Header Ads



பிறை விவகாரம், ஜம்இய்யதுல் உலமாவுக்கான ஒரு ஆலோசணை (முஸ்லிம்கள் கட்டுப்படவும் வேண்டும்)

-அஷ்ஷெய்க் அக்ரம் அப்துல் ஸமத்-

இம்முறை (2018) பிறை விடயத்தில் சில சுவாரஸ்யங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. உலகப் பொதுச் சூழல் மாத்திரமன்றி காலநிலை மாற்றங்களும் கூட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவை சில நிர்ப்பந்தங்களுக்குத் தள்ளிவிடும் நிலை ஏற்பட்டு வருவதாக எண்ணத் தோன்றுகிறது. பிறைக் குழுச் செயலாளர் ஷெய்க் முக்க்ஷித் அஹ்மத் அவர்களது அறிக்கையும் ஜம்இய்யதுல் உலமாவின் கௌரவத் தலைவர் ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்களது ஜும்ஆ பிரசங்க தெளிவுரையும் இதனையே குறித்து நிற்கின்றன. ரமழான் தலைப்பிறைத் தீர்மானிக்கப்படுவதில் நடைபெற்ற அனைத்து நடவடிக்கைகளும் ஷரீஆ வரையறைகளுக்கு உற்பட்டுத்தான் நடைபெற்றுள்ளன என்ற தர்க்கம்தான் பிரதானமாக அவற்றில் முன்வைக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக,  இங்கு நிகழும் தவறுகள் மார்க்கத்தில் குற்றமாகக் கருதப்பட மாட்டாது. இது உண்மைதான் ஏலவே பிறைபார்த்தல் தொடர்பாக ஜம்இய்யதுல் உலமா எடுத்துள்ள ஜந்து அடிப்படைகளின் பிரகாரம் மேலே பேசப்பட்ட தர்க்கத்தில் எந்தப் பிரச்சினையுமில்லை. ஆனால் இங்கு எங்கள் கவனத்தைப் பெற வேண்டிய முக்கியதொரு விடயம் இருக்கிறது. பிறை தொடர்பான ஜம்இய்யதுல் உலமாவின் அடிப்படைகள் ஷரீஆ வரம்புகளுக்கு உள்ளே இருந்துதான் பெறப்பட்டுள்ளன,  ஆனால் அந்த ஜந்து அடிப்படைகளும் மாத்திரம்தான் ஷரீஅத்,  அவற்றிற்கு வெளியில் ஷரீஅத் என்று சொல்வதற்கு எதுவும் கிடையாது என்று நாம் நினைத்தால் அங்குதான் முக்கியமாக நாம் தவறு விடுகின்றோம். அந்தவகையில் அந்த அடிப்படைகளுக்கு வெளியிலும் பிறை தொடர்பில் ஷரீஅத்துக்குற்பட்டு தீர்மானங்கள் பெறுவதற்கு இடம் இருக்கிறது என்பது உண்மை. இங்குதான் ஜம்இய்யதுல் உலமா தனது பிறை அடிப்படைகள் குறித்து மீள்பரிசீலணை செய்வதற்கான இடம் உருவாகிறது. அதற்கான காலமும் கனிந்திருக்கிறது என்றே நான் நினைக்கின்றேன்.
இவ்வருடம் (2018) ஏற்பட்டுள்ள புதிய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு 28நாட்களில் ரமழான் நிறைவுபெறும் நிலை வந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கான சாதகமான நிலைப்பாட்டை ஜம்இய்யதுல் உலமா பெற்றுள்ளது. இது வரவேற்கத் தக்கது. எனினும் இந்த இடத்துடன் மாத்திரம் ஜம்இய்யதுல் உலமா நின்று விடக் கூடாது. இதற்கு அப்பால் சென்று இது போன்ற அசௌகரியமான சூழ்நிலைகளில் இருந்து நிரந்தரமாக வெளிவருவதற்கான வழிகள் பற்றி சீரியஸாக சிந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த அசௌகரியமான சூழ்நிலைக்கு இம்முறை பெரிதும் காலநிலை மாற்றம் காரணமாக அமைந்தது. இதன் பின்னரும் காலநிலை மாற்றங்கள் இவ்விடயத்தில் பாதிப்புச் செலுத்த மாட்டாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மாத்திரமன்றி சில நம்பத்தகுந்த துறைசார்ந்தவர்களது அவதானங்களின் படி எதிர்கால காலநிலை மாற்றங்கள்,  பிறைபார்க்கும் வழிமுறையில் இப்போது கடைபிடிக்கும் வெற்றுக் கண்ணால் பார்த்தல் விதியை தொடர்ந்தும் பிரயோகிக்க முடியாத நிலை தோன்றலாம் என்றும் கருத்துரைக்கப்படுகிறது. இது ஒரு காரணம்.

இந்தக் காரணத்திற்கு அப்பால் கடந்த காலங்களில் பெரிதும் கண்டு கொள்ளப்படாமல் கடந்து சென்ற மற்றொரு காரணமும் இருக்கிறது. அதுதான் “மக்கள் எதிர்பார்ப்பு” எனும் காரணம். இந்த மக்கள் எதிர்பார்ப்பு என்ற காரணம் நியாயமான அடிப்படைகள் மீது எழுகின்ற பொழுது அதற்கு இஸ்லாமிய ஷரீஆவில் ஒரு பெறுமானம் இருக்கிறது. பத்வாக்கள் மாற்றமடைவதற்கான நியாயமாக அது மாறுகிறது. இதனைத்தான் இமாம் இப்னுல் கையிம் போன்றவர்கள் கால இட சூழ்நிலை மாற்றங்களுக்கு ஏற்ப பத்வா மாறுதல் என்று அடையாளப்படுத்தினார்கள். இன்று இந்த மக்கள் எதிர்பார்ப்பு என்ற காரணி எவ்வாறு உருவாகியிருக்கிறது எனின்,  இன்றைய நவீன அறிவியல் கண்டுபிடிப்புக்களும்,  தொலைத் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியும்,  தகவல் வெடிப்பும் மனிதனது அறிவிலும் சிந்திப்பிலும் உறவுகளிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. உலகம் முழுவதும் ஒரு கிராமமாக மாற்றம் பெற்றுள்ளது. இந்நிலையில் நோன்பை ஆரம்பித்தல் என்பதும் பெருநாளைக் கொண்டாடுதல் என்பதும் உலகில் எந்த மூலையில் நிகழ்ந்தாலும் அனைவரும் அறிந்து கொள்ளும் நிலை மாத்திரமன்றி தாமும் அதில் பங்கு கொள்ள வேண்டும் என்ற மனநிலையும் பெரிதும் வளர்ந்திருக்கிறது. குறிப்பாக நோன்பும் பெருநாளும் முழு முஸ்லிம் உம்மத்தும் பங்கு கொள்ளும் முக்கிய இரு இபாதத்கள் என்ற வகையில் சர்வதேச ஒருமைப்பாட்டு உணர்வு பெரிதும் மக்கள் மனங்களில் வளர்ந்திருப்பதைக் காணலாம். இந்த மனநிலை மாற்றத்தின் காரணமாகத்தான் உள்நாட்டில் பிறை காண்பதில் ஏற்படும் தாமதங்கள் பல கேள்விகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி விடுகின்றன. இது உலகின் புதிய சூழ்நிலை. கடந்த காலங்களில் காணப்படாத புதிய சூழ்நிலை. இந்தப் புதிய சூழ்நிலைக்கு ஏற்றவகையில் பத்வாக்களிலும் மார்க்க நிலைப்பாடுகளிலும் மாற்றங்கள் தேவை. அதிலும் குறிப்பாக நோன்பு மற்றும் பெருநாள் போன்ற நடவடிக்ககைகள் தனிமனித நடவடிக்கைகள் அன்றி எல்லா மக்களும் இணைந்து பங்கு கொள்ளும் பொது நடவடிக்கைகள். எனவே மக்;களது எதிர்பார்ப்புக்கள் அங்கே பெரிதும் தாக்கம் செலுத்துகின்றன. அந்த எதிர்பார்ப்புக்கள் நேரடியாக ஷரீஅத்தின் விதிகளுடனோ மகாஸிதுகளுடனோ முரண்படவில்லை எனின் அவை கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பது இமாம்களின் பொதுக் கருத்தாகும்.
அந்தவகையில் ஜம்இய்யதுல் உலமாவின் பிறை அடிப்படைகளில் முக்கியமாக முதல் இரண்டு அடிப்படைகளான உள்நாட்டில் பிறைபார்த்துச் செயற்படுதல் என்பதும் வெற்றுக் கண்களால் பிறைபார்த்தல் என்பதும் மீள்பரிசீலணைக்கு உற்படுத்தப்பட வேண்டிய கட்டாய நிலையில் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். தொழிநுட்பம் வளர்ச்சியடையாத ஒரு காலத்தில் இந்த அடிப்படைகள் மிகவும் பொருத்தமானவையாகவும் சரியானவையாகவும் இருந்திருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தற்போதைய புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்குரிய காலப்பொருத்தம் இவற்றுக்கு இருப்பதாக இன்னும் எண்ணுவதற்கில்லை. இங்கு மீண்டும் ஒரு விடயத்தை நினைவு படுத்திக் கொள்கிறேன். இங்கு வலியுறுத்தப்படுவது காலம் மாறுவதற்கு ஏற்ப மார்க்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது அல்ல. மாற்றமாக மார்க்கம் அனுமதித்த ஒரு நிலைப்பாட்டில் இருந்து மார்க்கம் அனுமதித்த மற்றொரு நிலைப்பாட்டை நோக்கிச் செல்வதுவே இங்கு நாடப்படுகிறது. அதிலும் மார்க்கம் அனுமதித்த ஒரு காரணத்திற்காகவே அந்த மாற்றம் நிகழ வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

அதே போல்,  இங்கு மாற்றீடாக சர்வதேச பிறை எனும் பத்வாவுக்குச் செல்ல வேண்டும் என்ற பரிந்துரையையும் நான் செய்யவில்லை. காரணம் சர்வதேச முஸ்லிம் உம்மத்தின் அரசியல் ரீதியான முரண்பாடுகள் காரணமாக இந்த விடயத்தில் முஸ்லிம் உம்மத்தினர் அனைவரும் கடைபிடிப்பதற்குரிய பொது முறைமை ஒன்று இல்லை. முழு உம்மத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி இப்பணியை யார் மேற்கொள்வார்? என்ற கேள்விக்கு தெளிவான ஒரு பதிலைப் பெற்றுக் கொள்வது சிரமமானது. அரசியல் ரீதியான காரணங்கள் அதற்கு உண்டு. உதாரணமாக வானியல் கணிப்பீட்டின் அடிப்படையில் சர்வதேச ஹிஜ்ரி காலண்டர் ஒன்றை உருவாக்குவதற்கான சர்வதேச அறிஞர்கள் ஒன்றியத்தின் முன்மொழிவு இன்னும் அரசியல் தலைமைகளின் ஆசீர்வாதம் கிடைக்காததால் முடிவு இல்லாமல் இருக்கிறது. இது போன்றதொரு சர்வதேச உடன்பாடு எட்டப்படும் போது அதனோடு இலங்கை முஸ்லிம் சமூகமும் இணைந்து பயணிப்பது எமது பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமைய முடியும். அதற்கான காலம் இன்னும் கனியவில்லை என்று நினைக்கிறேன்.
அதுபோல்,  வானியல் கணிப்பீட்டு முறை,  அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறை அடிப்படைகளைப் பார்க்கின்ற பொழுது,  வானியல் கணிப்பீட்டு முறையை அவர்கள் முழுமையாக மறுதலிக்கவில்லை என்பது விளங்குகிறது. ஏனெனில் பிறை அடிப்படைகளில் பிந்திய மூன்று அடிப்படைகளும் வானியலுடன் சம்பந்தப்பட்ட விடயங்களையே பேசுகின்றன. பொதுவாக வானியல் கணிப்பீட்டு முறை தொடர்பில் இஸ்லாமிய உலகின் அறிஞர்கள் மத்தியில் பிரதானமாக மூன்று வகையான நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. ஒன்று கணிப்பீட்டு முறையை முழுமையாக ஏற்கும் நிலைப்பாடு. இரண்டு முழுமையாக மறுக்கும் நிலைப்பாடு. மூன்றாவது பிறையை உறுதிப்படுத்துவதற்காக கணிப்பீட்டைப் பயன்படுத்துவதில்லை ஆனால் பிறையை மறுப்பதற்காகப் பயன்படுத்த முடியும் என்ற நிலைப்பாடு. அதாவது கணிப்பீட்டின்படி பிறை தென்பட முடியும் என்றிருக்கிறது,  ஆனால் வெற்றுக் கண்களால் யாரும் பிறையைக் காணவில்லை, இப்பொழுது கணிப்பீட்டை மாத்திரம் வைத்து பிறை தீர்மானிக்கப்பட மாட்டாது. மாற்றமாக கணிப்பீட்டின் படி பிறை தென்பட முடியாது என்றிருக்கின்ற பொழுது எவரேனும் வெற்றுக் கண்களால் பிறையைக் கண்டதாக அறிவித்தால் கணிப்பீட்டின் படி பிறை தென்பட முடியாது என்பதை அடிப்படையாகக் கொண்டு அவரது சாட்சியம் மறுக்கப்படும். இந்த மூன்றாவது நிலைப்பாட்டில்தான்  ஜம்இய்யதுல் உலமா இருக்கிறது என்பது தெளிவானது. சில வருடங்களுக்கு முன்னர் கிண்ணியா பிறை மறுக்கப்பட்டமையும் இந்த அடிப்படையை வைத்தே நடைபெற்றுள்ளது.

இங்கு கணிப்பீட்டு முறையை முழுமையாக ஏற்க வேண்டும் என்றும் நான் ஜம்இய்யதுல் உலமாவுக்குச் சொல்லவில்லை. எனது தனிப்பட்ட கருத்தின் படி தற்காலத்தில் கணிப்பீட்டு முறைதான் மிகவும் சரியான ஷரீஅத் முடிவு,  அதுதான் தற்காலத்தில் குர்ஆனையும் ஹதீஸையும் இவ்விடயத்தில் பின்பற்றுவதற்கான மிகச்சரியான வடிவம் என்று நம்புகிறேன். இருந்த போதிலும் அதனை நான் முழுமையாக அவர்களுக்குப் பரிந்துரைக்கவில்லை. காரணம் இஸ்லாமிய உலகின் ஓயாத கருத்து வேறுபாட்டுப் பரப்புக்களில் ஒன்றாக இதுவும் இருப்பதனால் எவரையும் குறித்த ஒரு கருத்தின் மீது நிர்பந்திக்க முடியாது,  இது விசாலமாக அணுக முடியுமான ஒரு இடம். அந்த வகையில் மிகவும் காலப்பொருத்தமானது எது என்ற தேடல்தான் இங்கு முக்கியமானது. அந்த திறந்த கலந்துரையாடல் ஜம்இய்யதுல் உலமாவுக்கு  உள்ளேயே இருந்துதான் கருக்கொள்ள வேண்டும், வெளி நிர்ப்பந்தங்களை விடவும்,  என்று நினைக்கிறேன்.
ஆனால் இங்கு நான் வலியுறுத்த விரும்புவது,  ஜம்இய்யதுல் உலமா,  கணிப்பீட்டு முறை தொடர்பில் தற்போதிருக்கும் நிலைப்பாட்டில் இருந்து இன்னும் ஒரு படி மேலே வர வேண்டும் என்பதுதான். அவர்கள் மேலே வர வேண்டிய இடம் எது என்பதை அடுத்து பேசவுள்ள கருத்தோடு விளங்கப்படுத்துகிறேன். ஏனெனில் அதனுடன் இணைத்துதான் இது விளங்கிக் கொள்ளப்பட வேண்டும்.

இன்று உள்நாட்டுப் பிறையா? சர்வதேசப் பிறையா? என்ற ஒரு கருத்து வேறுபாடு இருக்கிறது. இன்று உண்மையில் உள்நாடு,  சர்வதேசம்  போன்ற சொல்லாடல்கள் மூலம் இன்றைய அரசியல் ரீதியான நில எல்லைகளே நாடப்படுகின்றன. இந்த நில எல்லைகள் நவீன காலத்தில் தோற்றம் பெற்றவை. ஆனால் ஆரம்ப கால இமாம்களின் இது தொடர்பான கருத்து வேறுபாடு உள்நாடு சர்வதேசம் என்ற நில எல்லைப் பிரிப்பை மையப்படுத்தி அமையவில்லை. மாற்றமாக ஓரிடத்தில் பிறை தென்பட்டால் அப்பிரதேசத்திற்கும் அதனை அண்மித்த பிரதேசங்களுக்கும் மாத்திரம் உரியதா? அல்லது பிறை தென்படாத எல்லாப் பிரதேசங்களுக்கும் உரியதா? என்ற கருத்து வேறுபாடே பிரதானமாக நிலவியது. இதில் ஜும்ஹுர் எனும் பெரும்பாலான அறிஞர்களின் நிலைப்பாடாக இரண்டாம் நிலைப்பாடே இருந்தது. அதாவது ஓரிடத்தில் பிறை தென்பட்டால் அது எல்லா இடங்களுக்கும் உரியது என்ற நிலைப்பாடு. முதலாம் நிலைப்பாடு பெரும்பாலான ஷாபி மத்ஹபினரின் கருத்தாகும். அதாவது ஓரிடத்தில் பிறை கண்டால் அது அண்மித்துள்ள எல்லா பிரதேசங்களுக்கும் உரியதாகும் என்ற நிலைப்பாடு. இமாம் நவவி அவர்கள் ஷாபி மத்ஹபுக்குள்ளே இந்த நிலைப்பாடே மிகவும் சரியானது என்கிறார்(1). ஆனால் ஷாபி மத்ஹபுக்குள்ளே இந்த அண்மித்த பிரதேசத்தை வரையறை செய்வது எவ்வாறு என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. அவற்றில் மிகவும் பிரபலமான கருத்து எது எனின், “ஓரிடத்தில் பிறை தென்படும் போது,  அதே பிறை தென்பட முடியுமான ஏனைய பிரதேசங்கள்” என்பதாகும். இக்கருத்தை ஷாபி மத்ஹபின் பிரபல இமாம்களில் ஒருவரான இமாம் தகிய்யுத்தீன் சுப்கி அவர்கள் ராஜிஹானதாகக் கருதுகிறார்கள்(2). மாத்திரமன்றி இக்கருத்தை பிரயோகத்திற்கு எடுக்கும் போது,  அங்கு கணிப்பீட்டு முறையையும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு நிலமை ஏற்படுகிறது,  ஏனெனில் பிறை தோன்ற முடியுமான ஏனைய பிரதேசங்களை அடையாளம் காண்பது கணிப்பீட்டின் மூலமே சாத்தியப்படுகிறது என்றும் ஆனால் இங்கு கணிப்பீட்டு முறையைப் பயன்படுத்துவதானது கண்களால் பிறையைப் பார்த்தல் என்ற வழிமுறையை முழுமையாக இல்லாமல் செய்து விட மாட்டாது என்றும் விளக்கமளிக்கிறார்கள். (கணிப்பீடு தொடர்பில் இமாம் சுப்கியின் இந்த நிலைப்பாட்டுக்கு ஜம்இய்யதுல் உலமா வருவதே சிறந்தது) இமாம் நவவி அவர்களும் இந்த நிலைப்பாடே சரியானது என்கிறார்கள்(3).
ஓரிடத்தில் பிறை கண்டால் அது,  அதனை அண்மித்த பிரதேசங்களுக்கும் செல்லுபடியாகும் என்ற நிலைப்பாடு உண்மையில் ஷாபி மத்ஹபினருடன் மாத்திரம் மட்டுப்பட்ட ஒரு நிலைப்பாடு அல்ல. மாற்றமாக ஏனைய முன்று மத்ஹபுகளிலும் பலர் இந்த நிலைப்பாட்டைப் பேசியுள்ளமையைக் காணலாம். உதாரணமாக ஹனபி மத்ஹபில் இமாம் இப்னு நுஜைம் அல்மிஸ்ரி,  இமாம் ஸைலஇ,  இமாம் தஹாவி போன்ற பலர் இந்த நிலைப்பாட்டில் இருந்துள்ளனர். அது போல் மாலிகி மத்ஹபில் இமாம் மாலிகினுடைய இரு கருத்துக்களில் ஒன்றாகவும். இமாம் கராபியுடைய கருத்தாகவும் காணப்பட்டிருக்கிறது. ஹன்பலி மத்ஹபில் இமாம் தகிய்யுத் தீன் போன்றவர்கள் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளனர்(4).


மேற்கூறப்பட்ட சட்ட விளக்கங்கள் விரிவான ஆய்வுகளாக முன்வைக்கப்பட வேண்டியவை என்றிருப்பினும் இங்கு முக்கியமாக இது குறித்த கவனயீர்ப்பை ஏற்படுத்துவதுதான் நோக்கம் என்பதாலும்,  விரிவான ஆய்வுகளுக்குரிய இடம் இதுவல்ல என்பதாலும் சுருக்கமாகவே தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன. இங்கு முக்கியமாக ஒரு விடயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இலங்கையில் பொதுவாகவும்,  ஜம்இய்யதுல் உலமாவில் குறிப்பாகவும் ஷாபி சட்டப் பாரம்பரியத்தை மையப்படுத்தியே அதிகமான பத்வாக்களும் மார்க்க நிலைப்பாடுகளும் பெறப்படுகின்றன. அந்தவகையில் ஷாபி சட்டப்பாரம்பரியத்துக்குள்ளே இருந்து கொண்டே மேற்படி பிறை விவகாரத்தில் தற்போது எதிர்கொள்ளும் சிக்கல்களிலிருந்து வெளிவருவதற்கான ஒரு வாயில் இருக்கின்றது என்பதுவே இங்கு சுட்டிக் காட்டப்படும் முக்கிய விடயமாகும்.

மேற்படி விளக்கங்களிலிருந்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கவனத்தில் எடுக்க முடியுமான சில விடயங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது,  உள்நாட்டில் பிறை காண்பதன் மூலமே பிறை பற்றிய தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டு வர வேண்டும்,  அதாவது உள்நாட்டில் மாத்திரம் என்று வரையறுக்காமல் பிறை தென்பட முடியுமான வலையத்தில் அமைந்துள்ள நாடுகளில் ஏதேனும் ஒன்றில் பிறை தென்பட்டால் அது செல்லுபடியாகும் என்ற நிலைப்பாட்டுக்கு வரமுடியும். ஏனெனில் இது இஸ்லாமிய சட்டப் பாரம்பரியத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள ஒரு சிந்தனையாகும் அதிலும் குறிப்பாக ஷாபி மத்ஹபில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் இதுவும் ஷரீஆவுக்குற்பட்டதாகும்.
மேற்குறித்த அடிப்படை மாற்றத்தில் உடன்பாடு எட்டப்படுமாக இருப்பின் அதனையொட்டி நடைபெற முடியுமான இன்னும் சில விடயங்கள் இருக்கின்றன.

முதலாவது,  வெற்றுக் கண்களால் பார்த்தல் என்ற நிலைப்பாடு இல்லாது செய்யப்படத் தேவையில்லை ஆனால் இலங்கையில் உள்ளவர்களது கண்களுக்குப் புலப்பட்டால் மாத்திரம்தான் அது ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நிலைப்பாடு அன்றி,  இலங்கையில் வெற்றுக் கண்களுக்குப் புலப்படக் கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பது வானியல் கணிப்பீட்டின் மூலம் நிரூபிக்கப்படுகின்ற பொழுது,  இலங்கையில் உள்ளவர்கள் காணமுடியாத சூழல் இருந்தாலும் பிறை தென்பட முடியுமான இந்த வலையத்தில் உள்ள ஏதேனும் ஒரு நாட்டில் வெற்றுக் கண்களால் பிறை பார்க்கப்படுகின்ற பொழுது,  அது இலங்கைக்கும் செல்லுபடியாகும் என்ற நிலைப்பாட்டுக்கு வர முடியும்.

இரண்டாவது,  கணிப்பீட்டு முறையை பிறையை மறுப்பதற்கு மாத்திரமன்றி பிறையை ஏற்பதற்கும் பயன்படுத்தல், அதாவது மேற்குறிப்படப்பட்டது போன்று இலங்கை எல்லையினுள் பிறை தென்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றிருப்பின்,  அதற்கு ஒரு பெறுமானம் வழங்கப்படல் வேண்டும். ஏனெனில் இலங்கை எல்லையில் பிறை இருக்கிறது. ஆனால் காண்பதற்கான வாய்ப்பு காலநிலை மாற்றங்களால் இல்லாது இருக்கின்றது. எனவே இலங்கை எல்லையினுள் காண முடியாத போதும்,  குறித்த வலையத்தினுள் பிறை தென்படுமாக இருப்பின் அது கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.
மூன்றாவது,  இலங்கையின் நிலப்பரப்பில் மாத்திரமன்றி கடல் பரப்பிலும் பிறை பார்ப்பதற்கான ஏற்பாடுகளுக்கு வர முடியும். (இது அண்மையில் சில சகோதரர்களால் முன்வைக்கப்பட்ட பயனுள்ள ஒரு ஆலோசணை).

நான்காவது,  மேற்கூறப்பட்ட ஆலோசணைகளை நடைமுறை சாத்தியப்படுத்தும் வகையில் பிராந்தியத்தில் காணப்படும் நாடுகளின் பிறை தொடர்பான விவகாரங்களுக்குப் பொறுப்பாக இருக்கின்ற சபைகளுடன் உத்தியோகபூர்வமான உடன்பாடுகளுக்கு வர முடியும். இங்கு உண்மையில் எல்லா நாடுகளின் சபைகளும் இணைந்து பொது முடிவுகளுக்கு வர வேண்டும் என்பதை விடவும் குறைந்த பட்சம் ஒவ்வோர் நாட்டிலும் காணுகின்ற பிறையையும் அல்லது காணுவதற்கான சாத்தியப்பாட்டையும் ஏனைய நாடுகளுடன் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு ஒழுங்கு இருப்பது கூட போதுமானதாகும். இது நாட்டு சட்டங்களுடன் கூட முரண்படும் ஒரு விடயமல்ல.

ஜந்தாவது,  இவை அனைத்துக்காகவும் ஜம்இய்யதுல் உலமா பல இடங்களில் பலராலும் முன்வைக்கப்பட்டுள்ள ஆலேசணைகளை ஒன்று திரட்டி,  அவை குறித்து கலந்துரையாடுவதற்காக பலதரப்பினரை இணைத்த அமர்வு ஒன்றை விரைவில் ஏற்பாடு செய்வது நல்லது.
இறுதியாக முடிக்கு முன்னர் ஒரு விடயத்தை நினைவுபடுத்திக் கொள்கிறேன். இவ்வருடம் ரமழான் 28ல் நிறைவுறும் வகையில் எங்கேனும் பிறை தென்பட்டால் மறுநாள் நோன்புப் பெருநாள் கொண்டாடும் தீர்மானத்திற்கு வருவதில் எந்தத் தடையுமில்லை என்பதை ஜம்இய்யதுல் உலமாவும் பிறை சம்பந்தப்பட்டவர்களும் தெளிவாக அறிவித்துள்ளனர். இந்த அறிவித்தலின் நடைமுறையை உறுதிப்படுத்தும் வகையில் எதிர்வரும் 14ம் திகதி வியாழக் கிழமை அனைவரும் பிறை பார்க்க வேண்டும் என்ற அறிவித்தலும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படல் வேண்டும். மாத்திரமன்றி அன்றைய தினம் வழமை போன்று பிறை தொடர்பான அனைத்துத் தரப்பினரும் கொழும்பு பெரிய பள்ளிவாயலில் ஒன்று கூடி இது பற்றிய தீர்மானத்தைப் பெற வேண்டும். அந்தத் தீர்மானம் நியாயமான ஆதாரங்களின் அடிப்படையில் எந்த வடிவில் அமைந்தாலும் இலங்கை முஸ்லிம்கள் கட்டுப்படுவதற்கு தயாராகவே இருக்கிறார்கள். அல்லாஹ் எங்களை அங்கீகரிக்கட்டும்.
அடிக்குறிப்புக்கள்

(1). அந்நவவி,  அபூஸகரிய்யா,  முஹ்யுத்தீன் இப்னு ஷரப். கிதாபுல் மஜ்மூஃ ஷரஹுல் முஹத்தப். ஜத்தா,சவூதி அரேபியா: மக்தபதுல் இர்ஷாத். பாகம் 06,  பக்கம் 280,  281.
(2). அஸ்ஸுப்கி,  தகிய்யுத்தீன் அலி இப்னு அப்துல் காபி. (ஹி 1329). கிதாபுல் இல்மில் மன்சூர் பீ இஸ்பாதிஷ் ஷுஹுர். எகிப்து : குர்திஸ்தான் அல்இல்மிய்யா. பக்கம் 14,  15.
(3) மேலது.
(4). அர்ரஹ்மானி,  ஸைபுல்லாஹ் காலித். கழாயா பிக்ஹிய்யா பில் அகல்லிய்யாதில் முஸ்லிமா. இந்தியா: முஅஸ்ஸஸது ஈபா லித்தபஃ வந்நஷர். பக்கம் 69,  70,  71.

11 comments:

  1. ஆக ஒங்கட ஆய்வை வைத்துத்தான் மார்க்கத்த பாதுகாக்கணும் போல............... இப்டியே காலத்துக்கு ஏத்த மாதிரி தொழுகை சோன்பு சகாத் இப்படி எல்லாத்திலயும் கொங்சம் மாத்தினா நல்லா இருக்கம் - நம்மட வசதிக்கு ஏத்தபடி.

    அதையும் கொஞ்சம் ஆராச்சி பண்ணி சொல்லுங்களேன்....... சார்............

    ReplyDelete
  2. The problem is many so called ulama do not read..
    Do not learn; do not do any research to know.
    They are text ridden people ..they know the text without context ..they are literal readers..
    This article should open their mind and hearts to read more on this topic ..to apply any part of Islamic rules into our society ..
    They need to know ..
    Texts; contexts; rationales and how to apply them ..
    So; this article gives some ideas on this ..
    Well written analatical article ..
    I wish ACJU has a team of this kind of Islamic ulama who read the text and context

    ReplyDelete
  3. this article is my opinion also

    ReplyDelete
  4. இதை எல்லாம் புரிந்து கொள்ளும் மனநிலையில், ஜம்மியத்துல் உலமாவுமில்லை , இது மாதரி கருத்து சொல்லும் ஊடக அடியாட்களும் தயாரில்லை = அந்த - கூட்டத்திடம் உள்ள தலைமை பதவியை பாதுகாக்க வேண்டும் , அடிதடியில் தானே பதவியே பிடித்து கொண்டது சரித்திரம் , பிறை என்றாலே இந்த சபைக்கு அலர்ஜி . வேற்றுமையில் ஒற்றுமை , மற்றவர்க்கு தான் , இவர்கள் அதற்கு தயாரில்லை , சமத்- சொன்ன குறிப்புகள் அவர்களால் விளங்கி கொள்வதே சிரமம் பதவி பறி போய்விடுமோ என்ற பயம் -மார்க்கத்தில் எல்லாத்தியும் மாற்ற எந்த மடையன் சொன்னான்

    ReplyDelete
  5. "எனது தனிப்பட்ட கருத்தின்படி கணிப்பீட்டு முறை தான் மிகவும் சரியான ஷரீஅத் முடிவு" என்ற உங்கள் கருத்து "صوموا لرؤيته وأفطرا ارؤيته" என்ற ஆதார பூர்வமான நபிமொழிக்கும் சஹீஹ் முஸ்லிமில் வரும் குரைப் மற்றும் இப்னு அப்பாஸ் ரலி அவர்களின் அறிவித்தலுக்கும் நேர் முரன் இல்லையா? நோன்பு விடயத்தில் பிறை இருக்கா இல்லையா என்ரு தீர்மானிப்பதல்ல முக்கியம், பிறை கண்னுக்குத் தெரிந்தால் நோன்பு பிடியுங்கள், பிறை இருந்தும் மேகத்தால் மறைக்கப்படடு தெரியாவிட்டால் பிடிக்காதீர்கள் என்பதுதான் முக்கியம். மற்றப்படி very good atticle.

    ReplyDelete
  6. Best explanation. ACJU Need to arrange needful discussion including all categories

    ReplyDelete
  7. Very good analysis. If we can use loudspeakers to say adhan and for other Islamic activities, then why can't we use telescopes to confirm the new moon? I think even Saudis use it.

    ReplyDelete
  8. நவீன ஊடகங்கள் கண்டுபிடிக்கப்பட முன்னர் ஒரு சட்டமும், நவீன ஊடகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் ஒரு சட்டமா? இதற்கு அல்குர்ஆனிலோ, அல்ஹதீஸிலோ ஆதாரம் இருக்கா? குழப்பக்கூடிய ஆய்வுகளை வெளியிடாமல் இருப்பதே சிறந்தது.

    ReplyDelete
  9. அல்ஹம்துலில்லாஹ்! இந்த கட்டுரையாளரின் கருத்து வரவேற்கத்தக்கது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக அ.இ.ஜ.உ., கொழும்பு பொிய பள்ளிவாசல், பிறை குழு மற்றும் மார்க்க அறிஞர்கள் கவனத்தில் கொள்வது சிறந்தது. இவர் சர்வதேச பிறை பற்றி கூறவில்லை, மாறாக பிராந்தியம் சார்பான கருத்தை முன்வைக்கின்றார். இஸ்லாம் முழு உலகத்திற்கும் பொதுவானது. தொடர்ச்சியாக பல மாதங்களுக்கு பணி மூட்டம் கொண்ட காலநிலையைக் கொண்ட பல நாடுகள் பிராந்தியத்திலுள்ள/அண்மித்த நாடுகளின் பிறை கணிப்பீட்டின் படி தமது நாட்டின் பிறை சார்ந்த விடயங்களை தீர்மானிக்கின்றனரே தவிர, (ஹதீஸுக்கு முரண்படாத வகையில்) முந்திய மாதத்தை முப்பது முப்பதாக பூர்த்தி செய்து இஸ்லாமிய கலண்டரில் அவர்கள் பின்தங்கி இருப்பதில்லை. தெட்டத்தெளிவாக பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் தலைப்பிறை தென்பட்டதன் பின்பு நாம் முந்திய மாதத்தை "பூரணப்படுத்துதல்" என்ற விடயத்தை சம்பந்தபட்டவர்கள் கொஞ்சம் சிந்தித்துப்பார்ப்பார்களா? பணி மூட்டம் போல் மழை மேக காலநிலை என்பது இப்போது இலங்கையில் தொடர்ச்சியாக நிகழ்வதன் அடிப்படையில் எதிர்வரும் காலங்களிலாவது (துல் ஹிஜ்ஜா பிறை சம்பந்தமாக) இக் கட்டுரையாளரின் கருத்தின்படி செயற்படுவார்களாயின் பல சிக்கல்களை தவிர்க்கலாம். அல்லாஹ் நம் எல்லோரின் முயற்சிகளையும் பொருந்திக்கொள்வானாக.

    ReplyDelete

Powered by Blogger.