April 10, 2018

குர்ரத்து அஃயுனை எவ்வாறு அடைந்து கொள்ளலாம்?

-ஷfபீக் zஸுபைர்-

காணொளியில் வீடியோ தோன்றும் மழலைகள் தமக்கிடையில் மாறி மாறி செய்து கொள்ளும் “முஆனகஹ் -  கட்டித்தழுவுதல்”  காட்சி உங்களை பரவச படுத்தி இருக்கலாம். ஆம் அதனை அவர்கள் அவர்களது வீட்டு சூழலிலோ, முன்மாதிரியான ஒரு சபையிலோ உள்ளீர்திருக்க கூடும்.  

உண்மையில் இந்த காணொளி என்னை அதிகம் சிந்திக்க வைத்தது, எழுத வைத்தது. சற்று கவனமாக கீழுள்ளவற்றை படியுங்கள். பிள்ளைகள் அள்ளாஹ்வினால் வழங்க பட்ட மிக பெரிய அமானிதங்கள். அவர்கள் விடையத்தில் அள்ளாஹ் எம் அனைவருக்கும் தெளிவை தருவானாக. 

எமது மார்க்க ஈடுபாடு, இறையச்சம், சமூக சிந்தனையும் செயற்பாடுகளும், தொழுகை, குர்ஆன் திலாவத், திக்ரு அவ்ராதுகள், பிறருக்கு உதவுதல், ஏழைகளை அறவனைத்தல், பிறரின் நலவுகளை மட்டுமே பேசுதல், ஒழுக்கம், பிறரை மதித்து மரியாதை செய்தல், நாம் அன்றாடம் எமது பிள்ளைகளுக்காக நேரம் ஒதுக்கி அவர்களுடன் விளையாடுதல், அவர்களது கற்றல் நடவடிக்கைகளுக்கு உதவி புரிதல் உள்ளிட்ட இன்னோரன்ன எமது நற்பண்புகளை அவர்கள் உள்ளீர்க்கும் போது அவர்கள் சிறந்த பிரஜைகளாகவும், ஆளுமை மிக்கவர்களாகவும் உருவாகின்றனர்.  

சினிமா, இசை, தொடர் நாடகங்கள், Facebook WhatsApp போன்றவற்றிலேயே மூழ்கி இருத்தல், சுய நலம், பிறரின் குறைகளை பேசி கொண்டிருத்தல், ஏழைகளை அரவணைக்காமை, எமக்குள்  உள்ள சச்சரவுகளை எமது  பிள்ளைகளின் முன்னிலையில்  விவாதித்து கொண்டிருத்தல், சமூக சிந்தனை இன்மை, தொழுகையில் பொடுபோக்கு, குர்ஆனை விட்டும் விலகி இருத்தல், பொய் பேசுதல் உள்ளிட்ட கெட்ட குணங்கள் எம்மிடம் குடிகொண்டிருக்குமிடத்து அவை அனைத்தையும் எமது பிள்ளைகள் அப்படியே உள்ளீர்த்து சமூகத்தில் கெட்ட பிரஜைகளாகவும் உருவாகலாம். 

குழந்தைகள் மற்றும்  பிள்ளைகளின் முதற் பாசறை தாயின் மடி, இரண்டாம் பாசறை வீட்டு சூழல் என்பதை பெற்றோர்களாகிய நாம் ஒரு போதும் மறந்து விடாதிருப்போம். எமது ஒவ்வொரு அசைவில் இருந்தும் நல்லதையோ, கெட்டதையோ அவர்கள் கற்று கொண்டே இருக்கிறனர். அவர்களை மிக சிறந்த  பாடசாலைகளிலும்  மார்க்க பள்ளி கூடங்களிலும் நாம் சேர்த்து விடலாம்.  எனினும் அங்கு அவர்கள் கற்பதை விட பண்மடங்கு அதிகமாக கற்பது (குறிப்பாக வாழ்க்கை பாடத்தை அவர்கள் கற்பது)  பெற்றோர்களாகிய எங்களிடமிருந்தே என்பதை மனதில் ஆழமாக நாம் பதித்து கொள்ள வேண்டும். அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் வரை பெற்றோர்களாகிய எம்மையே அவர்கள் தமது ஹீரோக்களாக, ஹீரோயின்களாக  நோக்குகின்றனர்.   

பிள்ளைகள் என்று நான் சொல்வது ஓடி ஆடி விளையாடும் பருவத்தை மட்டுமல்ல. அவர்களின் பிறப்பில் இருந்து எமது இறப்பு வரைக்குமான காலம் முழுவதும் எமது  ஒவ்வொரு நகர்வுகளும் அவர்களை உருவாக்குவதில் செல்வாக்கு செலுத்த கூடியவைகளே. பிள்ளைகளில் எமது கனவுகள் பிரதிபலிக்க வேண்டுமெனில் அள்ளாஹ்வும், அவனது தூதரும் விரும்பாத எமது அனைத்து விருப்பு வெறுப்புகளையும் நாம் உடன் விட்டொழித்தே ஆக வேண்டும். 

எமது பிள்ளைகளுக்காக நாம் அதிகம் புரிகின்ற துஆ பிராத்தனைகளும் கற்று கொடுக்கும் ஒழுக்கங்களும் இறை அச்சமும் அவர்களை உருவாக்கும். அதே போன்று எமது வாழ்நாளிலும் எமது மரணத்தின் பின்பும் எமக்காக தனிமையில் கண்ணீர் வடித்து அள்ளாஹ்விடம் மன்றாடுகின்ற பிள்ளைகளாக அவர்களை உருவாக்குவோம். குறிப்பாக நூறு விகிதம் உத்தரவாத படுத்த பட்ட ஹலாலான எமது  சம்பாத்தியத்திலிருந்து மட்டுமே  எமது பிள்ளைகளுக்காக செலவு செய்வோம், உண்ண கொடுப்போம். அள்ளாஹ் ஸூரா fபுர்க்கானில் குறிப்பிடுகின்ற (குர்ரத்து அஃயுன் - கண்குளிர்ச்சியை) அவர்களில் நாம் கண்டு விட்டே மரனிக்க வேண்டும், நாளை மறுமை நாளிலும் அவர்கள் மூலம் குறித்த கண்குளிர்ச்சி  நாம் கண்டாக வேண்டும் என்பதை  இலக்காக கொண்டு வாழ பலகி கொள்வோம்.  

பிள்ளைகளுக்கு போதுமானளவு கல்வி அல்லது செல்வத்தை கொடுத்து விடுவதை மட்டுமே இலக்காக கொண்டு வாழ்ந்த  அதிகமான பெற்றோர் தமது தள்ளாத பருவ காலத்தில் குறித்த பிள்ளைகளை நினைத்து கண்ணீர் வடித்து வருவது இன்று சமூகத்தில் பாரியளவில் அதிகரித்திருப்பது வேதனைக்குறிய உன்மையாகும். அவ்வாறான பிள்ளைகள் பின்பு தமது பெற்றோரை மறந்து கவனியாது, அவர்களை கை கழுவி விட்டு எங்கோ ஓர் இடத்தில் அல்லது எங்கோ ஓர் நாட்டில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பது  ஒருபோதும் குறித்த பெற்றோருக்கு குர்ரத்து அஃயுனை தர மாட்டாது. நாம் எவ்வளவு தான் கல்வி அல்லது செல்வத்திற்கான வழிகளை எமது பிள்ளைகளுக்காக  ஏற்படுத்தி, அவர்களை உயர் நிலைக்கு கொண்டு சென்ற போதிலும் எமது கடைசி காலத்தில் அவர்கள் எம்மை கைவிட்டு விடுவதும் எமது தள்ளாத வயதில் அவர்கள் எம்மை தனிமையிலேயே  துடிக்க விட்டுவிட்டு, தூர விலகி இருந்து தமது காரியங்களில்  முழு கவனத்தையும் குவித்தருப்பதும் இன்றைய உலகில் அதிகமான பெற்றோர் சந்தித்து வரும் மிகவும் மனவேதனைக்குறிய உன்மையாகும்.     

உங்களது தள்ளாத பருவத்தில்  உங்களுடன் இருந்து,  உங்களை அரவணைத்து , உங்கள் உள்ளங்களை குளிர வைக்க அவர்களால் முடியவில்லையெனில் அந்த குற்றத்தை  சிலவேளை  நீங்களும் உங்கள் பெற்றோர்களுக்கு இழைத்திருக்கலாம் அல்லது பெற்றோர் பெரியோரை மதிக்க, அரவணைக்க, அது விடையத்தில் ஷரீஆவின் நிலைப்பாட்டை கற்று கொடுக்க நீங்கள் தவறி இருக்கலாம். 

இறுதியாக:   
உங்கள் பிள்ளையின் பெயருடன்  அவனது கல்வி அல்லது பதவிக்கான பட்டங்கள் ஒட்டிக் கொண்டிருக்கலாம். வரவேற்க தக்கது. அதே வேலை நீங்கள் மரணித்தால் உங்களை முன்னின்று அவன் தனது  கரங்களால் குழிப்பாட்டி, அவனே கபன் செய்து, தோளில் சுமந்து சென்று, அவனே முன்னின்று உங்களை தொழ வைத்து, அவன் உங்கள் குழிக்குள் இறங்கி உங்களை நல்லடக்கம் செய்து விட்டு உங்கள் பாவ மண்ணிப்பிற்காகவும் அந்தஸ்திற்காகவும் அள்ளாஹ்விடம் அழுது பிரார்த்திக்கும் அளவு (அவற்றை ஒரு சிறு தவறும் இழைக்காது செய்து முடிக்கும் அளவு)  அவனை நீங்கள் உருவாக்கி இருப்பது நீங்கள் உங்கள் மரணத்திற்கு முன்பு அவனிடம் ஏற்படுத்தி இருக்க வேண்டிய மிக கட்டாய, அடிப்படை  அறிவாகும். அவ்வாறான (அடிப்படை மார்க்க அறிவையேனும் கற்று கொண்ட)  பிள்ளைகளை  உங்களால் உருவாக்கி விட்டு மரணிக்க  முடியாது போனால் அள்ளாஹ்வினால் நீங்கள் நிச்சயம் விசாரனைக்கு உற்படுத்த படுவீர்கள், தண்டிக்க படுவீர்கள்.  

யா அள்ளாஹ்! 
 நீ எதிர் பார்க்கின்ற இரு வாழ்க்கைக்குமான கண்குளிர்ச்சியை (இன்மையிலும் மறுமையிலும்) நாம் எமது பிள்ளைகள் மூலம் கண்டு பூரிப்படையும் பாக்கியத்தை எம் அனைவருக்கும் தந்தருள்வாயாக. 

2 கருத்துரைகள்:

Jazakallah Jaffna Muslim for publishing the Article.

Very informative article. Jazakallahu hairan.

Post a Comment