Header Ads



அரசாங்கம் வழங்கிய, நகைச்சுவை விருந்து

அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொண்டு அரசாங்கம் உலகத்தில் உள்ள அனைவருக்கும் நகைச்சுவை விருந்து வழங்கியிருப்பதாக ஜே.வி.பி விமர்சித்துள்ளது.

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பின் ஊடாக நாட்டை முன்நோக்கி நகர்த்திச் செல்ல முடியாது என்பதுடன், மக்களின் எதிர்பார்ப்பு எதனையும் நிவர்த்திசெய்ய முடியாது என்றும் ஜே.வி.பியின் ஊடகச் செயலாளர் விஜித ஹேரத் தினகரனுக்குத் தெரிவித்தார்.

விஞ்ஞான ரீதியான அடிப்படையைக் கொண்டு அமைச்சரவை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என முன்னர் கூறப்பட்டது. எனினும், அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பில் எந்தவொரு விஞ்ஞான ரீதியான அடிப்படையையும் காண முடியவில்லை. விஞ்ஞான ரீதியான மாற்றத்தை மேற்கொள்வதற்கு முன்னர் அமைச்சர்களின் அறிவிலேயே முதலில் மாற்றம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இணக்கப்பாட்டு அரசாங்கத்தின் மற்றுமொரு அமைச்சரவை மாற்றம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதில் 18 அமைச்சர்களுக்கு புதிய அமைச்சுக்கள் வழங்கப்பட்டன. இது குறித்து ஜே.வி.பியின் நிலைப்பாட்டை வினவியபோதே அக்கட்சியின் ஊடகச் செயலாளர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார்.

இந்த அமைச்சரவை மறுசீரமைப்பின் ஊடாக மக்கள் எதிர்பார்த்த எந்தவொரு விடயமும் நிறைவேறப்போவதில்லை. சமையல் எரிவாயுவின் விலை 245 ரூபாவால் அதிகரித்துள்ளது. டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வாழ்வாதார செலவுகள் அதிகரித்துள்ளன. 50 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர். இதுபோன்ற மக்களின் பிரச்சினைகளுக்குப் பதில் எதுவும் அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை. மாறாக அமைச்சரவையில் மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

தம்முடன் கோபித்துக் கொண்டவர்களை நட்பாக்குவதற்கும், தமக்கு நெருக்கமானவர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அது மாத்திரமன்றி ஏற்கனவே இருந்தவர்கள் மத்தியில் அமைச்சுக்கள் மீண்டும் மாற்றப்பட்டுள்ளன. முன்னர் இருந்ததைவிட அமைச்சுக்களில் சிறிய மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும், அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கும் அமைச்சுப் பொறுப்புக்களை வழங்கி அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இணக்கப்பாட்டு அரசாங்கம் ஆட்சிக்குவந்ததிலிருந்து இதுவரை எத்தனை அமைச்சரவை மறுசீரமைப்புக்கள் இடம்பெற்றுள்ளன? அரசாங்கத்தைப் போலவே அமைச்சரவை மறுசீரமைப்பும் துண்டு துண்டுகளாக மேற்கொள்ளப்படுகின்றன. இன்றையதினம் (நேற்று) அமைச்சுப் பதவிகளில் மாற்றம் இடம்பெற்ற நிலையில் நாளை (இன்றையதினம்) இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுக்களில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாம். அரசாங்கம் முதுகெலும்பில்லாத வகையில் செயற்பட்டு வருகிறது. இதனால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லையென விஜித ஹேரத் மேலும் கூறினார்.

No comments

Powered by Blogger.