Header Ads



உனக்கு வலித்தால், எனக்கும் வலிக்கும்..!!

அன்றைய குறைஷிகளிற்கு ஒரு வழமையிருந்தது. யாராவது முரண்பட்டு தம் மண்ணைவிட்டும் பிரிந்து சென்றால், அவர்கள் அதே மண்ணிற்குள் மீண்டும் திரும்ப நுழைய வேண்டும் என்றால் அவர்களிற்காக பாதுகாப்பு அளிப்பதற்கு யாராவது முன்வர வேண்டும்.

தனது பாதுகாப்பில் தான் தப்பிச் சென்றவர் இருக்கிறார் என பிரகடனம் செய்ய வேண்டும். ஒரு வகை ஆயுதப் பிரகடனம் அது. வந்தவரை தாக்கினால் தாக்கியவர்களை நான் தாக்குவேன் என்ற பாதுகாப்பு ஒப்பந்த பிரகடனம் அது.

முஸ்லிம் ஒருவர் மக்காவை விட்டும் தப்பிச் சென்று மீண்டும் மக்காவிற்குள் வந்தால் முஸ்லிம் அல்லாத ஒருவர் பாதுகாப்பு அபயம் கொடுத்தால் மட்டுமே அந்த முஸ்லிம் தாக்கபடமாட்டார். முஸ்லிமிற்கு முஸ்லிம் அபயம் தர முடியாது என பின்னாட்களில் குறைஷிகள் தமக்குள் புதிய சட்டத்தை உருவாக்கினர்.

நபியவர்கள் தாஃயிப் சென்று அவலங்களை அனுபவித்து தாங்க முடியாமல் மீண்டும் மக்காவின் எல்லை வரைதான் வர முடிந்தது. அல்-முத்இம் இப்னு அதீ. அல்-முத்இம் மற்றும் அவரதும் அவர் சகோதரரதும் மகன்கள் ஆயுத சன்னத்தவர்களாக சென்றே நபியை மக்காவினுள் பாதுகாப்பளித்து பிரகடனம் செய்து அழைத்து வந்தனர்.

கதைகளில் படிப்போமே காட்டின் சட்டம் அது என்று. அது போல.

உத்மான் பின் மள்ஊன் ரலியல்லாஹு அன்ஹு. ஆரம்ப ஸஹாபி. அபிஸீனியாவிற்கு ஹிஜ்ரத் சென்றவர். இவருக்கு ஸைனப் பின்த் மள்ஊன் என்பவர் சகோதரி. ஸைனபின் கணவர் உமர் இப்னுல் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு.

அபீஸீனியாவிற்கு குறைஷிகள் பொய் தகவல் ஒன்றை அனுப்பி வைத்தனர். “மக்காவில் குறைஷிகளை முஸ்லிம்கள் அடக்கி விட்டனர். அது இப்போது முஸ்லிம்களின் பிரதேசமாக மாறி விட்டது” என்பதே அந்த செய்தி.

அந்த தகவலை நம்பிய ஒரு கூட்டம் கப்பலேறி மீண்டும் சந்தோஷமாக ஜித்தாவின் கரையை அடைந்தனர். தங்கள் பிளேன் வேர்க் அவுட் ஆனதை உணர்ந்த குறைஷியர் தரையிறங்கிய முஸ்லிம்களை சுற்றி வளைத்துக் கொண்டனர்.

வந்திறங்கிய அணியில் உத்மான் பின் மள்ஊன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவர். அவரை குறைஷிகள் தாக்க முற்பட்ட போது, வலீத் இப்னு முகீரா அவரிற்கு ஆயுத பாதுகாப்பு அளித்தான். பிரகடனம் செய்தான். இவரை தொட்டால் தொட்டவனை நான் கொல்வேன் என்று.

வலீத் இப்னு முகீரா தான் காலி இப்னு வலீத்தின் தந்தை. இப்போது சுதந்திரமாக உத்மான் இப்னு மள்ஊன் மக்காவின் வீதிகளில் நடமாட ஆரம்பித்தார். யாரும் அவரை தொடவில்லை. ஆனால் சாலைகளில் முஸ்லிம்கள் வதைக்கப்படுவதை அவர் கண்டார். பாதுகாப்பு அபயம் அளிக்க யாரும் இல்லாதவர்கள் அவர்கள்.

தன்னோடு மார்க்கத்தை தழுவி. தன்னோடு சேர்ந்து கப்பலேறி கடல் கடந்து வாழ்ந்து. தன்னோடு மீண்டும் கப்பலில் மக்கா வந்தவர்கள் அவர்கள். துடிக்க துடிக்க வதைகளை அனுபவித்தார்கள். தாங்க முடியவில்லை உத்மான் இப்னு மள்ஊன் ரலிக்கு.

கில்டி கொன்ஸஸ். ஒரு வகை குற்ற உணர்வு அவரை சூழ்ந்து கொண்டது. நான் மட்டும் நன்றாக இருப்பதையிட்டு.

நேராக வலீத் இப்னு முகீராவிடம் சென்று தனக்கான பாதுகாப்பு பிரகடனத்தை வாபஸ்பெறும்படி வேண்டினார். வலீத் அதிசயமாக பார்த்தான் அவரை. நான் விட்ரோ பண்ணினால் உன் நிலை என்ன ஆகும் தெரியுமா? என்றான். உன்னை விட ரப்பிற்கு அது தெளிவாக தெரியும் என்றார்கள் உத்மான்.

மக்காவின் பொதுத்திடலில் வைத்து வலீத் தனது ஆயுத பாதுகாப்பை உத்மான் விடயத்தில் இனி விலக்கிக் கொள்வதாக அறிவித்தான். லபீத் பின் ரபிஆ எனும் கவிஞனின் சபையில் வைத்து அவர் மீதான முதல் தாக்குதல் ஆரம்பமானது.

கல் அபூஜஹலின் கரத்தில் இருந்து விர்ரென்று வந்து அவர் நெற்றியை தாக்கியது. அடுத்தடுத்து பல கற்கள். ஒரு கல் ஓல்மோஸ்ட் ஒரு கண்ணையே பதம் பார்த்து விட்டது. கையால் இரத்தம் சொட்டும் கண்ணை பொத்திக்கொண்டு நின்றார் உதுமான் பின் மள்ஊன் ரலியல்லாஹு அன்ஹு.

வலீத் இப்னு முகீரா இப்போது அவர் அருகில் வந்து கேட்டான் எப்படியிருக்கிறது எங்கள் ட்ரீட்மென்ட் என்று.

அதற்கு உத்மான் சொன்னார்கள்.....,

“அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயமாகச் சொல்கிறேன் வலீத். இந்தக் கண் சிதைந்து போனால் நல்ல கண் வருத்தப்படும், அல்லாஹ்வின் பாதையில் தனக்கு இப்படி ஆகவில்லையே என்று. இப்பொழுது நான் மிகச் சிறந்த ஒருவனின் பாதுகாவலில் இருக்கிறேன். அதுவே எனக்குப் போதுமானது”

இஸ்லாமிக் பிரதர் கூஃட்.. தன்னுடன் வந்தவர்கள் வதைபடுவதை தாங்க முடியாமல் மக்காவின் மிகப்பெரும் தலைவனின் ஆயுத பாதுகாப்பை துாக்கியெறிந்து விட்டு மறுகணமே உடலை குருதியால் நனைத்த ஒரு சித்தாந்த போராளியின் கதையிது.

பின்னாட்களில் ஓரு சூபித்துவமான வாழ்க்கையில் லயிக்க ஆரம்பித்தார். குடும்ப வாழ்க்கையில் இருந்து பெரிதும் விலகி இறை வணக்கங்களை அதிகப்படுத்தினார். இது நபியவர்களிற்கு தெரிய வந்ததும், அவரை அழைத்து இஸ்லாம் இதனை அங்கீகரிக்கவில்லை, குடும்ப வாழ்விலும் ஈடுபட வேண்டும் என உபதேசித்த போது அவர் சாதாரணமான நிலைக்கு திரும்பியிருந்தார்.

மதீனாவிற்கான ஹிஜ்ரத்தின் ஆரம்ப காலங்களில் மரணித்த நெஞ்சுரமிக்க ஸஹாபி அவர். அவரின் மரணத்தின் பின் அவர் கபுரிற்கு அடையாளமாக நபியவர்கள் ஒரு கல்லை தம் கரங்களால் சுமந்து வந்து வைத்தார்கள். ஜன்னத்துல் பஃகியில் அடக்கம் செய்யப்பட்ட முதல் ஸஹாபி அவர்.

Roomy Abdul Azeez

1 comment:

  1. Mr. Roomy
    சம்பவம் எல்லாம் நல்ல படிப்பினைதான்.. ஆனா நீங்க இந்த 'தங்லீஸ்' சொற்களை தவிர்த்திருக்கலாம். வாசிக்கும் போது தனியே துருத்திக்க்கொண்டு இருக்கிறது.
    (கில்டி கொன்ஸஸ், விட்ரோ, ட்ரீட்மென்ட், ...)

    ReplyDelete

Powered by Blogger.