Header Ads



புதிய முறையில் மாகாண தேர்தல், நடத்தப்பட்டால் மிகவும் ஆபத்தானது

நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் மூலம் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் சிறுபான்மை சமூகங்களுக்கு மிகவும் ஆபத்தானது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

தெல்தோட்டை, முஸ்லிம் கொலனி மஸ்ஜிதுல் இலாஹி பள்ளிவாசலில் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார். அங்கு பேசிய அவர்,

இந்த வருடம் செப்டம்பர் மாதம் தற்போது இருக்கின்ற மாகாண சபையும் பெரும்பாலும் கலைக்கப்பட்டுவிடும். மாகாண சபை தேர்தல்கள் பற்றிய பேச்சுக்கள் நடக்கின்றன.

அந்தத் தேர்தலையும் புதிய தொகுதி அடிப்படையில் நடத்த வேண்டுமென்று நாடாளுமன்றத்தில் திருத்தம் கொண்டு வந்திருந்தாலும், அந்த திருத்தம் சிறுபான்மை சமூகங்களுக்கு மிகவும் ஆபத்தானது.

தேர்தல் தொகுதி நிர்ணயம் செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்பு முஸ்லிம்களுக்கான தொகுதிகள் போதியளவு நிர்ணயிக்கப்படுவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன என்பதை அறிந்தவர்களாக நாங்கள் அரசாங்கத்திற்கு பலத்த அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றோம்.

அதை மாற்றியமைக்க வேண்டும் என்பது சம்பந்தமாக நேற்று பிரதமரோடு நடந்த சந்திப்பில் நாங்கள் கடுமையாக வலியுறுத்தியிருக்கின்றோம். அதை வாபஸ் பெற்று பழைய தேர்தல் முறைக்கு மீண்டும் போக வேண்டும் என்றும் வலியுறுத்திப் பேசியிருக்கின்றோம்.

இந்த புதிய தேர்தல் முறையிலும், பழைய தேர்தல் முறையிலும் சில சந்தர்ப்பங்களில் நான்கு முஸ்லிம் உறுப்பினர்களை பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருந்தன.

ஆனால் வட்டார முறையில் தெரிவு நடக்கின்றபோது இந்த எங்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்றொரு அச்சம் இருந்தது.

ஆயினும், பல்வேறு கட்சிகளினூடாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐந்து உறுப்பினர்களைப் பெற்றிருக்கின்றது. இந்த புதிய தேர்தல் முறையிலும்கூட இந்த பகுதிக்கான உறுப்பினர்களை பெறுகின்ற வாய்ப்பு எங்களுக்கு கிட்டியுள்ளது.

இருந்தபோதிலும், வட்டாரங்களை நாங்கள் நிர்ணயிக்கின்ற முறையில் எங்களுக்கான போதிய வட்டாரங்கள் கிடைக்காமையில் குறைபாடுகள் எங்களுக்கு இருந்து வந்திருக்கின்றது.

வட்டார அடிப்படையிலான உறுப்பினர்களின் தெரிவு, பட்டியல் உறுப்பினர்களின் தெரிவை விடவும் முக்கியமானது என்ற அடிப்படையில் அது சம்பந்தமான குறைபாடுகள் இருந்து வருகின்றது. அந்த போராட்டங்களை நாங்கள் தொடர்ந்தும் மேற்கொண்டு வந்துகொண்டிருகின்றோம். இது சம்பந்தமான மீண்டும் ஒரு மீள்நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.