May 01, 2018

அமைச்சுக்களை கண்காணிக்க, மைத்திரி திட்டம்

தேசிய அரசின் அமைச்சரவை மாற்றம் இன்று நடைபெற்ற நிலையில், இனிவரும் காலப்பகுதியில் அமைச்சுகளின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட பிரிவொன்றை அமைப்பதற்கு உத்தேசித்துள்ளார்.

இதற்குப் பிரதமர் தரப்பிலும் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளதால் இப்பிரிவு அமைக்கப்படலாம் என்றும், மூன்று மாதங்களுக்கு ஒருதடவை இக்குழுவால் ஜனாதிபதிக்கு ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரியவருகின்றது.

அடுத்துவரும் 18 மாதங்களுக்கு சிறப்பானதொரு அரச நிர்வாகத்தை மக்களுக்கு வழங்கவேண்டும் என்பதாலும், நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடையும்வரை இதே அமைச்சரவை தொடரவேண்டுமென எதிர்பார்க்கப்படுவதாலுமே ஜனாதிபதியால் இத்தகையதொரு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அமைச்சுகளுக்கான விடயதான ஒதுக்கீடுகள்கூட விஞ்ஞான ரீதியிலேயே இடம்பெற்றுள்ளது என்றும் உயர்மட்ட அரசியல் பிரமுகரொருவர் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்படும்போது அவற்றுக்குப் பதிலளிப்பதற்கு அமைச்சர்கள் கட்டாயம் பிரசன்னமாகியிருக்கவேண்டும் என்ற விடயம் அமுலுக்கு வரவுள்ள புதிய நிலையியல் கட்டளைச்சட்டத்துக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், சபைக்குள் அமைச்சர்களின் செயற்பாடுகள் சம்பந்தமாகவும் ஜனாதிபதி கவனம் செலுத்தவுள்ளார்.

இது சம்பந்தமாக எதிர்வரும் 8ஆம் திகதி சபாநாயகருடன் பேச்சு நடத்துவாரென அறியமுடிகின்றது. நீண்ட இழுபறிக்கு மத்தியில் நேற்று மாலை புதிய அமைச்சரவைப் பட்டியல் இறுதிபடுத்தப்பட்டது.

ஐ.தே.கவால் முன்வைக்கப்பட்ட பட்டியலை திருத்தங்கள் சகிதமே ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

பிணைமுறி மோசடி விவகாரத்தையடுத்து, தமது பதவியை இராஜினாமா செய்த முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சுப் பதவி வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியால் முன்வைக்கப்பட்ட யோசனையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

இதேவேளை, புதிய அமைச்சரவையில் முன்னாள் நிதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. உயர்கல்வி, கலாசார அமைச்சராக அவர் இன்று பதவியேற்றுள்ளார்.

தேசிய அரசு உதயமான பிறகு நீதி மற்றும் புத்தசாசன அமைச்சுப் பதவியை வகித்த விஜயதாஸ ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சியால் விடுக்கப்பட்டகோரிக்கையின் பிரகாரம் ஜனாதிபதியால் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறுமுகன் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுமென ஆரம்பத்தில் கூறப்பட்டாலும் அவர்கள் எவ்வித பதவிகளையும் கோரவில்லையென்பதால் அவர்களுக்குப் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை.

அதேவேளை, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் தனியாட்சி அமையும் பட்சத்தில் அமைச்சரவை எண்ணிக்கை 30ஐயும், இராஜாங்க, பிரதி அமைச்சுகளின் எண்ணிக்கை 40ஐயும் விஞ்சுதலாகாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் கூட்டரசு அமையும் பட்சத்தில் இத்தொகைகளில் அதிகரிப்பு செய்யமுடியும். அமைச்சுகளின் எண்ணிக்கையை 48 ஆகவும், இராஜாங்க, பிரதி அமைச்சுகளின் எண்ணிக்கையை 45 ஆகவும் அதிகரித்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் - சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றத்தைச் செய்வதற்கு ஜனாதிபதி உத்தேசித்திருந்தாலும், உரியவகையில் மாற்றம் இடம்பெறவேண்டுமென்பதால் அதை தற்காலிகமாக ஒத்திவைத்தார். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இன்று மாற்றம் நடைபெற்றுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment