March 06, 2018

அவசரகால சட்டம் தற்போது அமுலில் (அதுபற்றி அறிந்துகொள்ள கண்டிப்பாக இதனை படியுங்கள்)

-அஷ் ஷெய்க் ஷfபீக் zஸுபைர்-

நாட்டில்  அவசரகால நிலையை பிரகடனப் படுத்த இன்று அமைச்சரவையால் தீர்மானிக்க பட்டிருந்த அதே வேலை இன்று மாலை அவசரகால நிலை அமுலுக்கு கொண்டுவரப்பட்டிருப்பது பற்றி வர்த்தமானியில் அறிவிக்க பட்டிருப்பதாக தற்போது (இரவு 10.00 மணி)  கொழும்பில் நடைபெற்று வரும் செய்தியாளர்  மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அல் ஹாஜ் N M அமீன் ( தலைவர் - முஸ்லிம் மீடியா போரம்)  என்னிடம் உறுதி  படுத்தினார். இந்த அவசர நிலை 10 நாற்களுக்கும் அதிக காலம்  நீடிக்கப்பட வேண்டிய தேவை ஏற்படின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களே அது பற்றிய தீர்மானத்தை நிறைவேற்றும் அதிகாரம் கொண்டிருப்பார். ஆனால் அப்படி அது நீடிக்கப்படுவதற்கு நாடாளுமன்ற  அங்கீகாரம்  தேவைப்படலாம்.   

 அவசரகால நிலை என்றால் என்ன?, அது அமுலில் இருக்கும் போது பாதுகாப்பு துறைக்கு வழங்க படும் அதிகாரங்கள் யாவை?,  சட்டத்தை மீறுகின்றவர்கள் எவ்வாறான நெருக்கடிகளை, கெடுபிடிகளை  சந்திப்பர்?  போன்றவை பற்றிய தெளிவு எம்மில் மிக அதிகமானவர்களுக்கு இல்லை என்பதே உண்மை. 

குறிப்பு : BBC தமிழ் மற்றும் வேறு சில தமிழ், ஆங்கில ஊடகங்களில் குறிப்பிட பட்டிருந்த கருத்துக்களை திரட்டியே கீழ் காணும் தெளிவை இங்கு பதிவிடுகின்றேன். 


 பொதுவாக நிலைமை கட்டுக்கடங்காமல் போகும் போது சுமூக நிலையை உருவாக்கவே அவசரநிலையை அமல்படுத்துவது வழக்கம். இலங்கையில் தொடர்ந்த உள்நாட்டு போரின் போதும் ஜேவிபி கலவரங்களின் போதும்   1978 முதல் 2009 இல் போர் முடிவுக்கு வரும் வரை  பல சந்தர்ப்பங்களில்  அவசர நிலை அமலில் இருந்து வந்துள்ளது.

(எமது  புதிய தலைமுறைக்கு இந்த அவசரகால சட்டம் பற்றிய தெளிவு மிகவும் குறைவாகவே இருக்கலாம் என கருதுகின்றோம்) 

அவசர நிலை அமலுக்கு வந்தால் ஜனாதிபதிக்கு மேலும் அதிகாரங்கள் வழங்கப்படும்.  கூடவே  போலிஸாருக்கும் அதிகாரங்கள் அதிகரிக்கும். குறிப்பாக தேவைப்படும் ஒருவரை நீதிமன்ற உத்தரவின்றியே கைது செய்து, குறிப்பிட்ட காலம் வரை (20 வருடங்கள் வரை கூட) அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யாமல் போலிஸார் தடுத்து வைக்கமுடியும். தேவைப்படும் இடத்தில் துப்பாக்கி பிரயோகம் செய்யவும் போலிஸாருக்கு அதிகாரம் வழங்க பட்டிருக்கும். பாதுகாப்பை பலப்படுத்த இராணுவத்தினரும் ஏனைய பாதுகாப்பு படையினரும் சேவையில் ஈடுபடுத்தப்படலாம். தேவையான இடங்களில் திடீர் சோதனைச் சாவடிகள் கூட அமைக்கப்படலாம்.

நிலைமை அமுலில் உள்ள போது பொது இடங்களில் ஆட்கள் கூடுவது மட்டுப்படுத்தப்படும். இது ஆர்ப்பாட்டங்கள் கலவரங்கள் உருவாவதை தடுக்க உதவும். கலவர நேரங்களில் வன்செயலில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவும் போலிஸாருக்கு அனுமதி வழங்கப்படலாம். நிலைமையை முடிவு செய்ய தேவையான அதிகாரங்கள் அரசாங்க அதிபருக்கும் மஜிஸ்ட்ரேட்டுக்கும் வழங்கப்படும். தேவையான இடங்களில் ஊடரங்கு சட்டங்களை பிறப்பிக்க முடியும். தற்பொழுது கூட (06/03/2018)  கண்டி நிர்வாக மாவட்டம் முழுவதும் நாளை காலை 06.00 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்து வருவதை நாம் அறிவோம். அபாயகரமான  சூழ்நிலை ஏற்பட வாய்ப்பிருப்பின் ஊடகங்கள் மீது கட்டுப்பாடு கொண்டுவர முடியும். தேவைப்படின் தணிக்கையும் அமலுக்கு வரலாம். குறிப்பாக சமூக ஊடகங்களே வன்செயலை பரப்ப பெரும் காரணமாக கருதப்படுவதால், அவற்றை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்படியான தவறுகளை செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நிலைமையை மிகைப்படுத்தி காண்பிப்பது, வெறுப்புணர்வுப் பிரச்சாரம் ஆகியவற்றுக்கு சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்படுவது  நாம் அறிந்ததே. 
இலங்கையை பொறுத்தவரை அவசரகால நிலை கடந்த காலங்களில்  இங்கு பழகிப்போன ஒன்றுதான். குறிப்பாக  வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் யுத்த காலங்களில் அதனை அதிகமாக எதிர்கொண்டு  வந்துள்ளனர். போர் முடிவுக்கு வந்ததை அடுத்து அவசரகால நிலை இங்கு நீக்கப்பட்டாலும், இங்கு இன்னமும் பயங்கரவாதச் சட்டம் தொடர்ந்து அமலில் இருந்து  வருகின்றது.  

பொதுவாக இங்கு சிறுபான்மையினர் இப்படியான சூழ்நிலையில் அவசர நிலையைப் பார்த்து ஆறுதல் அடைவதற்கு பதிலாக குழப்பமடைவதே அதிகம். தமது உரிமைகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஒரு சட்டமாகவே இதனை அவர்கள் பார்க்கிறார்கள். அதற்கான காரணம் குறித்த சட்டத்தை அமுல் படுத்துவதில் பாதுகாப்பு தரப்பு இனங்களுக்கிடையில் தொடர்ந்தேர்ச்சையாக காட்டிவரும் பாகுபாடாகும். தர்கா நகர், கிந்தோட்டை, அம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட கலவரங்களின் போதும் அதனை எமது சமூகம் கண்கூடாகவே பார்த்திருந்து. தற்போது திகன, தெல்தெனிய பகுதிகளில் ஏற்பட்டிருக்கும்  கலவரங்களில் பாதுகாப்பு தரப்பு (குறிப்பாக STF -  Special Task Force, அதிரடிப் படை) சிறுபான்மை முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கி வரும் அதே வேலை STF இல் கடமை புரியும் பலர் முஸ்லிம்கள் தாக்க படுவவதற்கு, அவர்களது உடைமைகள் சேதமாக்க படுவதற்கு உடந்தையாக இருந்திருக்கின்றனர்.  அவசரகால சட்டம் அமுலில் இருப்பதுடன் பாதுகாப்பு தரப்பினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்  இந்த நிமிடங்களில் கூட மடவளை (மெனிக்ஹின்ன) பள்ளிவாசல் தாக்க பட்டிருப்பதும் கண்டி மாவட்டத்தின் வேறு  சில பகுதிகளில் சில   அசம்பாவிதங்கள்  நடைபெற்றுக் கொண்டிருப்பதும் பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கின்றது.

உண்மையில் பாதுகாப்பு தரப்பினால் எவ்வித பாகுபாடும் காட்ட படாது  குறித்த அவசரகால நிலை அமுல் படுத்த படுமேயானால் அது சிறுபான்மை சமூகங்களுக்கே அதிக பாதுகாப்பாகவும், சாதகமாகவும் அமையும். அரசும் பாதுகாப்பு தரப்பும் அதனை ஊர்ஜீதம் செய்து இவ் இக்கட்டான சூல்நிலையில் சிறுபான்மை முஸ்லிம்களை இனவாத குண்டர்களிடமிருந்து பாதுகார்க்க வேண்டும்.

கண்டி மாவட்டத்தில் திகன, தெல்தெனிய, குமுக்கந்துர,  மெனிக்ஹின்ன, மடவளை, அக்குரனை, கல்ஹின்ன, தென்னே கும்புர, வத்தேகம உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்களுக்குள் தற்போது (இரவு 11.30)  பதட்டமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டிருப்பதாகவே  ஓரளவு ஊர்ஜித படுத்த பட்ட செய்திகள்  தெரிவிக்கின்றன. ஆகவே தான் நாளுக்கு நாள் முஸ்லிம்கள் பாதுகாப்பு தரப்பின் மீதான நம்பிக்கையை இழக்க ஆரம்பித்துள்ளனர்.                

அனைத்து சக்திகளுக்கும் மேலாக எம்மை படைத்து, பரிபாலித்து கொண்டிருக்கும் ரப்பின் பாதுகாப்பே பலமானதும் நிரந்தரமானதுமாகும். சக்திக்கு ஏற்ற ஏற்பாடுகளை செய்து கொள்வதுடன் அவனின் பக்கமே அதிகம் மீள்வோம்.

1 கருத்துரைகள்:

Naduwath Ralahamige Baduwath Ralahamige? All law enforcement arms are biased towards majority community and against minority interests . Even if you have 1000000 soldiers nothing good will happen to minorities.

Post a Comment