Header Ads



ராஜபக்‌ஷ குடும்பத்தில் மிக, பலவீனமானவர் கோட்டாபய - லால்காந்த


தம்மை வீரர்களாக அடையாளம் காட்டும் தனி நபர்கள் ஜனாதிபதியாக முயற்சித்தாலும் அவர்களால் நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக்காண முடியாது என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. இதற்கு முன்னரும் தனிப்பட்ட நபர்களை முன்நிலைப்படுத்தி நாட்டின் தலைவர்களாக்கியபோதும் அவர்கள் எவரும் நாட்டை கட்டியெழுப்பவில்லை என ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினரும், தொழிற்சங்கத் தலைவருமான கே.டி.லால்காந்த தெரிவித்தார். ஜே.வி.பியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.

அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ களமிறங்கப் போவதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு சங்கரிலா ஹோட்டலில் கோட்டாபய பங்கெடுத்த மாநாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே லால்காந்த மேற்கண்ட கருத்தைத் தெரிவித்தார்.

தனித் தனி வீரர்களால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. தனிநபர்கள் ஜே.வி.பிக்கு சவாலானவர்களும் அல்ல. மஹிந்த ராஜபக்‌ஷ என்ற தனிநபரை நாம் சவாலாக எடுத்தோம். அதற்கமைய அவரைத் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பினோம். இவ்வாறான நிலையில் தனித் தனி வீரர்கள் மக்களின் பிரச்சினைகளுக்குப் பதில் வழங்கப்போவதில்லை என்றார்.

இதுபோன்றுதான் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகாயத்தில் இருந்து கொண்டுவந்தவர்போல அரசியலுக்கு அழைத்துவரப்பட்டார். முன்னாள் பிரதமர்களின் மகள், இன்னாருடைய மனைவி எனக் கூறியே அவரை அரசியலுக்குக் கொண்டுவந்தனர். ஆனால் அவர் நாட்டுக்கு எதனையும் செய்யவில்லை. தற்பொழுது கோட்டாபய பற்றிப் பேசுகின்றனர்.

No comments

Powered by Blogger.