Header Ads



சவாலாக வந்துவிடுவார்கள் என அஞ்சி, சிங்கள பேரினவாதம் முஸ்லீம்களை அழிக்க முற்படுகின்றது

பொறுப்புக்கூறலில் இருந்து இலங்கை அரசாங்கத்தை விடுவித்ததன் விளைவே இன்று முஸ்லீம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன வன்முறைகளுக்குக் காரணம் எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதன்மூலம் முஸ்லீம் மக்கள் மீதான வன்முறைகளுக்கு சர்வதேசமும் பொறுப்பாளிகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கண்ணிவெடித் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனிதர் கி.சிவனேசனின் 10 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (06.03.2018) பிற்பகல் வடமராட்சி மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக் கழக மைத்தானத்தில் நடைபெற்றது. அங்கு உரைநிகழ்த்திய கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,

முஸ்லீம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறையானது. சிங்கள பொத்த தேசியவாத சிந்தனையின் அடிப்படையில் தோற்றம்பெற்றது அல்ல. அது திட்டமிடப்பட்ட இனவாதம். தமிழ் சமூகத்தை அழித்த சிங்கள பேரினவாதம் முஸ்லீம்கள் தங்களுக்கு சவாலாக வந்துவிடுவார்கள் என அஞ்சி தற்போது திட்டமிட்டு அவர்களை அழிக்க முற்படுகின்றது.

முள்ளிவாய்க்காலில் தமிழர்களை இனப்படுகொலை செய்தபோது இலங்கை அரசு தண்டிக்கப்படவில்லை. சர்வதேச பொறுப்புக்கூறலில் இருந்து இலங்கையைப் பாதுகாத்தது. இதனால்தான் தாங்கள் என்னவும் செய்யலாம். தங்களைத் தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற எண்ணம் அவர்கள் மீது மேலோங்கியது. இதன் வெளிப்பாடே இன்று முஸ்லீம் மக்கள் மீதான திட்டமிடப்பட்ட தாக்குதல்களின் பின்னணி.

சிங்களவர்களின் அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ்மக்கள் கிளர்ந்தெழுந்து போராடியிருக்கிறார்கள். அதனால் தமிழர்கள் மீது சிங்களவர்களுக்கு கோபம் இருந்திருக்கலாம். ஆனால் முஸ்லீம் மக்கள் சிங்களவர்களுடன் நெருக்கத்தையே பேணிவந்தார்கள். முஸ்லீம் தலைவர்கள் இதுவரை சிங்கள அரசாங்கத்துடன் இணைந்து வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதும் அபிவிருத்திகளைப் பெற்றுக்கொடுப்பதையுமே மேற்கொண்டுவந்தார்கள். சிங்களவர்களுக்கு எதிராக அணிதிரண்டதில்லை. ஆனால் இன்று சிங்களபேரினவாதிகளால் முஸ்லீம்கள் குறிவைக்கப்பட்டுள்ளார்கள்.

இக்கட்டான நிலைமையில் நாங்கள் புத்திசொல்வதாக நினைக்கவேண்டாம். முஸ்லீம் தலைவர்களும் மக்களும் சிந்தித்துச் செயற்படவேண்டிய தருணம் இது. அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்’ – என்றார்.

No comments

Powered by Blogger.