Header Ads



ஜேர்மனியின் நாசிஸமும், இலங்கையின் பாசிஸமும் - சமாரா வெத்திமுனி

ஒரு சில சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர்களால் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நபரொருவர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார். கடுமையாகத் தாக்கப்பட்டு காயத்துக்குள்ளான நபர் இரண்டு நாட்களுக்குப் பின் பரிதாபகரமாக உயிரிழக்கிறார். சில மணித்தியாளங்களில் கோபம்கொண்ட ஒரு கும்பல் சிறுபான்மை சமூகத்தைச் சேரந்தவர்களை உடல்ரீதியாக தாக்கி, அவர்களது வியாபார நிலையங்களை கொள்ளையிட்டது மட்டுமன்றி அவர்களது வீடுகள் மற்றும் மதஸ்தலங்களையும் எரியூட்டுகின்றனர். இது கிரிஸ்டல்நாக்ட் அல்லது உடைந்த கண்ணாடி சில்லுகளின் இரவு என்றழைக்கப்படும் நாசி ஜேர்மனியின் 1938ம் ஆண்டின் நவம்பர் 9 – 10ஐ ஒத்த சம்பவமாகும்.

பெப்ரவரி 22, 2018 அன்று கண்டியில் சிங்கள நபர் ஒருவர் ஒரு சில முஸ்லிம் நபர்களினால் தாக்குதலிற்கு உள்ளாக்கப்பட்டு மோசமான காயங்களுக்கு உள்ளாகிறார். பாதிக்கப்பட்ட அந்த நபர் மார்ச் 3ஆம் நாள் மரணத்திற்குள்ளாகிறார். மார்ச் 4 மாலைப் பொழுதில் போர்க்குணமிக்க ஒரு கும்பல் முஸ்லிம்களின்  வீடுகள், வியாபார நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்களைத் தாக்க ஆரம்பிக்கின்றனர். அதனைத் தொடர்ந்து சில தினங்களாக முஸ்லிம்களுக்குச் சொந்தமான உடைமைகள், பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் முஸ்லிம்களிற்கெதிராக வெறுப்புணர்வையும் வன்முறையையும் தூண்டும் கதையாடல்கள் என்பன அதிகரிக்கத் தொடங்கின. கண்டியில் நடைபெற்ற இவ்வன்முறைக்கு ஒரு வாரத்துக்கு முன்னர், அம்பாறை நகரில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான உணவகத்தில் சிங்களவர்களுக்கு பரிமாரப்பட்ட உணவில் கருத்தடை மாத்திரை கலக்கப்பட்டது என்ற வதந்தியை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இவ்வன்முறையைத் தூண்டியவர்கள், சிங்கள இனம் பெருகுவதை தடுக்க முஸ்லிம்கள் முற்படுவதாகவும் அதன்மூலம் அவர்களது சனத்தொகையை சிங்களவர்களைவிட அதிகரிக்க முற்படுவதாகவும் குற்றம் சுமத்தினர்.

இவ்விரு நிகழ்வுகளில் உள்ள ஒற்றுமைகளை மிகைப்படுத்தாது இருத்தல் முக்கியமாகும். பொதுவாக சிறுபான்மையினரை அநியாயமாக பழிசுமத்தும் நிகழ்வு வெவ்வேறு தளங்களில் இடம்பெறும். நாஜி ஜேர்மனியில் யூதர்களுக்கு எதிரான வன்முறை அதன் தீவிர நிலை ஆகும். எனினும், ஜேர்மனியில் யூதர்கள் மற்றும் இலங்கையில் முஸ்லிம்கள் அநியாயமாக பழிசுமத்தப்படுதலை ஒப்பிட்டுப்பார்த்தால், இலங்கை அதன் தீவிர நிலையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பது வெளிப்படும். தவிர, 1915ஆம் ஆண்டை மறந்துவிடலாகாது. சிலோனில் முஸ்லிம்களுக்கு எதிரான நாடு தழுவிய வன்முறை நிகழ்ந்த அதே வருடம் – சிங்கள பௌத்த சித்தாந்தி அநாகரிக தர்மபால இலங்கை முஸ்லிம்களை “யூதர்களைப் போல் செழிப்படைய முனையும், ஷைலோகியன்ஸ்” என வர்ணித்தார்.

கண்டி மற்றும் கிரிஸ்டல்நாக்ட் நிகழ்வுகள் இரண்டிற்கும் இடையிலான பிரதான வேறுபாடு அதில் அரசின் வகிபாகம் ஆகும். நவம்பர் 9ஆம் நாளன்று ஒரு ஜேர்மனியப் பிரஜையின் இறப்பையொட்டி நாஜி பரப்புரைக்குப் பொறுப்பான அமைச்சர் ஜோசப் கொப்பல்ஸ் ஒரு உரையை நிகழ்த்தினார். அதில் அவர் தெரிவித்ததாவது, “அதிபர் ஒரு முடிவை எடுத்துள்ளார்…. ஆர்ப்பாட்டங்கள் கட்சியினால் ஏற்பாடு செய்யப்படவோ, ஆரம்பிக்கப்படவோ கூடாது. அதுபோலவே ஆர்ப்பாட்டங்கள் தன்னிச்சையாக மேலெழும் சந்தர்ப்பங்களில் அவை அடக்கப்படலாகாது.” இது சாதாரண குடிமக்கள் உட்பட நாஜி விசுவாசிகளிற்கு ஜேர்மனியில் (மற்றும் ஆஸ்டிரியா, சுடடன்லன்ட இல்) வாழ்ந்த யூதர்களை பழிவாங்க வழங்கப்பட்ட தகுந்த சந்தர்ப்பமாக கருதப்பட்டது. நாம் அவ்வாறான சந்தர்ப்பங்களை இலங்கையில் காணவில்லை. ஆனால், அந்நிலை கடந்த காலங்களில் – 1983 தமிழர்களுக்கு எதிரான கலவரத்தின் போது மற்றும் குறிப்பிடத்தக்களவு 2014 முஸ்லிம்களுக்கெதிரான கலவரத்தின் போது காணப்பட்டது.

கண்டி மற்றும் கிரிஸ்டல்நாக்ட் நிகழ்வுகள் இரண்டிற்கும் இடையிலான பிரதான ஒத்த தன்மைகள் குறிப்பிட்டு நோக்கத்தக்கது. நிகழ்வுகளை தூண்டிய விடயங்களுக்கு இடையிலான ஒற்றுமையினைத் தாண்டி பரந்தளவில் அநியாயமாக பழிசுமத்தப்படும் சமூக நிகழ்வு அதிர்ச்சியூட்டும் விதமாக ஒரே தன்மையினைக் கொண்டுள்ளது. முதலாவது ஒத்த தன்மை, சிறுபான்மையினரை பொருளாதார காரணங்களுக்காக பழிசுமத்தல், இரண்டாவது, மக்கள் தொகை அரசியலை உள்ளடக்கியது.

முதலாவது, இலங்கை முஸ்லிம்களை சிங்கள பௌத்த பொருளாதார ஆதிக்கத்திற்கு அச்சுறுத்தலான தரப்பினர்கள் என  பழிசுமத்தல். குறிப்பாக பொருளாதார நெருக்கடியான காலங்களில் முஸ்லிம்களின் பொருளாதார ரீதியான வெற்றியைப் பார்த்து அவர்கள் சினம்கொள்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் அஹிலன் கதிர்காமர், பொருளாதார மந்த நிலையின் போது பொருளாதாரத்தில் வெற்றிகரமான சிறுபான்மையினரை இலக்காகக்கொள்ளும் இந்தப் போக்கை மிகத்துள்ளியமாக விளக்குகிறார். இதேபோல், 1929 மற்றும் 1933க்கு இடையில் ஜேர்மனியை உலுக்கிய பொருளாதார நெருக்கடியின் போது (மற்றும் அதற்கு முன்னர் வெய்மர் தசாப்தத்தின் போதும்) யூதர்கள் ஒப்பீட்டளவில் பாதிப்புகளிற்கு உள்ளாகாமை நாஜி ஜேர்மனியர்களை கடுமையாக சினம் கொள்ளச் செய்தது.

இரண்டாவது, இலங்கை முஸ்லிம்கள் ஏனைய இன மதக் குழுமங்களைவிட சனத்தொகையில் அளவுக்கு மீறிய வளர்ச்சியைக் கொண்டுள்ளனர் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் முஸ்லிம்களை சிங்கள பௌத்த சமூகத்தின் மக்கள் தொகையிலான மேலாதிக்கத்திற்கான அச்சுறுத்தலாக முன்னிறுத்தல். அம்பாறையில் நாம் அவதானித்தது போல் போர்க்குணமிக்க குழுக்கள் முஸ்லிம்கள் சிங்கள இனத்தவர்களை மலட்டுத்தன்மைக்கு உள்ளாக்குகின்றனர் என்ற பிரச்சாரத்தினைப் பரப்ப இவ்வாறு மக்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கைகளை தகுந்த சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டனர். மக்கள் தொகை அரசியலும் நாஜி ஜேர்மனியில் கணிசமானளவு காணப்பட்டது. ஆனால், அது மிகத்தெளிவாக அதிதீவிரத்தன்மை கொண்டிருந்தது. ஆரிய இனத்தின் ‘தூய்மை’யினை உறுதிப்படுத்த ஆரியர்கள் மற்றும் யூதர்களிற்கு இடையிலான திருமண ஒப்பந்தங்கள் 1935ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்டது. மேலும், யூத மக்களது சனத்தொகையைக் குறைக்க நிகழ்ச்சித்திட்டங்கள் உருவாக்கப்பட்டன – முதலாவது கட்டாய வெளியேற்றமும் அதனைத்தொடர்ந்து அடியோடு அழித்தலும். இவை மிகைப்படுத்திய ஒப்பீடுகள் எனக்கூறி இலகுவாக நிராகரிக்கப்படலாம். ஆனால், இவ்வன்முறைகள் எவ்வித தண்டனைகளும் வழங்கப்படாமல் தொடருமானால் எதிர்காலத்தில் முஸ்லிம்களும் இந்நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு கட்டாயப்படுத்தப்படுவார்கள் என்பது உறுதி.

இலங்கையின் தற்போதைய சூழ்நிலை, நாஜி ஜேர்மனியில் இருந்தது போல், தீவிர தேசியவாத போர்க்குணமிக்க குழுக்களின் வனப்புரைகளுடன் மக்கள் தொகையின் பெரும்பகுதி உடன்படுகிறது. இதற்கிடையில் இலங்கையின் அரசியல்வாதிகள் மற்றும் சட்ட அமுலாக்கத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் இவ் வன்முறையாளர்களுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கத் தவறிவிட்டனர். அத்துடன், 2014 அளுத்கம கலவரத்தினைத் தொடர்ந்து பொதுபலசேனா மற்றும் சிங்ஹல ராவய போன்ற போர்க்குணமிக்க தேசியவாதக் குழுக்கள் சட்ட விலக்கல்கள்களை அனுபவித்து வருவது மேலும் அவர்கள் வன்முறைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்களைக் கூட்டும். நாஜி ஜேர்மனியில் காணப்பட்டது போன்ற வெளிப்படையான பாசிச நிலைக்கு இலங்கை இன்னும் தள்ளப்படவில்லை. ஆனால், இப்பாசிச நிலையின் இறுதிநிலையில் என்ன இருக்கின்றது என்பதை முன்னோக்கியே அறியாதவிடத்து நாங்கள் திரும்பமுடியாத ஒரு புள்ளியை அடையும் ஆபத்தை எதிர்நோக்க வேண்டிவரும்.

-மீள்பார்வை-

1 comment:

  1. WHY DO YOU FORGET MAWANELLA AND GALAGEDARA INCIDENT

    ReplyDelete

Powered by Blogger.