Header Ads



சிங்களப் பிரதேசங்களில் இருந்து, முஸ்லிம்கள் மேலும்மேலும் துரத்தப்படுவார்கள் - விக்னேஸ்வரன்

முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல் சம்பவத்திற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்திலும், மத்திய மாகாணத்திலும் நடைபெற்று வரும் வன் செயல்கள் தொடர்பில் வாராந்த கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“இவ்வாறான வன் செயல்கள் இலங்கையில் புதிதல்ல. பெரும்பான்மையினத்தினர் சிறுபான்மையினத்தினர் மீது கட்டவிழ்த்து விடும் வன் செயல்களே இவை என்பதிலும் பார்க்க நான் வேறு கோணத்தில் இருந்தும் பார்க்கின்றேன்.

இரு இளைஞர்கள் சேர்ந்து இன்னொரு இளைஞரைக் கொலை செய்தார்கள் என்பதே திகனவிலிருந்து நாம் கேட்ட செய்தி. உடனே பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன?

கொன்ற இளைஞர்கள் முஸ்லிம்கள் என்பதும், கொல்லப்பட்டவர் சிங்களவர் என்றும் கதை பரவியதால் இளைஞர்களுக்கிடையில் நடைபெற்ற மோதல் இனங்களுக்கிடையில் நடைபெற்ற மோதலாகச் சித்திரிக்கப்பட்டு இன முறையிலான போராட்டமாக மாறியது. இவ்வாறான செயல்கள் நடக்காதா என்று ஏங்கியிருந்தவர்களுக்கு இது கொழுக்கட்டை கொடுத்ததாக ஆகிவிட்டது.

குற்றவாளிகளை அவர்களின் இனத்தவர் எமது மக்கள் என்றோ எம்மவர் என்றோ எண்ணி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அது இன முறுகல்களையும், மோதல்களையும், கோபதாங்களையும் உண்டாக்குகின்றன.

இன்று முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவதன் காரணம் இரண்டு என நினைக்கின்றேன். ஒன்று முஸ்லிம் சகோதரர்கள் வாணிபத்தில், வணிகத்தில் கொடிகட்டிப் பறக்கின்றார்கள். அதனை தொடர்ந்து நடக்க விடப்படாது.

அன்று தமிழர்கள் அரச சேவையில் கொடிகட்டிப்பறக்கின்றார்கள். விடக் கூடாது என்று நினைத்தார்கள். இன்று முஸ்லிம்கள் வாணிபத்தில் கொடிகட்டிப் பறக்கின்றார்கள் என்று ஆதங்கம். அதனால்த்தான் அவர்களின் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

அடுத்த காரணம் சனப்பெருக்க வீதம் சுமார் 5 சதவீமாக முஸ்லிம் மக்கள் பெருகி வர, சிங்களவரின் பெருக்கம் சுமார் 2 சதவீதம் என்றும் தமிழ் மக்களின் ஜனப் பெருக்கம் 1 சத வீதம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

அதற்கேற்றாற் போல் சில அரசியல்வாதிகள் 2040ல் நாமே இலங்கையின் பெரும்பான்மையினர் என்று வெளிப்படையாகக் கூறி வருகின்றார்கள். தற்போது பொருளாதார ரீதியாக முஸ்லிம் சமூகம் பாதிப்படைந்துள்ளது.

இறப்புக்கள் அதிகமில்லை. தொடர்ந்து இவ்வாறான செயல்கள் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக வருங்காலத்தில் நடைபெறப் போகும் சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. அடுத்த முறை உயிர்ச்சேதம் வெகுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

தமிழர்கள் போன்று முஸ்லிம் மக்களும் சிங்களப் பிரதேசங்களில் இருந்து மேலும் மேலும் துரத்தப்படுவார்கள். இதற்காகத் தான் நாடு பூராகவும் சமஷ்டி அடிப்படையிலான தன்னாட்சி உரித்தை ஒன்பது மாகாணங்களுக்கும் வழங்க வேண்டும் என்று கேட்டு வருகின்றேன்.

அப்பொழுது தமிழ்ப் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பிரதேசங்களில் பெரும்பான்மையினர் கொடுமைகள் நடக்கமாட்டாது.

ஆனால் தமிழரோ, முஸ்லிம்களோ, மலையகத் தமிழரோ தம் மத்தியில் வசிக்கும் சிங்கள மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. அனுபவசாலியின் உண்மையான கருத்து அரசியல் தலைமைகள் சுய இலாபமாக செயற்படாமல் சமுதாய நோக்கமாய் செயற்படுமா?

    ReplyDelete

Powered by Blogger.