Header Ads



பொதுநலவாய அமைப்பின் செயலாளருக்கு, கையளிக்கப்பட்ட கடிதம்


‘இலங்கையின் இனவிரோதச் செயற்பாடுகளுக்கு எதிரான அரங்கு’ (The Forum Against Racism in Sri Lanka - FARSL)  என்ற அமைப்பினைச் சார்ந்த நாம்,  கடந்த மாதம் இலங்கையில் முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக, இலண்டனில் மேற்கொண்ட தீர்மானத்தினை தங்கள் கவனத்திற்குத் தருகிறோம்.

இம் மேன்முறையீடு,  பிரித்தானியாவிலுள்ள இலங்கையை சேர்ந்த, சகல இனச் சமூகத்தினரும் இணைந்து மேற்கொண்ட தீர்மானமாகும். இதனை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சரவைச் செயலாளர் என்போருக்கும் அனுப்பி வைத்துள்ளோம். இதற்கான  எழுத்து மூலமான பதில் எமக்கு இதுவரை கிடைக்காமையால்,  அங்கு சமூக அமைதி நிலமைகள் மேலும் மோசமடையாமல் தடுக்கும் நோக்குடன் பொதுநலவாய அமைப்பினதும் , அதிகாரிகள் மற்றும் அதன் உறுப்புரிமை நாடுகளின் பிரதிநிதிகளினதும் கவனத்திற்கும் இதனை தர  விளைகிறோம்.    

இலங்கை 1948இல் சுதந்திரம் பெற்றது முதல் இதுவரை இனப் படுகொலைகளைத் தடுத்து ,சட்டம் ,  ஒழுங்கை நிலைநாட்ட எந்த அரசாங்கமும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அத்துடன் இனவிரோத உணர்வுகளைத் துhண்டுவோர், அதில் பங்கேடுப்போர் எவரும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை.  நல்லாட்சி என்ற பெயரில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னரும் மனித உரிமைகள், அரசியல் உரிமைகள் போன்றவற்றை மீறுவோர் சட்டத்திற்கு வெளியில் இன்னமும் செயற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கு இலங்கையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பல்வேறு சம்பவங்களை ஆதாரமாகத் தர முடியும்.

 தங்களுக்கு தெரிவிக்கப்படும் இம் மேன்முறையீடு பொதுநலவாய சமூகத்தினதும்,  இலங்கை அரசியல் யாப்பினதும் ஜனநாயகக் கோட்பாடுகளின் விழுமியங்களில் தெரிவிக்கப்பட்டவாறு சட்டப்படியான ஆட்சி, மனித உரிமை, நல்லாட்சி மற்றும் சமூக  பொருளாதார அபிவிருத்தி என்ற அடிப்படைகளிலேயே தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் , இலங்கையினால் அங்கீகரிக்கப்பட்ட சர;வதேச சிவில் பிரமாணங்களின் பிரகாரம் தரப்படுகிறது. ஆகவே இவற்றினை கடைப்பிடிப்பது, இதன்பிரகாரம் செயற்படுவது முக்கியமானது. 

 21 மார்ச் 2018 , இலண்டனில் மேற்கொண்ட தீர்மானங்கள்
1. மேற்படி வன்செயலின் போது பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் முழுமையான நிவாரணத்தை உடனடியாக அரசாங்கம் வழங்க வேண்டும். அவற்றில் இழப்பீடு,  நஷ்டஈடு, புனருத்தாபனம் என்பனவற்றோடு மீண்டும் அத்தகைய நிகழ்வுகள் நடைபெறாது என்ற உத்தரவாதமும் உள்ளக்கப்பட வேண்டும்.
2. அனைத்து இன மக்களுக்கும், இனவாத நோக்கிலான தாக்குதல்களிலிருந்து போதுமான பாதுகாப்பு வழங்கப்படுதல் வேண்டும். அத்தகைய இனவாத நோக்கத்துடனான தாக்குலைத் தூண்டுகின்ற அமைப்புகளையும் இனவெறுப்பு பேச்சுகளை மேற்கொள்கின்ற அமைப்புகளையும் இனவெறுப்புக்கு தூபமிடுகின்ற அமைப்புகளையும் சட்டரீதியாக தடைசெய்வதுடன் எந்த ஒரு இனவாத அமைப்புடனும் நேரடியாகவோ மறைமுகமாக தொடர்பு வைத்திருந்தமை நிரூபிக்கப்பட்ட மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள், எத்தகைய உயர்ப்பதவிகளை வகித்த போதும்- எவரையும் பதிவியிலிருந்து மீளழைப்பதற்கு அல்லது பதவியிலிருந்து அகற்றுவதற்கு ஏற்புடையாக பொறிமுறை ஒன்று உருவாக்கப் படுதல் வேண்டும்.

3. இனவாத வெறுப்பு குற்றச்செயல்கள் சார்புடை நோக்கத்தின் அடிப்படையில் புரியப்பட்ட கிரிமினல் குற்றங்களாக வரையறுக்கப்பட்டு அவற்றைக் கையாள்வதற்கு ஏற்றவகையில் கிரிமினல் சட்டங்களும் கொள்கைகளும் வகுக்கப்படுவதோடு இன வன்முறையில் அல்லது மதரீதியான வன்முறையில் பங்குகொள்வோர், ஈடுபடுவோர் , அதனைத் தூண்டுவோர், அதற்கு அனுசரணை வழங்குவோர் ஆகியோருக்கு எதிராக கிரிமினல் சட்டநடிக்கை மேற்கொள்ளப்படுதல் வேண்டும். அத்துடன் அத்தகைய வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்படுவதுடன் அதற்கான போதிய நிதி ஒதுக்கீடு வழங்கப்படுதல் வேண்டும். தண்டனை விதிவிலக்கு காலச்சாரம் ஒழிக்கப்பட்டு அனைவரும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுதல் வேண்டும்.
4. தீரா பாகுபாடுகளை நிவர்த்திசெய்யும் விதத்திலும் , ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட ஏற்பாடுகளை வழங்கக் கூடிய விதத்திலும் அரசியல் யாப்பில் மாற்றங்கள் செய்யப்படல் வேண்டும். அதேவேளை விசேட உரிமைகளையும் பாதுகாப்பையும் வழங்கும் வகையில் சட்டங்களும் சட்டமூலங்களும் உருவாக்கப்படுதல் வேண்டும்.

5. சாட்சிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறிமுறையுடன் கூடிய சகல சமூகங்களையும் சேர்ந்த ஆணையாளர்களைக் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படுதல் வேண்டும்.. இவ்வாணைக்குழுவின் நோக்கம் உண்மையை மூடிமறைப்பதாகவோ சம்பந்தப்பட்டவர்களை பாதுகாப்பதாகவோ ஒரு போதும் இருக்க முடியாது. விசாரணை ஆணைக்குழு சட்டத்தை விரைவில் அமுல் படுத்தத் தவறிய பாதுகாப்புப்பிரிவினர்களின் செயற்பாடுகள்  தொடர்பாகவும், வன்முறையில் ஈடுபட்டோர் ,பங்குகொண்டோர் ,அனுசரணை வழங்கியோர், தூண்டியோர் ஆகியோரது ஈடுபாடு குறித்தும் உண்மையாகவும் முழுமையாகவும் விசாரணை செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதாக அமைதல் வேண்டும்.

6. ஐசீசீபிஆர் சட்டத்தை முழுமையாக ஏற்று நடைமுறைப்படுத்தவும் ,இனவெறுப்பு பேச்சுகளையும், தீவிரவாத மத அமைப்புகளையும் தடை செய்யவும் ,குற்றமிழைத்தோரை சட்டத்தின் முன் நிறுத்தவதற்கு ஏற்ற சட்டங்களை உருவாக்கவும், இழைக்கப்பட்ட சேதங்களுக்கான நஷ்ட ஈட்டை அதில் ஈடுபட்டோர், தூண்டியோர் ,அனுசரணை வழங்கியோர் ஆகியோரிடமிருந்து அறவிடக் கூடிய விதத்தில் அதற்கான சட்டங்களை உருவாக்குவதற்காகவும் அனைத்து கட்சிகளினதும் தலைவர்கள் கலந்துகொள்ளும் சர்வகட்சி மாநாடு ஒன்றிணைக் கூட்ட வேண்டும்.
7. பொலிசிலும் இராணுவத்திலும் ஒரு இனம் மாத்திரம் எண்ணிக்கையில் தனியாதிக்கம் செலுத்துகின்ற அசமத்தவத்தை சரிசெய்யும் விதத்தில் இவ்விரு சேவைகளிலும் ஏனைய சமூகத்தைச் சேர்ந்தோர் சேர்த்துக்கொள்ளப்படுதல் வேண்டும். அத்துடன் அவசரநிலைகள் ஏற்படும் தருணங்களில் இன முறுகல் நிலையை அல்லது இன வன்செயலைக் கையாள்வதற்காக கடமையில் ஈடுபடுத்தப்படும் இராணுவத்திலும் , பொலிஸ் பிரிவிலும் ஒரு இனத்தினைச் சேர்ந்தவர்கள் ஐம்பது சதவீதத்திற்கு அதிகமாக அதில் இடம்பெறக்கூடாது என்பதை நடைமுறைப்படுத்த விசேட ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டும்.
8. நைஜீரியா நாட்டில் இருக்கும் சமாதான படை போன்றதோர் சிவில் அமைதி காவலர் பிரிவு ஒன்று பல்கலைக்கழக பயிலுனர் பட்டதாரிகளைக் கொண்டு உருவாக்கப்படுதல் வேண்டும். இவர்களுக்கு இராணுவபயிற்சி வழங்காது சமூக உறவு தொடர்பாக பயிற்சியளிக்கப்பட்டு அவர்கள் சாராத பிற சமூகங்கள் மத்தியில் ஒருவருட காலம் வாழ்ந்து அங்குள்ள சமூக அமைப்புகளுடன் இணைந்து பொதுச் சேவையில் ஈடுபடுத்தப்படுதல் வேண்டும். இதன்மூலம் சமூகங்களுக்கிடையிலான தொடர்பு பரிமாற்றமும் புரிந்துணர்வும் நெருக்கமடைந்து இனங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படுத்த வழிவகுக்கவேண்டும்.
9. பாடசாலை பாடவிதானத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்தி ஒருவகையான இனவாத சித்தாந்தத்தை உருவாக்கி மாணவர்களின் சிந்தனையையும் முழு சமுதாயத்தின் சிந்தனைப் போக்கையும் அதன் மூலம் வழிகாட்டும் நிலைமை முடிவுக்குவரவேண்டும். அதற்கு பதிலாக பாடசாலை பாட விதானங்கள், மத- இன சகிப்புத்தன்மையை ஊக்குவித்து; வேறுபட்ட மதத்தினரிடையே சகவாழ்வுக்கான பக்குவத்தை ஏற்படுத்தும் விதத்தில் சீர்திருத்தம் செய்யப்படுதல் வேண்டும்.
மேற்குறித்த அம்சங்கள் தொடர்பாக இலங்கை அரசை நோக்கி முறையீடுசெய்யும் அதேவேளை எண்ணிக்கையில் குறைந்த தொகையினராகிய சமூகங்களின்மீது தொடுக்கப்படும் பின்வரும் சகலவிதமான இனவிரோதச் செயற்பாடுகளை மீண்டும் உருவாகாது தடுக்குமாறு வேண்டுகிறோம்.
அத்துடன் , பின்வருவனவற்றையும் உடனடியாக நிறைவேற்றுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்:

*பயங்கரவாத தடைச்சட்டம் அல்லது வேறுவிதமான வகையில் இரகசிய தடுப்புமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்தல்.
அரசு சட்டவாக்கத்துறை,  நீதித்துறை என்பன கைது செய்யப்பட்டவர்களை அவரவர் குடும்பங்களிடம் ஒப்படைக்கத் தவறியுள்ளதாகச் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஒன்பது வருடங்களுக்கும் மேலாக அரசு அவர்களைத் தனது பாதுகாப்பில் வைத்திருந்தும் அதற்கான பொறுப்பை ஏற்க மறுத்துவருகிறது. சுயாதீனமான விசாரணையை நடத்த மறுப்பதும் அதற்கான பொறுப்பை அரசு ஏற்க மறுப்பதும் மக்களை ஏமாற்றுவதாகவே உள்ளது.
*.சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையாகவுள்ள பிரதேசங்களில் அம் மக்களின் குடிப்பரம்பலைத் தடுக்கும் விதத்தில் மேற்கொள்ளப்படும் அரச குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
வடக்கு- கிழக்கு மாகாணங்களில் அரசின் உதவியுடன் நடத்தப்படும் குடியேற்றமும்,  காணி அபகரிக்கும் முயற்சிகளும் அம் மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதித்துவருகின்றன. ஆண்டாண்டுகாலமாகப் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த அந்த மக்களின் சொந்த நிலங்களிலிருந்து,  ராணுவத்தினரால் வேருடன் கெல்லி வீசப்பட்ட அம் மக்கள், தாம் மீள அங்கு செல்வதற்கான உரிமையை இன்னமும் கோருகின்றனரர். மீளக் கையளிக்கப்பட்ட சில பகுதிகளின் குடிப்பரம்பல் ராணுவக் குடியிருப்புகளால் நிரந்தரமாகவே மாற்றப்பட்டுள்ளன. தற்போது வடக்கு- கிழக்கு மாகாணங்கள் ஆக்கிரமிப்புப் பிரதேசங்களாகவும், அங்குள்ள ராணுவத்தினர், அவர்களுக்கான பணிகளுக்கு அப்பால் விவசாயம், சந்தைப்படுத்தல், உல்லாசப் பயணத்துறை என்பவற்றில் ஈடுபட்டு, அங்குள்ள உள்ளுர் மக்களின் பொருளாதார வாழ்வில் தலையிட்டு அப் பிரதேசம் வழமையான அமைதிக்குச் செல்வதை நிச்சயமற்றதாக்கியுள்ளது.

*காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சகல குற்றச்சாட்டுகளையும் விசாரணைசெய்தல் அவசியம். இவை நியாயமானதாகவும், வெளிப்படையானதாகவும்,  போதிய நிதியும்,  அதிகாரிகளும் உடையதாகவும் உறுதிசெய்தல் அவசியம். அத்துடன்  காணாமல் ஆக்கப்பட்டதற்கான சாட்சியங்களும், நீதிமுன் நிறுத்தப்பாடல் வேண்டும்.  இதனை சம்பந்தப்பட்டோர்  பொறுப்புணர்வோடு மேற்கொள்ள வேண்டும்.

போர்க் குற்றம், காணாமலாக்கப்பட்டோர் என்பவை தொடர்பாக இலங்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஐ.நா. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகக் கோரியும் இன்னமும் அக் குடும்பங்கள் பதிலுக்காகக் காத்திருக்கின்றன. காணமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள்  போராட்டங்களை மேற்கொண்டபோதிலும் இதுவரை அவற்றிற்கான பதிலில்லை. காணாமலாக்கப்பட்டவர்களில் சிலர்,  அவர்களது குடும்பங்களால் போரின் முடிவின்போது ராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்கள். மேலும் சிலர் குழுக்களால்,  உதாரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் வண. பிதா பிரான்சிஸ் அவர்களின் உதவியுடன் கையளிக்கப்பட்டவர்களாகும். மேலும் சில சர்வதேச மனித உரிமைகளையும் மீறி இலங்கை அரசு கைது செய்தவர்களாகும். அரசினால் சட்டரீதியாக உருவாக்கப்பட்டுள்ள காணமலாக்கப்பட்டோர விபரங்களை அறியும் காரியாலயம் செயலற்ற, செயற்பட முடியாத ஒன்றாகவே இன்னமும் உள்ளது.
 ஐ.நா. மனித உரிமை (ஜெனீவா) ஆணையத்துடன் இணைந்து தீர்மானிக்கப்பட்டு இடைக்கால நீதியை வழங்கும் நோக்கில் உருவான ஒரு முயற்சி என்றபோதிலும் அதுவும் இயங்குவதாக இல்லை.இதனை உடன் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*தேசிய வளங்களை அந்நிய தேசங்களுக்கும்,பல்தேசிய கம்பனிகளுக்கும்  விற்பதை நிறுத்துதல் வேண்டும்.

*அதிகாரப் பகிர்வின் அடிப்படையில், தேசிய இனங்களிடையே நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும்வகையில் ஜனநாயக விழுமியங்களை உள்ளடக்கிய அரசியல் யாப்பு மாற்றங்களை ஏற்படுத்துதல் வேண்டும்.

பொதுநலவாய அமைப்பின் செயலகத்தினதும்,  அதன் அதிகாரிகளினதும் சிறந்த செயற்பாடுகள் மூலம் பொதுநலவாயத்தின்  விழுமியங்களை இலங்கை பின்பற்றுவதை உறுதிசெய்யுமாறு வேண்டுகிறோம்.

Forum Against Racism in Sri Lanka -UK

இலங்கையின் இனவாதத்திற்கு எதிரான ஒன்றியம்- பிரித்தானியா
 ශ්‍රී ලංකාවේ ජාතිවාදයට එරෙහි සංවිධානය - එක්සත් රාජධානිය

No comments

Powered by Blogger.