Header Ads



இந்நாட்டை ஒற்றுமையாக வளர்த்தெடுக்கவே, முஸ்லிம்கள் பாடுபட்டார்கள் - கிழக்கு மாகாண இரணுவ தளபதி


கிழக்கு மாகாணத்தில் வன்முறைகளை தூண்ட முற்பட்ட 51 பேர் படையினரால் கைது செய்யப்பட்டு அவர்களின் எதிர்காலம் கருதி விடுவிக்கப்பட்டதாக கிழக்கு மாகாண இரணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சன்துஸித பணன்வெல தெரிவித்தார்.


மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண இரணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சன்துஸித பணன்வெல மற்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகளுடான சந்திப்பு நேற்று காத்தான்குடியில் நடைபெற்றது .

அண்மையில் கண்டி .திகன மற்றும் தெல்தெனிய பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட அமைதி இன்மை, சமூகங்களுக்கிடையிலான வன்முறைகள் போன்ற விடயங்கள் இடம்பெறாத வண்ணம் சமூகங்களுக்கிடையில் கலந்துரையாடப்பட்டு நாட்டில் சுமுகமான நிலைமையினை ஏற்படுத்தும் நோக்கில் இராணுவ அதிகாரிகளின் ஏற்பாட்டில் சமூக பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

இதற்கு அமைய மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகளுடனான சந்திப்பு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் எ .எம்.எம். தௌபிக் தலைமையில் சம்மேளன பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண இரணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சன்துஸித பணன்வெல, புனானை 23வது படைப்பிரிவின் மாவட்ட களட்டளை தளபதி பிரிகேடியர் ஜுல அபேநாயக , மட்டக்களப்பு கல்லடி 231 பிரிவு இராணுவ படை தலைமையக அதிகாரி பிரிகேடியர் என் .டி எஸ். பி . நுவுன் எல்ல ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண இரணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்துஸித பணன்வெல கருத்து தெரிவிக்கையில்,

இந்த நாட்டு முஸ்லிம் தலைவர்கள் இந்த நாட்டை துண்டாடி தனி நாடு கேட்க வில்லை. இந்த நாட்டை ஐக்கியத்துடன் கட்டியெழுப்பவே பாடுபட்டார்கள்.

இந்த நாட்டில் சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்ற இன ரீதியாக நாங்கள் கல்வி கற்கும் காலங்களில் கல்வி கற்கவில்லை. நாம் எல்லோரும் ஒரே இனமாகத்தான் நாம் பாடசாலைகளில் கல்வி கற்றோம்.

பல்கலைக்கழகத்திலும் எந்தவொரு இன ரீதியான வேறுபாடுகளுமில்லாமலே நாம் கல்வி கற்கின்றோம். இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக உழைத்த முஸ்லிம் தலைவர்களான டி.பி.ஜாயா அறிஞர் சித்திலெவ்வை போன்றோர் இந்த நாட்டை ஒரு போதும் துண்டாட விரும்பவில்லை.

முஸ்லிம் தலைவர்களோ முஸ்லிம்களோ இங்கு தனி நாடு கோரவில்லை. இந்த நாட்டை ஐக்கியத்துடன் ஒற்றுமையாக வளர்த்தெடுக்கவே அவர்கள் பாடுபட்டார்கள். கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரைக்கும் எந்தவொரு பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் இடம் பெறவில்லை. உணர்ச்சி வசப்பட்ட சிலரால் தூண்டிவிடப்பட்ட இளைஞர்கள் சிலர் கல் வீச்சுக்களில் ஈடுபட்டார்கள். நாங்கள் அவைகளை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தோம்.

கிழக்கில் இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்ட 57 இளைஞர்களை கைது செய்தோம். அவர்களின் எதிர்காலம் அவர்களின் கல்வி தொழில் வாய்ப்பு என்பவற்றை கருத்திற் கொண்டு அவர்களை நீதிமன்ற சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டாம் என பொலிஸ் மா அதிபரிடத்தில் கேட்டுக் கொண்டேன்.

இவ்வாறான சம்பவங்களில் இளைஞர்கள் ஈடுபடக் கூடாது. நாம் கலந்துரையாடல்கள் மூலமே பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும்.

இது கிழக்கு மாகாண மக்களின் முன் மாதிரியாகும் கடந்த முப்பது வருட கால யுத்தத்தை முடித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தினோம். இந்த கிழக்கு மாகாணத்தையும் நாம் கட்டியெழுப்ப வேண்டும் என்றார்.

நமக்கு தெரியும் நாட்டில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் ஜே.வி.பி. பிரச்சினை ஏற்பட்ட போது முப்பதாயிரம் இளைஞர்களுக்கு என்ன நடந்தது என்று இன்னும் தெரியாமலுள்ளது.

No comments

Powered by Blogger.