Header Ads



முஸ்லிம்களுக்கு மாபெரும் அநீதி


எல்லை மீள் நிர்ணயமும்,  முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளின் வகிபாகங்களும் - கலாநிதி எச்.எஸ். ஹஸ்புல்லா

எல்லை நிர்ணயம் என்கின்ற விடயத்தில் முஸ்லிம் சமூகம் கவனத்திற்கொள்ளப்படாமை தெரிகிறது. உதாரணமாக கிராம சேவகர் பிரிவு, பிரதேச செயலகப் பிரிவு, உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் போன்ற கட்டமைப்புக்கள் முஸ்லிம்களுக்கு சவாலாகவே இருந்து வந்துள்ளன. முஸ்லிம்களை இனரீதியாக நோக்குகையில் அவர்கள் இந்த நாட்டில் வாழும் தன்மை ஏனையவர்களை விடவும் வித்தியாசமானது. முஸ்லிம்கள் நாடு முழுவதிலும் பரந்த அடிப்படையில் வாழ்கிறார்கள. இந்தப் பரந்து வாழும் தன்மையானது இனமையப்படுத்தலுடன் சேர்ந்து வருகின்ற போது அங்கு பிரச்சினைகள் வருகிறது. குறிப்பாக எல்லை மீள் நிர்ணய விடயத்திலும் பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளன.

இலங்கையில் ஏறக்குறைய 14,000 கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுகின்றன. இவற்றுள் 7,000 கிராம சேவகர் பிரிவுகளில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். சில இடங்களில் அதிகமாகவும் இன்னும் சில இடங்களில் குறைவாகவும் வாழ்கின்றார்கள். உதாரணமாக கிழக்கு மாகாணத்தில் 50 வீதத்திற்கும் அதிகமானவர்கள் வாழ்கின்ற கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. ஏனைய பகுதிகளில் முஸ்லிம்கள் பரந்து வாழ்கிறார்கள். இது பொதுமையானது. கிழக்கில் போருக்குப் பின்னர் முஸ்லிம்கள் ஓடத்தில் குவிந்து வாழ்கிறார்கள். ஏனைய பிரதேசங்களில் உதாரணமாக கொழும்பு மாவட்டத்தில் 10 வீதத்திற்கு அதிகமாகவும், கண்டி மாவட்டத்தில் 15 வீதத்திற்கு அதிகமாகவும் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள்.

எல்லை நிர்ணயம் செய்கின்ற போது உதாரணமாக மாகாண சபையை எடுத்துக்கொண்டால், பரந்து வாழ்கின்ற மக்களை எவ்வாறு ஒன்றிணைத்து ஒரு தேர்தல் தொகுதியாக மாற்றுவது என்கின்ற விடயத்தில் பிரச்சினை எழுகிறது. கிழக்கில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. இங்கு சனத்தொகைக்கு ஏற்ற தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணம் அல்லாத ஏனைய பகுதிகளில் பிரச்சினைகள் காணப்படுகின்றன.
மாகாண சபைக்கான எல்லை நிர்ணயமானது ஒரு சட்ட மூலத்தின் அடிப்படையிலேயே எமக்குத் தரப்பட்டுள்ளது. இறுதியாக மேற்கொள்ளப்பட்ட 2012ஆம் சனத்தொகை மதிப்பீட்டின் பிரகாரமே எல்லை மீள் நிர்ணயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த அடிப்படையில் நான் ஏலவே குறிப்பிட்ட சவால்களை மையமாகக் கொண்டு மாகாண சபைக்கான எல்லை நிர்ணயத்தை செய்யும் போது முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய தேர்தல் தொகுதிகளில் ஏறக்குறைய 50 வீதமானவை மாத்திரமே முஸ்லிம்களுக்கு கிடைக்கக்கூடிய தன்மையுள்ளது.

9 மாகாணங்களுள் 5 மாகாணங்களில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவங்கள் இல்லை. 25 மாவட்டங்களுள் 18 மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கு ஒரு பிரதிநிதித்துவமும் இல்லை. எனவே முஸ்லிம்களை பொறுத்தவரையில் எல்லை நிர்ணயம் என்கின்ற விடயத்தில் பாரதூரமான பிரச்சினைகள் உள்ளன.

இது எப்படி நடந்தது? நான் இரண்டு விடயங்களை குறிப்பிடுகிறேன். ஒன்று, சட்டம் தரப்பட்ட முறை இது. அதாவது குறுகியதொரு காலப்பகுதியில் முடிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. எமக்கு 4 மாத காலம் தரப்பட்டது. இது எமக்கு பல விதத்தில் இறுக்கத்தையும், flexibility இல்லாத தன்மையையும் தந்தது. மறுபுறத்தில் முஸ்லிம்கள் பிரதேச ரீதியாக செறிவின்றி வாழ்வதால் ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட சட்டத்தன்மை, எல்லோரும் சமமானவர்கள் என எடுக்கப்பட்ட தீர்மானத்தின் காரணமாக என்னால் அந்தக் குழுவில் இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாத ஒரு சூழ்நிலை காணப்பட்டது.

எல்லை மீள்நிர்ணயப் பணி ஆரம்பிக்கப்பட்ட சமயத்திலிருந்து நான் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற அங்கத்தவர்களின் ஆலோசணைகளை பெற்று வந்தேன். ‘உங்களால் முடிந்ததை செய்யுங்கள், எஞ்சியதை நாம் பாராளுமன்றில் பார்த்துக்கொள்கின்றோம்’ என அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.

எனவே தமிழர்களுக்கு அவர்களது விகிதாசாரத்திற்கு ஏற்ப பிரதிநிதித்துவங்கள் கிடைக்கக்கூடிய நிலைமைகள் இருக்க, முஸ்லிம்களை பொறுத்தவரையில் 50 வீதத்திற்கு கூடுதலான முஸ்லிம்கள் உள்ள இடங்களில் மாத்திரமே அவர்களுக்கான பிரதிநிதித்துவம் கிடைக்கின்ற சந்தர்ப்பங்கள் உள்ளன. இனரீதியாகப் பார்க்கின்ற போது முஸ்லிம்கள் பின்னடைவில் உள்ளார்கள்.

தற்போது மாகாண சபைகளில் 34 அங்கத்தவர்கள் உள்ளார்கள். இந்நிலையில் புதிய முறையில் அதையும் விட குறைவான உறுப்பினர்கள் தெரிவாகக் கூடிய பாதகமான நிலைமைகள் காணப்படுகின்றன.

திருகோணமலை மாவட்டத்தில் 2, மட்டக்களப்பு மாவட்டத்தில் 2, அம்பாறை மாவட்டத்தில் 3 என்ற அடிப்படையிலேயே பிரதிநிதித்துவங்கள் கிடைக்கக்கூடியதாக உள்ளது. அம்பாறையில் கல்முனை தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. கல்முனையோடும் சம்மாந்துறையோடும் காலாகாலம் இருந்து வந்த நாவிதன்வெளி தற்பொழுது உகனயோடு இணைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் துரதிஷ்டமான தன்மை. புத்தளத்தில் 50 வீதம் முஸ்லிம் பிரதிநிதித்துவம் உள்ளது. இருந்தபோதிலும் இங்குள்ளவர்களுள் சுமார் 40 வீதமானவர்கள் வடமாகாணத்தை சேர்ந்த முஸ்லிம்கள்.

இது சனத்தொகை அடிப்படையில் செய்யப்பட்டதாகும். நாளை தினம் வாக்காளர் அடிப்படையில் எவ்வாறான நிலைமைகள் வரப்போகிறது என்பது சவாலாக உள்ளது. கொழும்பில் 52 வீதம் உள்ளது. எனினும் இங்கு பல கட்சிகள் போட்டியிடுகின்ற போது அதுவும் எவ்வாறு அமையும் என்பது தெளிவில்லை. கண்டியில் அகுரணையையும் பூஜாபிடிய பிரதேசத்தையும் இணைத்தால் மாத்திரமே அங்கு 56 வீதம் முஸ்லிம்களுக்கு கிடைக்கும். ஆனால் பூஜாபிடிய மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எனவே 13 தேர்தல் தொகுதி என்பது 50 வீதத்திற்கு அதிகமாக இருந்தாலும் அவையும் கூட எமக்கு முழுமையான பிரதிநித்துவத்தை தருவதில்லை. எனவே 14 மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மாகாணம், வடமாகாணம், ஊவா மாகாணம், சப்ரகமுவ மாகாணம் மற்றும் வடமேல் மாகாணம் ஆகிய 5 மாகாணங்களிலும் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவங்கள் இல்லை. இங்கு எல்லா மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் உள்ளார்கள்.

இந்த மாகாணங்களில் முஸ்லிம்கள் வாழ்கின்ற மிகப்பெரிய பரப்பான பகுதிகளில் கூட இந்தத் தேர்தல் முறைக்கூடாக பிரதிநிதித்துவங்களை பெற முடியாமல் உள்ளது. முஸ்லிம்களை பொறுத்தவரையில் பழைய முறைமை சில போது சாதகமாக இருக்கலாம்.
முஸ்லிம்களது பிரதிநிதித்துவம் எங்கெங்கு இல்லாமல் போனதோ அந்தந்த மாவட்டங்களில் முஸ்லிம்களது பிரதிநிதித்துவங்களை பெறக்கூடிய சூழ்நிலை இருந்தும் கூட எங்களுக்கு தரப்பட்ட அளவுகோல் (Criteria) படி, அது முடியாமல் போனது. எல்லா மக்களும் ஒரே மாதிரியாக பார்க்கப்பட வேண்டும் என்பதே அந்த அளவுகோல். பொலன்னறுவையில் நிச்சயமாக முஸ்லிம்களுக்கான ஒரு தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டிருக்க முடியும். ஆனால் அங்கு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்றும், ஜனாதிபதி பிறந்த இடமென்றும் கூறி அங்கு முஸ்லிம்களுக்கான தேர்தல் தொகுதி உருவாக்கப்படவில்லை.

காலி மாவட்டத்தில் 4 வீதத்திற்கும் குறைவான முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். எனினும் நகர்ப்பகுதியில் முஸ்லிம்கள் செறிவாக உள்ளனர். அந்தச் செறிவை சாதமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை என்னிடம் முன்வைக்கப்பட்டது. என்றாலும் அந்தத் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டன. இவ்வாறு பல இடங்களில் முஸ்லிம்களுக்கான தொகுதிகள் உருவாக்கப்பட்டிருக்கலாம். மாத்தளை, அநுராதபுரம், கேகாளையிலுள்ள மாவனெல்லை பிரதேசத்தில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்கிறார்கள். அங்கும் ஒரு தொகுதியை உருவாக்கியிருக்கலாம். இதுவல்லாமல் கண்டியில் அகுரணை தொகுதியொன்றை உருவாக்கியிருக்கலாம். அதற்கு பூஜாபிடியவிலிருந்தும் இணைக்கப்பட வேண்டும். எனவே எங்களுக்கு பல இடங்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளது.

முசலியை மையமாகக் கொண்டு ஒரு தேர்தல் தொகுதி உருவாக்கும் படி கோரிக்கை விடுக்கட்டது. எனினும் சனத்தொகை ரீதியாக ஒன்றில் முசலியும் நானாட்டனும் இணைக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் முசலியுடன் ஏனைய பகுதிகள் இணைக்கப்பட வேண்டும். இந்தக் கட்டத்தில் நானாட்டனோடு முசலி இணைக்கப்பட்டால் எதிர்காலத்தில் எப்படியும் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்காது. இந்தப் பின்னணியில் தமிழர்கள் சிபாரிசு செய்த மடு, மாந்தையை மையமாகக் கொண்டு பெரியதொரு தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்துக்களுக்கு பிரதிநிதித்துவம் ஒன்றை பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே இது உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்க விடயம். இது தொடர்பிலும் பாராளுமன்றத்தில் கதைக்க முடியும்.

இதேநேரம் சுமார் 140,000 வடக்கு முஸ்லிம்களுள் ஏறக்குறைய 30 வீதமானவர்கள் வடக்கில் உள்ளார்கள் என்றும் ஏனையவர்கள் தெற்கில் உள்ளார்கள் என்றும் வைத்துக்கொண்டால், ஒரு 8 வருட காலத்தில் வடபகுதிக்கு இம்மக்கள் திரும்பி வருவார்கள் (sunset clos) என்று வைத்துக்கொண்டால் ஆகக்குறைந்தது 2 பிரதிநிதிகளையாவது வடக்கு முஸ்லிம்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும். இந்த விடயத்தையும் பாராளுமன்றத்திற்கூடாக சாத்தியப்படுத்திக்கொள்ள முடிகின்றது.

நீண்ட காலமாக அதகதிகளாக உள்ள மக்களுக்காக வேண்டி சன்செட் முறையை வேண்ட முடியும். பல நாடுகளில் இது பின்பற்றப்பட்டு வருகின்றது.

எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையில் கைச்சாத்திடுவதா? இல்லையா? என்கின்ற கட்டத்தில் நான் இருந்த போது சமூக ரீதியான ஆர்வமுள்ள சிலர் இதில் கைச்சாத்திட வேண்டாம் என்றும், அப்போது முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி வெளியே தெரிய வரும் என்றும் கூறினார்கள். உடனடியாக நான் சகல முஸ்லிம் அமைச்சர்களுடன் தொடர்புகொண்டேன். அதன்போது அவர்கள் நீங்கள் கைச்சாத்திடுங்கள், பாராளுமன்றத்தில் நாம் பார்த்துக்கொள்கின்றோம் என்றார்கள். அமைச்சர் ரிஷாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா, அமைச்சர் ஹலீம் போன்றவர்கள் இந்த அறிக்கையில் கைச்சாத்திடுமாறு கூறினார்கள்.

நான் எல்லோருடனும் தொடர்பாக இருந்தேன். தொடர்ச்சியாக நான் பாராளுமன்ற உறுப்பினர்களை தொடர்புகொண்டேன். அவர்கள் எனக்கு கூறிய விடயம் தான் நீங்கள் முடியுமானதை செய்யுங்கள் பாராளுமன்றில் நாம் பார்த்துக்கொள்கின்றேன் என்பது. எனவே தற்பொழுது இந்த விடயத்தை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன். பாராளுமன்ற மட்டத்தில் இந்நாட்டு மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நான் வலியுறுத்துகிறேன்.

4 comments:

  1. முஸ்லிம்களுக்கு விகிதாசார முறை பயனுள்ளது.அதை இல்லாமலாக்கவே இந்த தொகுதி முறை.கண்டி மாவட்டத்தில் மாகாண் சபைக்கு 4,5 பேர் தெரிவாகுவார்.ஆனால் இனி எதிர்பார்க்க முடியாது.முஸ்லிம்கள் நாடுமுழுவதும் பரந்து அடர்த்தி குறைந்து வாழ்வது பல வகைகளில் பாதகமானது.தமிழர்கள் ஓரிடத்தில் செரிந்து வாழ்வதால் அவர்களுக்கு இந்த முறை பிரச்சினையில்லை.

    ReplyDelete
  2. நீங்கள் பாராளுமன்றம் அல்ல ஐநா சபைக்கு போனால் கூட இலங்கை அரசாங்கம் "sunset clause"ஐ ஏற்றுக்கொள்ளாது. ஏனெனில் 1981இன் படி இலங்கை தமிழர்களின் சனத்தொகை மொத்த சனத்தொகையில் 23%. அதாவது புலம் பெயர் சமூகங்களின் எண்ணிக்கையே இப்போதைக்கு சுமார் 18 லட்சம் தட்டும். அவர்களுக்கு வட கிழக்கிலே தேர்தல் தொகுதி உருவாக்கப்படுமானால் முஸ்லிம் தொகுதிகளை விரல் விட்டும் எண்ணமுடியாது. அதுமட்டுமல்லாது திடீரென சட்டவிரோத குடியேற்றத்தாலும் யுத்தத்தினால் பிற இன இழப்பால் சடுதியாக முஸ்லீம் சனத்தொகை கூடிய மாவட்டங்களிலும் 1981ஆண்டு இருந்த சனத்தொகை மதிப்பீடை கருத்தில் கொண்டு தேர்தல் தொகுதிகள் மறுசீரமைக்க படல் வேண்டும்.
    இதட்குள் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் உள்ளடங்கும்.
    மேலும் வடகிழக்கில் இனரீதியாக முஸ்லீம் தொகுதிகள் அமைக்கப்பட்டால் மேலும் அந்த பூர்வீக மக்களுக்கு இந்நாட்டு அரசாங்கங்கள் மீது சலிப்பு தான் ஏட்படும். அது மாத்திரமின்றி புத்தளம் மாவட்டத்தில் தமிழர்களுக்கென ஒரு தொகுதியும் இல்லையென்பது வேதனைக்குரிய விடயம் தான். இன்னும் பல தமிழ் கிராமங்கள் சிலாபம் தொட்டு புத்தளம் வரை முஸ்லீம் அரசியல் வாதிகளால் விழுங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன

    ReplyDelete
  3. முஸ்லீம் பிரதி நிதித்துவம் என்பது இந்த நாட்டிலே என்ன செய்கின்றது
    எதை சாதித்தது என்று உற்று நோக்கினால் பெரிதாக அதனால் எதையும் சாதிக்க முடியாது என்றுதான்
    சொல்ல வேண்டும். தற்போது 21க்கு மேற்பட்ட முஸ்லீம் பிரதிநிதித்துவம்
    இருந்தும் என்ன நடந்தது என்பதை நாம் எல்லோரும் அறிந்து கொண்டோம்.
    இந்த நாட்டிலே சிறுபான்மையினராக
    எல்லாபாகங்களிலும் பரந்து சிதறி வாழ்கின்ற முஸ்லீம்கள் அரசியல்ரீதியாக தனித்து பயணிக்க
    முற்பட்டதன் விளைவே நாம் இன்று அனுபவிக்கும் அச்சபாடான நிலைமையாம். எமது நாட்டிலே முஸ்லீம்களுக்கு ஒரு இடர் எங்கேயாவது ஒருமூலையில் ஏற்படுமாக இருந்தால் அந்த இடத்தை
    பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதி உடன் குரல் கொடுக்கூடியதாக அவர் அண்மையில் இருக்கவேண்டும்,அத்தோடு அவரை
    தெரிவு செய்வதில் முஸ்லீம்களுக்கு
    நேரடியான பங்களிப்பும் இருக்க வேண்டும். இதற்கு தொகுதி முறையே
    சிறந்ததாகும். அந்த பிரதிநிதி மாத்திரமல்ல அவர்சார்ந்த கட்சி அதன்
    தலைமை கூட குரல் கொடுப்பது மட்டுமல்ல உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தமும்
    உருவாகும். ஏனெனில் அங்கு சிறுதளவான வாக்கு வங்கி முஸ்லீம்களிடம் இருந்தாலும் அங்கு
    பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை
    தீர்மானிக்கின்ற சக்தியாக அதுமாறக்கூடும் என்பதே. மாவட்ட ரீதியான விகிதாசார பிரதிநிதித்துவ
    முறை முஸ்லீம் கட்சிகளை உருவாக்கி
    இனத்துவேசத்தை வளர்த்து நாம் பெறும் பிரதிநிதித்துவங்கள் என்ன
    செய்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் கண்கூடாக கண்டுகொண்டிருக்கின்றேம்.எனவே வடகிழக்குக்கு வெளியே வாழ்கின்ற
    முஸ்லீம்கள் தொகுதி முறைமையின்
    கீழ் தனது அரசில் பயணத்தை தேசிய
    ரீதியில் இணைந்து முன் கொண்டு செல்வதே உத்தமமாகும்.முஸ்லீம்கள்
    மத்தியில் சிறந்த தலைமைகள் உருவாகினால் பெரும்பான்மை மக்களே அவர்களை தெரிவு செய்த
    வரலாறுகள் உண்டு.இந்த நாட்டை
    பொறுத்தவரை அரசியல் தலைமை
    என்பது இன,மத,மொழிகளுக்கப்பால்
    நற்பண்புகளை கொண்டு தீர்மானிக்கப்படுவது அவசியமாகும்.
    வடகிழக்கிலும் வாழ்கின்ற முஸ்லீம்களுக்கும் இவைகள் பொருத்தமானதாகும்.
    கலாநிதி ஹஸ்புல்லா அவர்களே முஸ்லீம் பிரதிநிதித்துவம் பற்றி
    நீங்களே குழம்பியுள்ளீர்கள்.
    இது ஒரு சிக்கலானது.வட கிழக்குக்கு
    வெளியே முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை
    பற்றிசிந்திக்காமல் தங்கள் தங்கள் பிரதேசங்களில் பிரதிநிதிகளை தெரிவதில் தீர்மானிக்கும் சக்தியாக
    முஸ்லீம்கள் இருந்து பெரும்பான்மை
    அரசியல் வாதிகளின் அமிமானத்தை
    பெற ஆலோசனை வழங்குங்கள்
    இதுவே தற்போதய சூழ்நிலைக்கு
    உகந்ததாகும்.

    ReplyDelete
  4. நாட்டின் முன்னேற்றம் முக்கிமா?, முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் முக்கியமா?

    விகிதாசார தேர்தல் முறையை முற்றாக ஒழிப்பதே நாட்டின் நலத்திற்கு மிக சிறந்தது.

    உலகின் மிக பெரிய ஜனநாயக நாடுகளான இந்தியா, அமெரிக்கா, UK ஒன்றிலும் இந்த “ஏமாற்று” விகிதாசார தேர்தல் முறை இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.