Header Ads



அரசியல் அழுத்தங்களினால், ஞானசாரருக்கு பிணை கிடைத்ததா..?

நீதிமன்றத்தில் வைத்து ஊடகவியலாளர் எக்னலிகொடவின் மனைவியை அவமதித்தது தொடர்பில் குற்றவாளியாகக் கருதப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் சிறையில் விஷேடமாகக் கவனிக்கப்பட வேண்டுமென பல பௌத்த அமைப்புக்களும் சிவில் அமைப்புக்களும் கோரிக்கை விடுத்து வந்தன. மேலும் அவரது விடுதலையையும் கோரி பல இடங்களில் சத்யாக்கிரக போராட்டம், கையெழுத்து வேட்டை, பேரணிகள் நடைபெற்ற நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி யூ.ஆர். டி சில்வா இது தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்தின்படி, சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் அது வரை மேன்முறையீடு செய்யாதவராக இருந்தால் அவருக்கு சிறைச்சாலையில் ஜம்பர் அணிவிக்கப்படும்.  அதிலிருந்து அவருக்கான தண்டனை ஆரம்பமாகும்.  மேன்முறையீட்டுக்கு விண்ணப்பித்து அது தொடர்பான அறிவித்தல் சிறைச்சாலைக்கு வரும் வரை அவர் ஜம்பர் அணியத்தான் வேண்டும். மேன்முறையீடு செய்த கைதியொருவர் சாதாரண ஆடை அணியலாம்.  இவரை வாரத்துக்கொரு முறை பார்வையிடலாம். ஆனால் ஜம்பர் அணிந்த கைதியை மாதத்துக்கு ஒருமுறையே பார்வையிட முடியும். இவ்வாறு ஜம்பர் அணியும் பௌத்த பிக்குகள் 15 பேர் சிறையிலிருக்கிறார்கள். இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களைச் சேர்ந்த மதகுருக்களும் ஒவ்வொருவர் இருக்கிறார்கள். மொத்தமாக 18 மத குருக்கள் சிறையில் ஜம்பர் அணிந்து தான் இருக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடும் போது, பௌத்த பிக்குகள் ஜம்பருடன் சிறைவாசம் அனுபவித்தது இது முதல் தடவையல்ல. பிரதமர் பண்டாரநாயக்கவை கொலை செய்த தல்துவே சோமாராம ஹிமி பின்னர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிக் கொண்டார்.  புத்தரக்கித்த ஹிமி காவியுடையைக் களைந்து ஜம்பர் அணிந்தார். யாரும் அப்போது பிரச்சினைப்படுத்தவில்லை. சிறையில் மத ஆடைகளை அணிய முடியாது. எல்லா சிறைக்கைதிகளும் சமனாகவே கருதப்படுவர் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை ஷ்யாமோபாலி வங்சிக மகா நிகாயவின் கோட்டே ஸ்ரீகல்யாணி சாமஷ்ரீ தர்ம சபாவின் பேராசிரியர் கொட்டபிட்டியே ராஹுல ஹிமிக்கு நீதியமைச்சர் தலதா அதுகோரல அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், பௌத்த மதத்தில் காவியுடையைக் களைவதற்கெனக் குறிப்பிடப்பட்டுள்ள சந்தர்ப்பங்களுக்கும் நாட்டின் சட்டத்துக்கும் அமையவே ஞானசார தேரோவுக்கு ஜம்பர் அணிவிக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அரசியல் அழுத்தங்கள் காரணமாக நீதித்துறை ஞானசார தேரர் விடயத்தில் பிணை வழங்கியதா? என்ற கேள்விகளுடன் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.