம் தேர்தல் காலத்தில் மில்லியன் கணக்கில் பணத்தை வழங்கியுள்ளது. அடிக்கடி மில்லியன் கணக்கில் கசோலைகள் மாற்றப்பட்டுள்ளன. சீனா தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள இவ்வாறு செய்துள்ளது. அரச தலைவர்களை பணத்திற்கு வாங்கியுள்ளனர். இப்போது சில விடயங்களே வெளியாகியுள்ளன. மேலும் வெளியாகும். 

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதியை தேசப் பற்றாளர் என கதைக்க முடியாது.  தாய் நாடு என அவரால் கதைக்க முடியுமா? முன்னாள் ஜனாதிபதி என்றில்லாது பாராளுமன்ற உறுப்பினர் என கருதாது சாதாரண  பிரஜையாக கருதி மஹிந்த ராஜபக்‌ஷ ஏதேனும் நிறுவனத்தினால் விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்றால் அது தொடர்பாக அவர் விளக்கமளிக்க வேண்டும். 

மஹிந்த ராஜபக்ஷவின் ஊழல் சர்வதேச ஊடகத்தில் வெளிவந்துள்ளது. என்ன காரணிக்காக வெளிவந்தது, எவ்வாறு வெளிவந்தது என்பதை விடவும் நடைபெற்ற ஊழல் குறித்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அமெரிக்கா - சீனா வின் அரசியல் எமக்கு அவசியம் இல்லை, சர்வதேச ஊடகம் எவ்வாறு செயற்படுகின்றது என்பதை எமக்கு முக்கியம் இல்லை. ஆனால் மஹிந்த ராஜபக்ஷ சீனாவிடம் வாங்கிய 7.6 மில்லியன் டொலர் குறித்து விசாரிக்க வேண்டும். அவர் பாராளுமன்றத்தில் உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும்.  ஒரு தரப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்தால் அதற்கு உரிய  பதிலை கூற வேண்டியது எதிரணியின் கடமையாகும். 

ஆனால் இவர்கள் இந்த விவாதத்தை தடுக்க எடுத்த முயற்சிகள் வேடிக்கையாக இருந்தது. மஹிந்த ராஜபக்ஷவை காப்பாற்ற இவர்கள் எடுத்த முயற்சிகள் வேடிக்கையாகவும் வெட்கப்பட வேண்டிய ஒன்றாகவும் அமைந்தது. மஹிந்த ராஜபக்ஷ இந்த கேள்விகளுக்கு பதில் கூற வேண்டும். என்னிடம் பல கேள்விகள் உள்ளன. 

மக்களின் சொத்துக்களை பாரிய அளவில் கொள்ளையடித்து ஆட்சி செய்த அரசாங்கமே இதுவரை காலமாக இருந்து வந்துள்ளது. இதில் ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஊழல்களை கணக்கெடுப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இவர்கள்  தேர்தலுக்கு இரண்டு நாட்கள் இருந்த போதே பல கோடி ரூபாய்களுக்கு கோடிக்கணக்கான பெறுமதி கொண்ட காசோலை மாற்றப்பட்டுள் தகவல்கள் கிடைத்துள்ளது.  எமது நாட்டில் சுயாதீனத்துவம் குறித்து பாரிய போராட்டம் உள்ளது. சிலர் வடக்குக்கு எதிரான தெற்கின் இனவாதம் தேசிய வாதம் என கூறுகின்றனர். ஆனால் ஒட்டுமொத்த மக்களையும் நெருக்கும் ஊழலுக்கு எதிராக இந்த தேசிய வாதிகள் வாய்திறப்பதில்லை.  

பண நப்பாசையிலும் அதிகார பேராசையிலும் எமது நாட்டின் கொள்க‍ையையும் எமது சுயாதீனத்தையும் மஹிந்த ரஜாபக்ஷ  விற்றுவிட்டார். மக்களையும் சொத்துக்களையும் சர்வதேசத்துக்கு விற்றுவிட்டு அதில் ஆட்சி செய்யும் மிகவும் கீழ் தரமான அரசியலில் ஈடுபட்டுவிட்டார்.  இந்த குற்றச்சாட்டுக்களுக்கு அவர் ஒரு ஜனாதிபதியாகவோ, எதிர்கால தலைவராகவோ அல்லாது ஒரு சாதாரண குடிமகனாக பதில் கூற வேண்டும் என்றார். 

No comments

Powered by Blogger.