June 02, 2018

எங்களுடன் கூட்டணியைத் தொடர்வதே, ஜனாதிபதிக்கு பாதுகாப்பானது - ரணில்

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் துண்டுதலினால் தான் கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் தீவிரமாக களமிறங்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை கொழும்பு அரசியலை பரபரப்பாக்கியது. பதவியேற்ற மறுநாளே தான் நாடாளுமன்றத்தைக் கலைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, நூறுநாள் வேலைத்திட்டம் என்பது மடத்தனமானது என்றும் கடுமையாகப் பேசியிருந்தார்.

இந்நிலையில், இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் ஆராயப்பட்டது. அதுமாத்திரமன்றி, ஜனாதிபதியின் கருத்துக்கு பதில் கருத்தினை எவரும் வழங்க வேண்டாம் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கட்சி உறுப்பினரிடம் வலியுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து நேற்றைய தினம் அலரிமாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் வழங்கிய பிரதமர் ரணில், தங்களுடனான கூட்டணியைத் தொடர்வதே ஜனாதிபதிக்கு அரசியல் ரீதியில் பாதுகாப்பான அணுகுமுறையாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைந்து தனது எதிர்கால அரசியலை முன்னெடுக்கும் யோசணையை கொண்டிருப்பதாக தெரிகின்றது.

ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைத்துக் கொள்வதிலும் ஜனாதிபதி நாட்டம் காட்டுகின்றார் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இவ்வாறு அவர் செய்வாரேயானால், அது அவருக்கு பாதகமானதாகவே முடியும்.

கோத்தபாய ராஜபக்ஷ தீவிரமான பிரசாரங்களில் இறங்கியிருக்கின்றார். களத்தில் அவரது பிரவேசத்தை பருவம் முந்தியதாகவே நான் கருதுகின்றேன். அவர் இவ்வாறு செய்வதற்கு பிரதான காரணம் அவரது இளைய சகோதரர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் துண்டுதலாகும் என்று நம்புகின்றேன்.

ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்தவரை அது எமக்கு எவ்விதத்திலும் பிரச்சினையில்லை. நாட்டுமக்கள் ஒரு மாற்றத்தை விரும்பியே எம்மை தெரிவு செய்தார்கள். அந்த மக்களின் எதிர்ப்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு எம்மை அர்ப்பணிப்பதே அவசியமானது. இதற்காகவே 18 மாதகால திட்டவியூகம் வகுத்திருக்கின்றோம்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காலஞ்சென்ற மாதுளுவாவே சோபித தேரரின் நினைவுதின வைபத்தில் பேசியது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரதமர், ஜனாதிபதி தன்னைப்பற்றியே கூடுதலாக விமர்சித்திருந்தமை குறித்து தனது விசனத்தை வெளிப்படுத்தினார் என தெரிகிறது.

எனினும் அந்த விமர்சனங்களுக்கு பதிலளித்து காலத்தை வீணாக்க விரும்பவில்லை என்றும் 2020 வெற்றி இலக்கை மையப்படுத்திய 18 மாதகால திட்டவியூகம் வகுக்கப்பட்டிருப்பதால் அதற்காக நாம் எல்லோரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியதே இன்று முக்கியமானது என்றும் குறிப்பிட்டதாக பிரதமரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

2 கருத்துரைகள்:

Both of them (My3 & Ranil) had a good opportunity to build and develop the country. However, they have failed in all aspects.

Maithree is depending on 16 defected Parliamentarians who had lost their political future. Most of them were not elected last time but entered Parliament through National List. President should listen to Ranil and contest again as a UNP candidate. The victory of Rajapakse is certain. If he wins , Maithree will be roped in many cases. UNP will salvage him and help him to regain his post.

Post a Comment