March 14, 2018

கலவர பூமியாக இலங்கை - தமிழ்நாட்டு பத்திரிகை

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக எழுந்திருக்கின்ற இப்போதைய தாக்குதல், முன்பு இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடந்த தாக்குதல் அளவுக்கு வலுப்பெறவில்லை என்றாலும் கூட, இப்படி ஒரு தொடக்கம் கண்டிருப்பதே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

2011-க்குப் பிறகு இப்போது நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இலங்கையின் கண்டி மாவட்டத்தில் நடந்திருக்கும் மதக் கலவரத்தின் ஆரம்பம் வழக்கம்போல மிகவும் சாதாரணமானதுதான்.

சரக்கு லாரி ஓட்டி வந்த சிங்கள ஓட்டுநர் ஒருவர் தங்களது வாகனத்துக்கு முன்னால் செல்ல அனுமதி தரவில்லை என்ற மிக சாதாரண ஒரு காரணத்துக்காக அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்.

முஸ்லிம்களால் அவர் தாக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களில், சிங்கள - பெளத்த கும்பல் கண்டியில் உள்ள இஸ்லாமியர்களின் வீடுகளையும், வணிகத் தலங்களையும் மசூதிகளையும் தாக்கத் தொடங்கின.

இது போதாதென்று வன்முறையைத் தூண்டுகின்ற சமூக வலைத் தளப் பதிவுகள் மூலம் இஸ்லாமியர்களுக்கு எதிரான மனோநிலை உருவாக்கப்பட்டது. அது காட்டுத்தீயாகப் பரவி மத்திய இலங்கையில் உள்ள கண்டியில் மட்டுமல்லாமல், கிழக்குக் கடற்கரையை சேர்ந்த அம்பாறை மாவட்டத்துக்கும் கலவரம் பரவியது.

2009-இல் உள்நாட்டுப் போர் முடிந்ததை சிங்களர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக தீவிரவாத பெளத்த தேசியக்குழுக்கள் கருதியதில் வியப்படைய ஒன்றும் இல்லை.

மேலும் அவர்களது ஆதரவைப் பெறுவதற்காக முன்னாள் அதிபர் ராஜபக்ச தனது பேச்சுக்கள் மூலமும் செயல்கள் மூலமும் அந்த உணர்வை மீண்டும் மீண்டும் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தார்.

சிங்கள - பெளத்த அடையாளங்கள் அழிந்து விடாமல் இலங்கையின் தனித்தன்மையைக் காக்க வேண்டும் என்பது சிங்கள - பெளத்த குழுக்களின் இலக்கு.

ஒட்டுமொத்த இலங்கையையும் சிங்களவர்கள் மட்டுமே வாழுகின்ற பூமியாக மாற்ற வேண்டும். அதிலும் சிங்கள - பெளத்தர்கள் மட்டுமே வாழுகின்ற பூமியாக மாற்ற வேண்டும் என்கிற கருத்தாக்கத்தை பரப்பத் தொடங்கின இனவாதக் குழுக்கள்.

மிகப்பெரிய அளவில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்களவர்கள் குடியேறத் தொடங்கினர். அதன்மூலம் காலப்போக்கில் எந்த ஒரு பகுதியிலும் தமிழர்கள் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் அளவுக்கு பலம் பொருந்தியவர்களாகக் காணப்படக் கூடாது என்பதுதான் சிங்கள இனவாதக் குழுக்களின் நோக்கம்.

அவர்களது இந்தப் போக்குக்கு மகிந்த ராஜபக்சவின் தேர்தல் தோல்வி மிகப்பெரிய முட்டுக்கட்டையாக அமைந்தது.

சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் சிறீசேனா - ரணில் விக்ரமசிங்க கூட்டணி பின்னுக்குத் தள்ளப்பட்டு மீண்டும் மகிந்த ராஜபக்சவின் கரம் வலுத்திருக்கும் நிலையில், இனவாத, சிங்கள தீவிரவாதக் குழுக்களின் பார்வை இஸ்லாமியர்களை நோக்கித் திரும்பியிருக்கின்றது என்றுதான் கருதத் தோன்றுகிறது.

இலங்கையில் எண்ணிக்கை ரீதியில் முஸ்லிம்கள் மூன்றாவது இடம் வகிக்கிறார்கள். இலங்கையின் மொத்த மக்கள் தொகையான 2.12 கோடியில் முஸ்லிம்கள் 10 சதவீதம் காணப்படுகிறார்கள். இலங்கையின் மத்தியப் பகுதியில் இருக்கும் கண்டியிலும், கிழக்கு கடற்கரையை ஒட்டியிருக்கும் பகுதியான அம்பாறை மாவட்டத்திலும் இவர்கள் அதிகமாகக் காணப்படுகிறார்கள்.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் தமிழ் பேசுபவர்கள் என்பது மட்டுமல்ல, தமிழகத்திலிருந்து இலங்கைக்கு போய் குடியேறியவர்கள்.

இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களும், இந்திய வம்சாவளித் தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லிம்களும் ஒன்றாக இணைந்து விடக்கூடாது என்கிற பிரித்தாளும் சூழ்ச்சியை ஆரம்பம் முதலே பிரிட்டிஷ் காலனிய அரசும், அவர்களைத் தொடர்ந்து சிங்கள அரசியல்வாதிகளும் சாதுர்யமாக செயல்படுத்தி வந்திருக்கிறார்கள்.

அதனால்தான், இலங்கை உள்நாட்டுப் போர் நடந்த போது இஸ்லாமியர்களும் இந்திய வம்சாவளித் தமிழர்களும் அதில் முழு மனதுடன் தங்களை இணைத்துக்கொள்ளவில்லை.

விடுதலைப்புலிகள் இல்லாத நிலையில் புதிய எதிரிகளை உருவாக்கி அதன் மூலம் சிங்களவர்கள் மத்தியில் இனவெறித் தீயை அணையாமல் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் சிங்கள - பெளத்த இனவாதக் குழுக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இதற்கிடையில், மியான்மரிலிருந்து அகதிகளாக இலங்கையில் தஞ்சம் அடைந்த ரோஹிங்கியா அகதிகள் குறித்து ஓர் அச்ச உணர்வு சிங்கள - பெளத்தர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

இதுவரையில் இல்லாத இஸ்லாமியத் தீவிரவாதத்தை ரோஹிங்கியா அகதிகள் இலங்கைக்கு இறக்குமதி செய்து விடுவார்கள் என்கிற அச்சத்தை சிங்கள - பெளத்த இனவாதக் குழுக்கள் பரப்பிக் கொண்டிருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் கண்டி, அம்பாறை பகுதிகளில் தங்களுக்கு என்று வாக்கு வங்கியை வைத்துக்கொண்டிருக்கும் முஸ்லிம்கள் தேர்தலில் தங்களது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வது, இந்த இனவாதக் குழுக்களுக்கு உறுத்தலாகவே இருந்து வந்திருக்கிறது.

இந்த பகுதியில் இனக்கலவரம் தூண்டப்பட்டால் அங்கும் சிங்களவர்களை பெருமளவில் குடியேற்ற முடியும் என்ற மனப்போக்கு காணப்படுமானால் வியப்படைய ஒன்றுமில்லை.

ஏற்கெனவே இலங்கையில் நிறைய இரத்தம் சிந்தியாகி விட்டது. இன, மதக் கலவரத்தின் நீண்ட நாள் விளைவு என்ன என்பதை அந்த நாடு நன்றாகவே உணர்ந்திருக்கிறது என்று நம்பலாம்.

இப்போதுதான் இலங்கை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்ல எத்தனித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், மீண்டும் இனக் கலவரம் தூண்டிவிடப்படுமேயானால் அது இலங்கையின் வருங்காலத்துக்கு நல்லதல்ல.

- Dina Mani

0 கருத்துரைகள்:

Post a Comment