April 26, 2018

இலங்கையிலும் இந்த, கதிதான் நடக்கும் - எச்சரிக்கிறார் அமீன்

யுத்தத்திற்குப் பிறகு உருவான பெரும்பான்மைச் சமூகத்தின் இளையதலைமுறையினருக்கு மத்தியிலே முஸ்லிம்களைப் பற்றி தெளிவான விளக்கம் இல்லாமல் இருக்கின்றது. இந்தப் பின்னணியில் அவர்கள் மத்தியில் முஸ்லிம்களைப் பற்றி நச்சுக்கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. இதனை எதிர்கொள்வதற்கு முஸ்லிம் சமூகம் தவறிவிட்டது என முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்ஸில் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான என். எம். அமீன் கூறினார்.
கட்டார் ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது,
நாம் இலங்கையில் 1100 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். சிங்கள சமூகத்தோடு, தமிழ் சமூகத்தோடு காலத்திற்கு காலம் சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பொதுவாக இலங்கை வாழ் முஸ்லிம்கள் நல்லதொரு சமூகமாக வாழ்ந்திருக்கின்றார்கள் என்ற பெயர் இருக்கின்றதுதுரதிஷ்டவசமாக இப்பெயருக்கு களங்கம் ஏற்படுகின்ற வகையில் அண்மைக்காலமாக நாங்கள் காரணங்களாக இருந்தோ அல்லது இல்லாமலோ சில நிகழ்வுகள் நடக்கின்றதை நாங்கள் பார்க்கின்றோம்.

யுத்தம் வரை இந்த நாட்டிலே முஸ்லிம்களுக்கு பொதுவான பிரச்சினைகள் இருக்கவில்லை. யுத்தத்தோடு தொடர்பான பிரச்சினைகள்தான் இருந்தன. எங்களுடைய சமூகத்தின் பெருந்தொகையினரை 24 மணி நேரத்திற்குள் சிறு சிறு பைகளோடு இலங்கையின் தெற்குப் பகுதிக்கு அனுப்பி வைத்த அந்த வரலாறு. யுத்தத்தினால் பெரும்பான்மை சமூகத்தினருடைய இழப்புகளுக்குச்  சமாந்தரமாக கிட்டத்தட்ட 8000 கோடிக்கு மேற்பட்ட சொத்துக்களை இழந்த ஆயிரக்கணக்கான ஈமானிய சொந்தங்களை இழந்த சமூகமாக இருந்தாலும் கூட எமது இருப்பு தொடர்பாக பிரச்சினைகள் இருக்கவில்லை. தென்னிலங்கையிலே நிம்மதியாக வாழ்ந்தோம். வெலிகமை மற்றும் கண்டி, மாவனல்லை, திகன போன்ற பகுதிகளிலே நிம்மதியாக வாழ்ந்தோம். இன்று இந்த நிம்மதியை நாம் இழந்திருக்கின்றோம். என்ன காரணம்? ஏன் இவ்வாறு எங்களை அடிக்கின்றார்கள்
கடைகளுக்கு பெரும்பான்மை சமூகத்தவர்கள் வருகின்றார்கள். லாயிலாக இல்லல்லாஹ், மாஸா அல்லாஹ் போன்ற வாசகங்களைக் கண்டால் இது முஸ்லிம் கடையா? என்று கேட்டு விட்டு கொடுத்த ஓடரை ரத்து செய்துவிட்டுப் போகிறார்கள்.  
முச்சக்கரவண்டிகளில் ஏறுகிறார்கள் கொஞ்ச தூரம் செல்கிறார்கள். பணம் கொடுக்காமல் செல்கிறார்கள். அதைப்பற்றிக் கேட்டால் அது பிரச்சினையாக மாறுகின்றது. அது சிங்கள கிராமத்துக்குச் செல்கின்ற வீதியாக இருக்கும். இதனால் என்ன செய்வது தனது வருமானத்தைக் கூட இழந்து வருகின்ற நிலை ஏற்படுகின்றது. ஒட்டு மொத்த சமூகத்தின் நலனுக்காக அப்படியான ஒரு தியாகத்தைச் செய்ய வேண்டி இருக்கின்றது. இதுதான் எமது நாட்டிலே ஆங்காங்கே பரவலாக நடக்கின்ற நிகழ்வுகள்
இன்று பரவலாகப் பேசப்படுகின்ற திகனைச் சம்பவம் கூட அந்த திகனைப் பிரதேசத்தில் வாழுகின்ற மக்களுக்கு எவ்விதவகையிலும் தொடர்பில்லாதவர்களூடாகத்தான் இந்தக் கலவரம் ஆரம்பித்திருக்கின்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் விஹாரை அதிபதிகள் ஓர் இணக்கப்பாட்டிற்கு வந்திருந்தார்கள். ஆனால் வெளிச்சக்திகள் தங்களது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தினார்கள். இதனால் 890 கோடி பெறுமதியாக எமது நாட்டின் சொத்து அழிக்கப்பட்டிருக்கிறது. அதனை விட  நூற்றாண்டு காலமாக ஒற்றுமையாக வாழ்ந்த மக்களுடைய மனதிலே இன்று ஒரு கறை, கசப்பு வளர்ந்திருக்கின்றது. நாங்கள் இழந்த சொத்துக்களை மீளப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் வளர்ந்திருக்கின்ற கறையை எவ்வாறு சரி செய்வது?
அங்கு பாதிக்கப்பட்ட ஒரு வர்த்தகரிடம் நான் விசாரித்தேன். அவர் 40 கோடி பெறுமதியான ஆடை விற்பனை நிலையம் அழிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். நஷ்டஈடாக ஜம்மியத்துல் உலமா 25 இலட்சம் ரூபா கொடுத்திருப்பதாகவும் அரசாங்கம் 1 இலட்சம் ரூபா கொடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்அவர் பக்கத்தில் இருந்த தேங்காய் கடையில் தன்னுடைய வியாபாரத்தை ஆரம்பித்திருக்கிறார். தன்னுடைய உறவினரைக் கூட சந்திக்க முடியாத அளவுக்கு அக்கடையில் வியாபாரம் நடக்கின்றது. அதிகமாக சிங்களவர்கள்தான் அந்த வியாபாரத்திலே இணைந்திருக்கின்றார்கள்
இந்நிலைமை பற்றி ஆராய்ந்து பார்க்க வேண்டும். சிங்களவர்கள் தவறா? முஸ்லிம்கள் தவறா? என்று நாங்கள் தீவிரமாகச் சிந்தித்து பார்க்க வேண்டும். இதுதான் நாட்டிலே இருக்கின்ற பிரதான பிரச்சினை
சில தினங்களுக்கு முன் தெரண தொலைக்காட்சியில் அதுரலிய ரதன தேரர் அளித் பேட்டி. அதுரலிய ரதன தேரரோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் 1 வருட காலமாக ஒவ்வொரு மாதமும் இஸ்லாத்தை விளங்கப்படுத்துகின்ற, அவர்கள் பௌத்த மதத்தை விளங்கப்படுத்துகின்ற கலந்துரையாடல் நடைபெற்றது. எங்களுடைய எல்லா விடயங்களையும் அக்கலந்துரையாடல் மூலம் அவர்களுக்கு தெளிவுபடுத்தினோம். ஆனால், எதுவுமே தெரியாதவர் போல் அவர் தொலைக்காட்சியில் பேசுகிறார். உண்மையிலே தெரியாமல் ஒருவர் பேசினால் பரவாயில்லை. 1 வருடத்துக்கு மேல் ஒரு நல்லுவுறவைப் பேணி கலந்துரையாடலில் ஈடுபட்டு அதில் எந்தவித பயனுமில்லை என்கின்ற போது மிகவும் கவலையாக இருக்கின்றது
கடும்போக்கு அமைப்புகள் சிங்கள மக்கள் மத்தியிலே முஸ்லிம் சமூகத்தைப் பற்றி சந்தேகத்தை நச்சுவிதைகளாக பரப்பி இருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் முஸ்லிம் சமூகத்தைப்பற்றி தப்பபிப்பராயம் வளர்க்கப்பட்டிருக்கிறது
இந்நிலைமைகளைப் பார்க்கும் போது காஸாவினுடைய நிலைமை எங்கள் நாட்டினுள் ஒருவகையினுள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றதோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. ஏனென்றால் மாலை 6.00 மணிக்கு மேல் தங்களுடைய எல்லைக் கிராமமான சிங்களக் கிராமங்களில் தொழில் செய்ய முடியாத நிலைமைமுச்சக்கரவண்டி ஓட்டுகின்ற தொழிலாளி எப்படி தனது தொழிலைச் செய்வது?
எமது நாட்டில் பிரதான கட்சிகள் எம்மைக் கைவிட்டிருக்கின்றனர். கண்டியில் 3 நாட்களாகப் பிரச்சினைகள் இடம்பெறும் போதுசட்டமும் ஒழுங்கும் ஒழுங்காக பேணப்பட்டிருக்கவில்லைதஹஜ்ஜத் தொழுது, நோன்பு பிடித்து பதவிக்குக் கொண்டு வந்த அரசாங்கம், நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகக் கொண்டு வந்தது முஸ்லிம்களுடைய பெரும்பான்மை வாக்குகள்
ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக வருவதற்கு காரணம் முஸ்லிம்களுடைய பெரும்பான்மையான வாக்குஆனால் உரிய நேரத்திலே எங்களுக்கு பாதுகாப்பைத தர தவறியிருக்கிறார்கள் என்ற உணர்வு முஸ்லிம் சமூகத்தினரிடையே ஏற்பட்டுள்ளன
ஆனால், உடுதெனிய சம்பவத்தில் ஈடுபட்டதாக இரண்டு இராணுவ வீரர் உட்பட 10 பேரைக் கைது செய்து இருக்கிறார்கள். கைது செய்த வேகத்தைப் பார்க்கும் போது சட்டமும் ஒழுங்கும் இப்போது ஓரளவு வேகமாக  இயங்கத் தொடங்கியிருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகின்றது
இந்த நாட்டிலே சட்டமும் ஒழுங்கும் ஒழுங்காகப் பேணப்படுவதில்லை. இதனால் நாங்கள் அநாதைகள் ஆகின்றோம். அகதிகள் ஆகின்றோம். குக்கிராமங்களிலே வாழ்கின்றவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றார்கள்
நாங்கள் 10 சதவீதமாக வாழ்கின்றோம். நாங்கள் பரந்து விரிந்து எல்லாக்கிராமங்களுக்குள்ளும் வாழ்கின்றோம். 40, 50 குடும்பம் என்று எல்லா இனத்துக்குள்ளும் கலந்து வாழ்கின்றோம். இப்படி இருக்கும் போது எப்படி தனித்து வாழ்வது? குறிப்பாக நாங்கள் ஒவ்வொருவரும் சிந்திப்பது எமது தாய்மார்களுக்கு, சகோதரிகளுக்கு என்ன நடக்கப் போகிறது என்று. இப்படி இவ்வாறான சம்பவம் நடந்தால்  எமது தாய்க்கு, சகோதரிக்கு என்ன நடக்கும்? என்ற கவலைதான் முஸ்லிம் சமூகத்துக்கு கூடுதலாக இருக்கின்றது
வியாபாரம் தடைப்படலாம், வீடுகள், பள்ளிவாசல்கள் அழிக்கப்படலாம். ஆனால் எமது சகோதரிகளுடைய கற்பு அழிக்கப்பட்டால், அல்லது ஏதாவது அவர்களுக்கு நடந்துவிட்டால் என்ற சூழலைப் பற்றிய சிந்தனைதான் முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் இருக்கின்ற விடயம். எனவே இந்தப் பாதுகாப்பை எப்படி நாங்கள் பெறுவது?
நாங்கள் 1000 வருடங்கள் இந்த நாட்டில் வாழ்ந்தாலும் கூட எமது அயலில் வாழுகின்ற சிங்கள சகோதரர்களுக்கு இஸ்லாத்தைப்பற்றிய வியக்கத்தைக் கொடுக்கத் தவறியிருக்கின்றோம். இதுதான் பிரதானமான காரணம். எங்களைப் பற்றிய முழுமையான வரலாறு அவர்களுக்குத் தெரியாது.
யுத்தத்திற்குப் பிறகு உருவான இளைய தலைமுறையினருக்கு மத்தியிலே முஸ்லிம்களைப் பற்றிய தெளிவான விளக்கம் இல்லாமல் இருக்கின்றது. நாங்கள் இந்த யுத்தத்தை வென்றெடுப்பதற்கு எங்களது பங்களிப்பைச் செய்து இருக்கின்றோம்எங்களுடைய முஸ்லிம் நாடுகள் யுத்தத்திற்காக பெருமளவு உதவிகளைச் செய்து இருக்கிறார்கள். முஸ்லிம்கள்  இந்த நாடு பிரிவதைத் தடுப்பதற்கு பங்களிப்புச் செய்து இருக்கிறார்கள். இது எமது தாய் நாடு. இந்த தாய் நட்டினுடைய இறைமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடுதான் முஸ்லிம்கள் பங்களிப்புச் செய்தார்கள்.  
அன்று முஸ்லிம்கள் பேசுகின்ற மொழியான தமிழ் மொழியைப் பார்த்து தமிழர்களோடு இணைந்திருந்தால் நாடு இரண்டாகப் பிரிந்திருக்கும். அது நடந்திருந்தால் சிங்கள சமூகம் எப்படியான நிலையை எதிர் கொண்டிருக்கும்? திகன சம்பவத்தின் போது முப்படைகளின் தலைவர் பகிரங்கமாகச் சொன்னார். முஸ்லிம்களுடைய பங்களிப்பு இல்லாவிட்டால் நாங்கள் இந்த யுத்தத்தை வென்றிருக்க மாட்டோம் என்று. முஸ்லிம்களுடைய பங்களிப்பு இல்லாமல் நிச்சயமாக யுத்தத்தை வென்றிருக்கமுடியாது.
குறிப்பாக இந்த நாட்டின் உளவுத்துறையிலே முஸ்லிம்கள் செய்திருக்கின்ற பங்களிப்பு உலகத்தின் பலமான ஓர் இயக்கத்தை அழிப்பதற்கு  உள்ளார்ந்த பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். ஆனால் இன்று அவை எல்லாம் மறக்கப்பட்டு, எங்களை அடிக்கின்ற, விரட்டுகின்ற, நாசப்படுத்துகின்ற நிகழ்ச்சி நிரல் இந்த நாட்டிலே நடந்து கொண்டிருக்கின்றது
பொது பல சேனா போன்ற அமைப்புகள் உருவாகி சிங்கள மக்கள் மத்தியிலே முஸ்லிம்களைப் பற்றி தவறான விடயங்களைப் பரப்பினார்கள். அதைப்பற்றிய சரியான விளக்கத்தை சிங்கள மக்களுக்குக் கொடுக்க தவறிவிட்டோம். நாங்கள் ஒன்றும் செய்யாது பார்த்துக் கொண்டிருந்தோம். எங்களுடைய கைகளிலே ஊடகம் இல்லை. அதனைச் சொல்லக் கூடிய சக்திமிக்கவர்கள் இருக்கவில்லை. சிங்கள மக்களுக்கு சிங்கள மொழியில் நாங்கள் எதனைச் சொல்லி இருக்கின்றோம்
அண்மையில்தான் சிங்கள மொழி பெயர்ப்புடன் கூடிய அல் - குர்ஆன் அச்சிடப்பட்டிருக்கிறது. அதனைப் பற்றிய தேவை இருக்கவில்லை. இப்போதுதான் சிங்கள மொழி பற்றி சிந்திக்கின்றோம்
ரதன தேரரருடைய கருத்துக்கு தெளிவான பதிலை சகோதரர் தஹ்லான் மன்சூர் முகநூலினூடாக மிக அர்த்தமுள்ளதாக வழங்கியிருக்கிறார்
இலங்கையில 49 வானொலிகள் இருக்கினறன. முஸ்லிம்களுடைய கட்டுப்பாட்டில் ஒரு வானொலி இல்லை. 22 தொலைக்காட்சிகள் இருக்கின்றன. முஸ்லிம்களுடைய கட்டுப்பாட்டில் ஒரு தொலைக்காட்சி இல்லை
மறுமைக்காக பள்ளிவாசல்களை, மத்ரஸாக்களைக் கட்டுகின்றோம். தேவைதான், ஆனால் அது எல்லை மீறி இருக்கின்றதா? என்பது பற்றி பார்க்க வேண்டும்.
இப்படியான பிரச்சினைகள் காரணமாக முஸ்லிம்களை சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்றார்கள்.
நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ சிங்கள சமூகத்தவர்களுடைய அபிமானங்களைப் பெற்றால் மட்டுமே எங்களுடைய நாட்டிலே நிம்மதியாக வாழ முடியும்
எதிர்காலத்தில் முஸ்லிம் அரசியல் போக்கு குறித்தும் நாம் கையாள வேண்டி இருக்கின்றது. அதற்கான வழிகாட்டல்களைச் செய்ய வேண்டி இருக்கின்றது. எமது இருப்பை தக்க வைத்துக் கொள்ள இப்படியான வேலைகளைச் செய்ய வேண்டி இருக்கின்றது
எமது சமூகத்தைப்பற்றி சிங்கள மக்கள் மத்தியில் நல்லபிப்பிராயங்கள் வருமளவுக்கு எங்களைப் பற்றிப் புரிய வைக்க வேண்டும். எங்களைப் பற்றிய சந்தேகங்களைத் தீர்க்க வேண்டும். அதனை எங்களால் தனியாகச் செய்ய முடியாது. நாங்கள் சொல்வதை ஏற்கப் போவதுமில்லை. அப்படியென்றால் என்ன செய்வது?
மிக விரைவாக சிங்களப் பத்திரிகை ஒன்றை முஸ்லிம் சமூகம் ஆரம்பிக்க வேண்டும். அது வர்த்தக நோக்கம் மற்றும் இலாப நோக்கம் இல்லாவிட்டாலும் எங்களைப் பற்றிய தப்பபிப்பிராயங்களை குறைந்த மட்டத்தில்  தெரிவிக்கின்றதாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் ஒன்லைன் சிங்கள வானொலியாவது ஆரம்பிக்க வேண்டும்
நாங்கள் அப்படியான ஓர் ஊடக கம்பனியை நடத்துவதற்கு தனவந்தர்கள் உதவ முன்வருகிறார்கள் இல்லை. எவ்வளவோ தனவந்தர்கள் இருக்கிறார்கள். எவ்வளவோ கம்பனிகள் இருக்கின்றன. ஆனால் அதற்கு அக்கறை காட்டுகிறார்கள் இல்லை
உலகில் அல் - ஜஸீரா உருவானதன் விளைவாக முஸ்லிம் நாடுகளில் நடக்கின்ற செய்திகளை கூடிய விரைவில் அறிந்து கொள்ளுகின்றோம். அல் - ஜஸீரா இல்லாத போது மற்ற தொலைக்காட்சிகள் முஸ்லிம்களைப் பற்றிக் கூறுகின்ற பொய்களைத்தான் நம்பிக்கொண்டிருந்தோம்
இலங்கையிலும் இந்த கதிதான் நடக்கும். எங்களுடைய கட்டுப்பாட்டில் ஓர் ஊடகம் இல்லாவிட்டால் எங்களுடைய சமூகத்துடைய விடயங்களை மாற்று ஊடகங்கள் எப்படி பிரித்துக் கூறுமோ அதுதான் சர்வதேசத்திற்குப் போகும்.  

எமது சமூகத்துடைய இருப்பைப் பாதுகாப்பதற்கு ஊடகத்துறையை மேம்படுத்த வேண்டும்தனவந்தர்கள் அதற்கு உதவி செய்ய வேண்டும். அது, சிங்களம், ஆங்கிலம் என்ற பேதம் பாராது ஆரம்பிக்க வேண்டும். ஓரளவாவது எங்களைப் பற்றிய தப்பப்பிராயங்களை அதன் மூலம் நீக்க முடியும். என்று தெரிவித்தார்.

1 கருத்துரைகள்:

முஸ்லிம் சமூகத்தின் இன்றைய அவலநிலைமையும் அதற்கான தீர்வையும் சகோதரர் அமீன் அவர்கள் தௌிவாகக் கோடிட்டுக் காட்டியுள்ளார்கள். உடனடித் தீர்வும் நீண்டகாலத் தீர்வும் இங்கு முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இந்த சமூகத்தின் தனவந்தர்ககள் இதுபற்றி ஆழமாக யோசித்து ஏற்கனவே தாமதமாகியுள்ள இந்த முஸ்லிம் மீடியாவை அமைக்க தயாராவார்களா?

Post a Comment