Header Ads



'நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் முன்மாதிரியை பின்பற்றும் சிப்லி பாறூக் - அஷ்சஷெய்க் சபீல் பாராட்டு

“நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் முன்மாதிரியான அரசியல் நடை முறைகளை ஏனைய மக்கள் பிரதிநிதிகள் சிலரும் அமுல்படுத்துவதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியளிக்கிறது.

அந்த வகையில், நாம் நீண்ட காலமாக நாம் நடைமுறைப்படுத்தி வருவதைப் போலவே,  தனக்குக் கிடைத்த நகரசபைக் கொடுப்பனவை சொந்தமாக்கிக் கொள்ளாமல் நகரசபை நிதிக்கே மீண்டும் ஒப்படைத்த பொறியியலாளர் சிப்லி பாறூக்கின் நடவடிக்கையை நான் பாராட்டுகின்றேன். கடந்த 12 வருடங்களாக இது போன்ற பல முன்மாதிரிகளை கொள்கையாகவும் நடமுறையாகவும் கொண்டுள்ள எமது கட்சி ஏனையோர்களும் இது போன்று முன்மாதுரியாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றது.” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் ஸ்தாபக உறுப்பினரும்  முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான  அஷ்சஷெய்க் சபீல் நழீமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

“அரசியல் என்பது மக்களுக்கானதாகும். அரசியலில் கிடைக்கும் பதவிகள் அமானிதமாகவே வழங்கப்படுகின்றன. அதனைப் பயன்படுத்தி சொந்த இலாபங்களையோ அல்லது சொந்த அனுபவிப்புக்களையோ செய்வதனை அனுமதிக்க முடியாது. முழுக்க முழுக்க மக்கள் நலனுக்காக மாத்திரமே அரசியல் அதிகாரம் பாவிக்கப்பட வேண்டும் என்பதனை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கொள்கையாகக் கொண்டுள்ளது. துஸ்பிரயோகங்களும் ஊழல் மோசடிகளும் நிறைந்த அரசியல் சூழ்நிலையில் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றால் இது போன்ற முற்போக்கான கொள்கைகள் அமுல்படுத்தப்பட வேண்டும். அந்த  வகையில் பல முன்மாதிரியான நடை முறைகளை NFGG அமுல்படுத்தி வருகின்றது.

மக்கள் பிரதி நிதிகளாக பதவி வகிப்பவர்கள் அப்பதவி மூலம் கிடைக்கும் கொடுப்பனவுகளையோ அல்லது ஏனைய சலுகைகளையோ சொந்த இலாபமாக மாற்ற முடியாது என்பதும் அவை அனைத்தும் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதும் NFGG யின் அடிப்படைக் கொள்கையாகும்.

2006 இல் எமது கட்சி ஆரம்பிக்கப்பட்டது முதல் இந்தக் கொள்கை இன்று வரை அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. காத்தான்குடி நகர சபையில் ஆரம்பத்தில் ஒரு பிரதிநிதியும் அதன் பின்னர் இருவரும் தற்போது நான்கு பிரதிநிதிகளும் என NFGG பிரதிநிதிகள் காணப்படுகின்றனர். இவர்கள் எவரும் தமக்குக் கிடைக்கும் கொடுப்பனவுகள் எதனையும் சொந்தமாக எடுத்துக் கொள்வதில்லை. அவை  கட்சியின் தீரமானத்திற்கமைவாக பொது நலன்களுக்காகவே   செலவு செய்யப்படுகின்றன.

கடந்த நகர சபைக் காலத்தில் மானிய அடிப்படையில் உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. காத்தான்குடி நகர சபையின் சகல உறுப்பினர்களும் அவற்றை சொந்தமாக்கிக் கொண்டனர்.  ஆனாலும்,  NFGG பிரதிநிதிகள் மாத்திரம் அவ்வாறு செய்யவில்லை. தமது சொந்தப் பணத்தையும் செலவழித்தே அந்த மோட்டார் சைக்கிள்களை அவர்கள் பெற்றுக் கொண்டிருந்த போதிலும்,  கட்சியின் கொள்கைக்கு அமைவாக கட்சியிடமே அவற்றை ஒப்படைத்தனர். தற்போது 18 உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ள NFGG இதே முன்மாதிரியையே சகல இடங்களிலும் அமுல்படுத்தி வருகின்றது.

முஸ்லிம் சமூகத்தில் இது போன்ற முன்மாதிரிகளைக் கொண்ட ஒரே கட்சி NFGG மாத்திரமே என்பது பெருமைக்குரியதாகும். இந்நிலையில்,பொறியியலாளர் சிப்லி பாறூக் அவர்களும் இந்த முன்மாதிரிகளை நடைமுறைப்படுத்துவதானது  வரவேற்புக்குரியதாகும்.

அவர் சாந்திருக்கும் கட்சி இது போன்ற  சிறந்த முன்மாதிரி நடைமுறைகளை  கொண்டிராத கட்சியாக இருந்தாலும் தாமாக முன்வந்து அவர் இதனை  செயற்படுத்துவதை நான் பாராட்டுகின்றேன்.இன்னும் பலரும் இது போன்ற விடயங்களை செய்ய முன்வர வேண்டும்”

No comments

Powered by Blogger.