Header Ads



முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பை, கோட்டாபய தடுத்துநிறுத்தினார் - ஞானசாரர் புகழாரம்

கோட்டாபய ராஜபக்ஷ என்பவர் ஒரு விடயத்தை  இலகுவாக புரிந்துகொள்ளக் கூடிய ஒருவர். அதனைச் செயற்படுத்த முடியுமான ஒருவர்.  இதனால், அவர் மீது எமக்கு அதீத நம்பிக்கை இருந்தது என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

நேற்று (25) நள்ளிரவு தனியார் தொலைக்காட்சி சேவையொன்றில் இடம்பெற்ற நேரடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இதனைக் கூறினார்.

முஸ்லிம் அடிப்படைவாதிகள் தொடர்பிலும், இந்த நாட்டை ஆக்கிரமிக்க அவர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைள் குறித்தும்  நாம் உண்மைகளை வெளிக் கொண்டுவந்தபோது அவற்றை சிறந்த முறையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் புரிந்துகொண்டார்.

இதனடியாக ஏனைய இன குழுக்களிடையே நாட்டில் ஏற்பட்ட பதற்ற நிலைமையை  அணைப்பதற்கு  நடவடிக்கை எடுத்தார். சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் ஒரே மேசையில் அமரச் செய்தார். இவர் மாத்திரம் தான் இந்த மத்தியஸ்தத்தை முன்னெடுத்தார்.

உலமா சபையையும், எம்மையும் பாதுகாப்பு அமைச்சுக்கு அழைத்து கலந்துரையாடினார். இருதரப்பினரதும் பிரச்சினைகளைக் கூறுமாறு கூறினார். பின்னர் அது குறித்து அவர் கலந்துரையாடினார்.

இதன்போது அவர் முடிவாக ஒன்றைக் கூறினார். இந்த நாடு 30 வருட யுத்தமொன்றை முடித்து விட்டு இப்போதுதான் மூச்சுவிட ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் இன்னுமொரு இரத்தம் ஓட்டும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டாம். தயவு செய்து இதனை கலந்துரையாடி முடிவுக்கு கொண்டு வர உதவுங்கள் என தெளிவாக அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இவர் மாத்திரம் தான் இப்பிரச்சினையைப் புரிந்துகொண்டு தீர்வு காண நடவடிக்கை எடுத்தார். ஏனைய அரசியல் தரப்பினர் சகலரும் இது போன்ற பிரச்சினைகளின் போது அரசியல் லாபம் அடைய முயற்சித்தனர். அல்லது அரசியல் லாபங்களை அடைந்துகொள்வதற்காக ஒவ்வொரு இடத்திலும் பிரச்சினைகளை உருவாக்கினர் எனவும் தேரர் மேலும் கூறினார். 

2

அரசியலில் தான் ஒருபோதும் ஈடுபட மாட்டேன் எனவும், இதனை நான் இந்த நாட்டு மக்களிடமும், விசேடமாக மகா சங்கத்தினரிடமும் இந்த நள்ளிரவில் வைத்து ஒரு வாக்குறுதியாக கூறிக் கொள்கின்றேன் எனவும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் தாங்கள் எந்தவொரு கட்சிக்கும் சார்பாக, எந்தவொரு கருத்தையும் வெளியிடும் நடவடிக்கையிலும் கலந்துகொள்ள மாட்டீர்கள் என்பதா? என தேரரிடம் நேர்காணலை நடாத்திய ஊடகவியலாளர் வினவினார்.

அரசியலில் ஈடுபட்டு ஒரு கட்சியின் வாக்குப் பலத்தை உடைப்பது தேரராக இருந்து செய்ய முடியுமான ஒரு நடவடிக்கை அல்ல என தேரர் பதிலளித்தார்.
தங்களுக்கு இராஜயோகம் ஒன்று இருப்பதாக தங்களது அமைப்பின் தேரர் ஒருவரே கூறியிருந்தார் என தேரரிடம் ஊடகவியலாளர் கூறிய போது,

ஒரு விகாரையின் விகாராதிபதியாக வருவதும் இராஜயோகம் தான். பாடசாலையின் அதிபராக வருவதும் இராஜயோகம்தான். இருப்பினும், அரசியல் எமக்குரிய இடமல்ல என்பதை நான் உறுதியாக நம்புகின்றேன்.

நாம் அரசியல் வாதிகளுக்கு சமமாக இருக்கக் கூடியவர்கள் அல்லர். மாறாக, அரசியல்வாதிகளுக்கு ஆலோசகர்களாகவே இருக்க வேண்டும். எமக்கு அரசியல்வாதிகளுடன் கலந்துரையாட எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன.

இந்த நாட்டின் கல்வி, சுகாதாரம், கலாசாரம் என்பன வீழ்ச்சியடைந்துள்ளன. மனிதர்களுக்கு இந்த நாடும் அரசியலும் வேண்டாத ஒன்றாக மாறியுள்ளது. சந்தர்ப்பம் கிடைக்கும் போது இந்த நாட்டை விட்டும் செல்வதற்கு மக்கள் தயாராகவுள்ளனர். ஒரு தொகு மக்கள் உண்ணும்போது, இன்னுமொரு தொகுதி மக்கள் உண்ண வழியில்லாதிருக்கின்றனர். அனைத்தும் மாறியுள்ளன. இவற்றுக்கே நாம் தீர்வு தேட வேண்டியுள்ளோம்.
தேரர்கள் என்ற வகையில், நாம் ஆன்மீக ரீதியிலான தலைமைத்துவத்தை வழங்க வேண்டியவர்கள் எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார். 

3

அளுத்கமையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைத்திருந்தால், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இடம்பெற்ற பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

அளுத்கமையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு கடந்த அரசாங்கத்துக்கும் நாம் கூறினோம், இந்த அரசாங்கத்திடமும் கூறுகின்றோம். ஆனால், யாரும் அதனை நடைமுறைப்படுத்த  இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் தேரர் சுட்டிக்காட்டினார்.

அளுத்கமையைத் தொடர்ந்து, கிந்தொட்டைப் பிரச்சினை, தெல்தெனிய பிரச்சினை போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டன. இதற்குக் காரணம் யார்? முதலில் கல் எறிபவர்கள் யார்?. இதன்பின்னால் ஒரு சதிவலை செயப்படுகின்றது. இதற்காகவே விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு அரசாங்கத்திடம்   நாம் பொறுப்புடன் கூறிவருகின்றோம் எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார். 

4 comments:

  1. மீண்டும் மஹிந்தவை முஸ்லிம்களுக்கு எதிரானவராக காட்ட பார்க்கின்றான். முஸ்லிம்கள் நிதானமாக சிந்தித்து முடிவெடுப்பது சிறந்தது

    ReplyDelete
  2. முஸ்லிம்கள் எங்கெங்டு ஆக்கிரமிப்பு செய்தார்கள், எப்போது செய்தார்கள் என்பதை ஞானசார சொல்லியிருந்தால் பேட்டி இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  3. கோட்டாபய ஜயவெவ

    ReplyDelete
  4. இது பரிதாபமோ உண்மையான வாய்மொழிவோ இல்லை, இதுதான் தொடர் நாடகத்தின் ஒரு பகுதி, இதன் முடிவுக்கு எம்மை கொண்டு சேர்க்க கொடுத்த ஒரு பேட்டி, அதான் 2020 கோட்டா ஜனாதிபதி. இனி முஸ்லிங்களின் வாக்கினை திசைதிருப்ப இந்த தொடர்...

    ReplyDelete

Powered by Blogger.