Header Ads



அரசாங்கத்துடன் இருப்பதால் சு.க. நலிவடைந்து, மக்களிடமிருந்து விலகிச் செல்கிறது - ஜனாதிபதி

அரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சி விலகும் திகதி குறித்து கட்சி உறுப்பினர்கள் ஆராய்ந்து வருவதாக சுதந்திரக் கட்சியின் எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

நேற்று முன்தினம் இரவு சுதந்திரக் கட்சி மத்திய செயற்குழு கூட்டத்தில், அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்வதற்கான திகதியை தீர்மானிக்குமாறு ஜனாதிபதி சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவித்திருந்தார். இதனடிப்படையில் அதற்கான திகதி தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவே ஜயசேகர எம்.பி கூறினார்.

புஞ்சிபொரளையிலுள்ள சுதந்திரத்துக்கான ஊடக நிலையத்தில் நேற்று காலை நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இங்கு மேலும் தெரிவித்ததாவது,-

தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இருப்பதால் சுதந்திரக் கட்சி நலிவடைந்து செல்வதுடன் மக்களிடமிருந்தும் விலகிச் செல்வதாகவும் ஜனாதிபதி மத்திய செயற்குழு கூட்டத்தில் தெரிவித்தார்.

மத்திய செயற்குழுவை சரியான தீர்மானம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கூறினார். இதற்கமைய அரசாங்கத்துடன் இருக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் இது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர். எதிரணியில் அமர்ந்திருக்கும் 16 எம்.பிக்களும் சுதந்திரக் கட்சி அரசாங்கத்திலிருந்து விலக வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம். அரசாங்கத்துடன் தொடர்ந்து இருக்க வேண்டுமென விரும்புவோர் அதனை தனிப்பட்ட முறையில் முன்னெடுக்கலாம் என்றும் தெரிவித்தார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, அரசாங்கத்துடன் தொடர்ந்து இருப்பதானது கட்சியின் எதிர்காலத்தை சிதைக்கும் செயலென குறிப்பிட்டார்.

அத்துடன் ஜனாதிபதி இத்தீர்மானத்தை நாட்டின் தலைவராகவன்றி கட்சியின் தலைவராகவே குறிப்பிட்டாரென்றும் அவர் கூறினார்.

மேலும் ஜூன் 03 ஆம் திகதி நடைபெறவுள்ள மத்திய செயற்குழு கூட்டத்தின்போது இடைக் காலத்துக்காக புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

1 comment:

  1. இலங்கையைச் சூழவுள்ள எல்லா நாடுகளும் முன்னேற்றத்தை நோக்கி வீறுநடை போடும் போது இலங்கையில் கள்வர்கள் நாட்டைச்சூறையாடும் முயற்சியில் ஒருவரைஒருவர் போட்டி போட்டுக்கொண்டு அலைகின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.