Header Ads



சு.க.யின் முக்கிய கூட்டம் நாளை - நடக்கப்போவது என்ன..?

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய குழு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது.

கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்ற மத்திய குழுக் கூட்டத்தில் நாளை விசேட மத்திய குழுக் கூட்டத்தை நடத்தி புதிய நிர்வாகக் குழுவை அமைக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, கட்சியில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளும் வகையில், புதிய நிர்வாகக் குழு நாளை நியமிக்கப்படவுள்ளது.

இந்த நிர்வாகக் குழு நியமனம் குறித்து சுதந்திரக் கட்சியினரிடையே மட்டுமன்றி, எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளிடையேயும் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

16 பேர் கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அதிருப்திக்குழு அரசாங்கத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

கட்சியின் மீதும், நாட்டின் மீதும் அன்பு செலுத்துபவர்களுக்கு புதிய நிர்வாகக் குழுவில் அங்கத்துவம் வழங்க வேண்டும் என்று அவர்கள் சார்பில் அண்மையில் கோரிக்கை விடுவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவை அந்தப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று அதிருப்தி குழுவினர் முன்னதாக வலியுறுத்தியிருந்தனர்.

இதேநேரம், கட்சியின் புதிய நிர்வாகக் குழு தொடர்பில் அவர்கள் தரப்பில் மேலும் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நாளை தினம் கட்சியை மறுசீரமைக்கும் நோகக்கில் கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவ்வாறான தீர்மானத்தை எடுப்பார் என்பது கொழும்பு அரசியலில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிருப்தி குழுவினருக்கு கட்சியின் நிர்வாகக் குழுவில் எவ்வாறான பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.