Header Ads



ஜவஹர் பின், முத்துப்பாண்டியனின் கவலை

நான் ஜவஹர் கடந்த இரண்டு வருடமாக ஒவ்வொரு பெருநாளிலும் மனதை உறுத்திய, வெளியில் சொல்ல வேண்டும் என நினைத்து பின்னர் வேண்டாம் என்று மனதை தேத்திக்கொண்ட ஒரு விஷயத்தை இப்போது கூறுகிறேன்...

ரமலான் மாதம், பெருநாள் தினம். ஒவ்வொரு முஸ்லிமும் இனம்புரியா இன்பத்தில் திளைக்கும் நாள்.பேசாத வாயும் அன்று பேசும்,உடுத்தாத உடையும் அன்று உடுத்தப்படும்,காணாத சொந்தங்களை அன்று காண முடியும்,

தொழாத உள்ளமும் அன்று தொழுகைக்கு வரும் அற்புதமான நாள் அது.தொழுகை முடிந்ததும் முகத்தில் புன்னகை மிளிரும்.சிரிப்பு சத்தம் மட்டுமே காதில் விழும்.தொழுகை திடலே இன்பத்தில் ஜொலிக்கும்...

ஆனால் எனக்கோ அன்றைய தினம் மட்டும் உள்ளத்தில் ஓர் வருத்தம்.

தொழுகை முடிந்ததும் திரும்பி பார்த்தால் ஒவ்வொருவரும் தன் குடும்பத்துடன் கொண்டாட்டம்.நானோ தனி மரம்.அனைத்து சொந்தங்களும் இருந்தும் அனாதையாய் திடலில் நிற்கிறேன்...

திடலுக்குள் நுழையும் போதும் அனைவரும் கூட்டாக நுழைகின்றனர்.

வெளியேறும் போதும் கூட்டமாக வெளியேறுகின்றனர். நானோ வீட்டிலிருந்து தனியாக வருகிறேன். தனியாகவே வெளியேறுகிறேன்...

அந்த தனிமையை மறக்க நண்பர்களோடு உரையாடுகிறேன்.

மகிழ்ச்சியாக இருப்பது போல் காட்டிக் கொள்கிறேன்...

அனைவருக்கும் பூக்களமாக தெரிந்த தொழுகைத் திடல், எனக்கு மட்டும் ஏனோ ஆளில்லா மைதானமாக தெரிந்தது...

அனைவரும் குடும்பத்துடன் சென்று ஆடை எடுக்கும்போது, நான் மட்டும் தனியாக சென்று ஆடை எடுத்தேன்.

"இந்த ஆடை நல்லாருக்கும்'' என்று பார்த்து சொல்ல கூட ஆளில்லை.

அனைவரும் ஒன்றாக சமைத்து, அமர்ந்து உண்ணும்போது, நான் மட்டும் முஸ்லீம் ஹோட்டலை தேடி அலைகிறேன்...

நான் இஸ்லாத்தை ஏற்று இத்துடன் மூன்று வருடங்கள் ஆகிவிட்டது.

ஆறு பெருநாட்களை கடந்துவிட்டேன்.

ஆனால், ஒரு பெருநாளில் கூட கலக்கத்துடன் இந்த கவலையை அடையாமல் நான் இருந்ததில்லை.

அதனாலோ என்னவோ பெருநாள் தினம் எனக்கு விசேஷமாக தெரியாமல் போனது...

நான் யாரையும் பார்த்து பொறாமை படவுமில்லை. என்னை ஒப்பிடவும் இல்லை.இஸ்லாத்தை ஏற்ற பின்பு என்னுடைய தவறான அறியாமை கொள்கையை மட்டும்தான் விட்டுவந்தேன் என நினைத்தேன்.

ஆனால், நான் என்னவெல்லாம் இழந்திருக்கிறேன் என நினைவுபடுத்தக்கூடிய நாளாக பெருநாள் தினம் அமைந்துவிட்டது.

இறைவனின் நாட்டம்.

நான் நன்கு அறிவேன், அல்லாஹ் மனிதர்களிடையே காலத்தை சுழலவிடுகிறான், என்னுடைய சூழ்நிலையும் நிரந்தரம் அல்ல. நிச்சயம் சுழலும் என்று...ஆனால், ஒருவேளை இன்றே நான் மரணித்தால் அனைத்து முஸ்லிம்களுக்கும் சகஜமாய் கிடைக்கக்கூடிய ஜனாஸா தொழுகைகூட எனக்கு கிடைக்காது தானே..!

ஒவ்வொரு பெருநாள் தொழுகையிலும் "அல்லாஹ்..! என்னுடைய இந்த நிலையை அடுத்த பெருநாளைக்கும் உண்டாக்கிவிடாதே." என்று கேட்க்கும்போது என் கண்கள் கலங்காமல் இருந்ததில்லை...
இறுதியாக சொல்கிறேன்...

என் அருமை முஸ்லிம்களே..!

உங்களுக்கு கிடைத்துள்ள குடும்பத்தாரும், சொந்தமும், பந்தமும் அல்லாஹ் உங்களுக்கு செய்த அருள்.

அவற்றை எக்காரணம் கொண்டும் வெறுத்தோ, ஒதுக்கியோ விடாதீர்கள்.

ஏனென்றால், அவற்றிற்காக நான் ஏங்கிய நாட்கள் பல.

யாருடைய மனதையும் காயப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் இதை பதியவில்லை. கடந்த மூன்று வருடமாக வெளியில் சொல்லவேண்டாம் என நினைத்தேன். இன்று ஏனோ மனதில் உள்ளதை கொட்டிவிட்டேன். ஏதேனும் தவறு இருந்தால் அல்லாஹ்விற்காக மன்னித்துக் கொள்ளுங்கள்...

நான் உங்களிடத்தில் ஒன்றை மட்டும் சொல்ல ஆசைபடுகின்றேன் ஒரு வேளை நான் என்றாவது ஒரு நாள் அல்லாஹ்வின் நாட்டப்படி மரணித்தால் நான் உங்களிடம் வேண்டுவது எல்லாம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியது போல் அல்லாஹ்விற்கு இணைவைக்காத ஒர் ஏகாத்துவவாதி மரணித்தால் அவனுக்குகாக நூறு ஏகாத்துவ சொந்தங்கள் பாவமன்னிப்பு தேடினால் அல்லாஹ் அந்த அடியானின் பாவத்தை மன்னிக்காமல் இருந்தது இல்லை அதன் அடிப்படையில் இன்று தனிஆளாய் இருக்கும் உங்கள் சகோதருக்காக நாளை என்னுடைய ஜனாஸா முன் நின்று எனக்காக நீங்கள் பாவமன்னிப்பு தேட வேண்டும் என்பதை மட்டும் தான் உங்களிடத்தில் எதிர்பார்க்கின்றேன் மேலும் எனக்கு எத்தனை கவலைகள் இருந்த போதிலும் இந்த திருகுர்ஆன் வசனம் மட்டும் தான் என்னுடைய ஒவ்வொரு பெருநாள் தொழுகையில் நான் கண்ணீருக்கு அருமருந்தாக அமைகின்றது....
إِلَّا تَنصُرُوهُ فَقَدْ نَصَرَهُ اللَّهُ إِذْ أَخْرَجَهُ الَّذِينَ كَفَرُوا ثَانِيَ اثْنَيْنِ إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا ۖ فَأَنزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَيْهِ وَأَيَّدَهُ بِجُنُودٍ لَّمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِينَ كَفَرُوا السُّفْلَىٰ ۗ وَكَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا ۗ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ

40. நீங்கள் இவருக்கு (முஹம்மதுக்கு) உதவி செய்யாவிட்டாலும் (ஏகஇறைவனை) மறுப்போர் இவரை இருவரில் ஒருவராக வெளியேற்றிய போதும், அவ்விருவரும் அக்குகையில் இருந்த போதும், "நீர் கவலைப்படாதீர்! அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்'' என்று அவர் தமது தோழரிடம் கூறிய போதும் அவருக்கு அல்லாஹ் உதவியிருக்கிறான். தனது அமைதியை அவர் மீது இறக்கினான். நீங்கள் பார்க்காத படைகளின் மூலம் அவரைப் பலப்படுத்தினான். (தன்னை) மறுப்போரின் கொள்கையைத் தாழ்ந்ததாக அவன் ஆக்கினான். அல்லாஹ்வின் கொள்கையே உயர்ந்தது. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். திருக்குர்ஆன் 9:40

அல்லாஹ் எங்களுடன் இருக்கின்றேன் அல்லாஹ் எங்களுக்கு போதுமானவன்....

இப்படிக்கு
உங்கள் கொள்கை சகோதரன்
ஜவஹர் பின் முத்துபாண்டியன்
திண்டுக்கல் நகர கிளை
--------------------------------------------------
நமது தாய் தந்தையர் இஸ்லாமியராக இருந்ததால் நாம் கேட்காமலேயே இஸ்லாமிய வாழ்வு முறை நமக்கு கிடைத்து விட்டது. ஆனால் முத்து பாண்டியன் போன்ற சகோதரர்கள் தங்கள் நெருங்கிய உறவினர்களை உதறி விட்டு இந்த இஸ்லாமிய மார்க்கத்தை தேர்ந்தெடுத்துள்ளார். சொந்தங்களின் பிரிவு எந்த அளவு அவரை தாக்கியுள்ளது என்பதை அவரது எழுத்து நமக்கு அறிவிக்கிறது. இந்த சகோதரருக்கு இவரது மனம் போல் நல்ல சொந்தங்கள் அமைய பிரார்த்திப்போம். நாமும் சொந்தங்களை அரவணைத்து வாழ்வோம்.

2 comments:

  1. In sha allah... It is our moral responsibility of respecting them...

    ReplyDelete
  2. சகோதரரே திருமணம் செய்து கொள்ளுங்கள் நிச்சயம் அதில் உங்களுக்கு சொந்தங்கள் வந்து சேரும்

    ReplyDelete

Powered by Blogger.