Header Ads



சிங்களவர்கள் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரவேண்டும் - சுரேஸ்

கண்டி- திகன வன்செயல் இலங்கையில் சிறுபான்மை இனங்களின் நிலையை தெளிவாக காட்டியிருப்பதாக ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலைமைகள் குறித்து யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இந்த வன்செயல்கள் தொடர்ந்து அமுலாக்கப்பட்டுள்ள அவசரகால சட்டம் தொடர்பாக தமிழ் தலைவர்கள் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக பொறுப்புணர்வுடன் செயற்படுவது அவசியமானதாகும்.

மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் இடம்பெற்றதைபோன்று மைத்திரிபால சிறிசேனா ஆட்சியிலும் முஸ்லிம் மக்கள் மீதான வன்செயல் கட்டவிழ்த்து விடப்பட்டி ருக்கின்றது.

கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல நாடாளுமன்றில் உரையாற்றும்போது வெளியில் இருந்து வந்தவர்களே மக்களுடைய சொத்துக்களை அழித்து வன்செயலை தூண்ட காரணமானவர்கள் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வன்செயலுக்காக சிங்கள மக்கள் முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோரவேண்டும். அவ்வாறெனில் இந்த அரசாங்கத்தால் இவ்வாறான வன்செயல்களை கட்டுப்படுத்த இயலாமைக்கான காரணம் என்ன?

இன்றும் சிங்கள பௌத்த கடும்போக்காளர்கள் இந்த நாட்டில் மிக சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் நடமாடுகிறார்கள், ஊடகங்களை சந்திக்கிறார்கள்.

கடந்த சில தினங்களுக்குள் ஒருவர் ஊடகவியலாளர் சந்திப்பில் கூறுகிறார் கொன்றால் கொல்வோம் என அந்தளவுக்கு அவர்களுடைய செயற்பாடுகளும், கருத்துக்களும் அமையும் நிலையில் இவ்வாறானவர்களை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பதன் பின்னணி என்ன?

இலங்கையில் பொலிஸ், இராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புலனாய்வு அமைப்புக்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்களால் இவ்வாறான பாரிய இனமோதல்கள் தொடர்பாக எதிர்வுகூற முடியாமல் உள்ளதா? இதற்கான பதிலை ஜனாதிபதி, பிரதமர் மக்களுக்கு கூறவேண்டும்.

அரசாங்கம் இந்த விடயத்தில் கண்டுகொள்ளாமல் இருப்பதன் பின்னணி சட்டம் ஒழுங்கு அரசாங்கத்தின் பிடிக்குள் இல்லையா? எது எவ்வாறாயினும் இலங்கையில் சிறுபான்மை இனங்களின் நிலையை இந்த வன்செயல் தெளிவாக காட்டியிருக்கின்றது.

இந்த வன்செயல்களை காரணம் காட்டி மீண்டும் அவசர கால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது. இவ்வாறே ஆரம்பத்தில் அவசரகால சட்டம் கொண்டுவரப்பட்டபோது 6 மாதங்களுக்கு என கூறப்பட்டது.

ஆனால் அது பின்னர் 30 வருடங்கள் நீடித்தது அதன் வலியை, வேதனையை தமிழ் மக்கள் நன்றாக உணர்ந்தவர்கள்.

எனவே தமிழ் தலைவர்கள் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய தலைவர்கள் இந்த அவசரகால சட்டம் தொடர்பாக பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும்.

மேலும் இந்த அரசாங்கம் அரசியல் ஸ்திர தன்மையற்றதாக இருக்கும் அதேவேளை வன்செயல்கள் வடமாகாணத்தில் இல்லை.

எனவே வட மாகாணத்திற்கும் சேர்த்து அவசரகால சட்டம் அமுல் செய்யப்பட்டிருப்பதன் பின்னணி தொடர்பாக தமிழ் தலமைகள் அவதானமாக இருக்கவேண்டும்.

வெறுமனே அரசுக்கு ஆதரவு கொடுக்கிறோம் என கூறிக் கொண்டு தமிழ் மக்களை மீண்டும் ஒரு பொறிக்குள் தள்ளிவிட கூடாது.

இதேவேளை, ஈ.பி.ஆர்.எல்.எவ் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வன்செயல்களை கண்டிக்கிறது. இந்த அரசாங்கம் சிறுபான்மை தேசிய இனங்களின் பாதுகாப்பு தொடர்பாக சரியான நிலைப்பாட்டினை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.