Header Ads



ஜனாதிபதியின் விசேட, உரை இதோ

உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசிகள்,
இறைவன் துணை,

கடந்த சில தினங்களாக நாட்டின் சில பிரதேசங்களில் இடம்பெற்ற இனங்களுக்கிடையில் வேற்றுமையையும் மோதல்களையும் ஏற்படுத்தும், ஒற்றுமையை சீர்குலைக்கும் மிகவும் கவலைக்குரிய சம்பவங்கள் காரணமாக நாட்டில் ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலையினைக் கவனத்தில் கொண்டே இன்று நான் இந்த விசேட அறிக்கையினை வெளியிடுகிறேன்.

 வரலாற்றுக் காலம்தொட்டே நாம் நமது நாட்டின் உள்நாட்டு மோதல்கள் பற்றியும் பிற ஆக்கிரமிப்புக்கள் பற்றியும் நீண்ட அனுபவத்தை கொண்டிருக்கும் ஒரு இனமாவோம். குறிப்பாக கடந்த பல தசாப்தங்களாக நமது நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம், மலே, பேகர் ஆகிய அனைத்து இனங்களும் சமாதானத்துடனும் ஒற்றுமையுடனும் அமைதியாக வாழ்ந்து வந்தார்கள். 1940களை  நோக்கி செல்வோமாயின் பிரித்தானிய ஆட்சியிலிருந்த நமது நாட்டுக்கு விடுதலையைப் பெற்றுக்கொள்வதற்காக சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து இனத்தவர்களும் சகோதரத்துவத்துடன் ஒன்றுபட்டு போராடி தேசிய சுதந்திரத்தை பெற்றுக் கொண்டோம். இருப்பினும் பிற்காலத்தில் ஏற்பட்ட இனங்களுக்கிடையிலான மோதல் நிலை எம்மை நீண்டகால யுத்தத்தைநோக்கி இட்டுச் சென்றது மட்டுமல்லாது, அதன் விளைவாக பாரிய அவலங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்ததுடன்,  நாம் மனம் வருந்தத்தக்க நிலைக்கும் தள்ளப்பட்டோம்.

இருப்பினும் கடந்த மூன்று ஆண்டுகளாக நாம் இந்த நாட்டின் தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் அரசு என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இப்பின்னணியில் கடந்த சில தினங்களாக அம்பாறை, கண்டி ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் உயிர்ச் சேதங்களையும் பொருட் சேதங்களையும் ஏற்படுத்தியிருப்பதுடன் அப்பிரதேசங்களில் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக, நாட்டில், குறிப்பாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்படுகின்ற ஒரு சூழல் உருவாகியிருக்கின்றது.

இந்த சம்பவங்கள் காரணமாக உயிரிழப்புக்களுக்கும் பொருள் இழப்புக்களுக்கும் முகம்கொடுத்த அனைத்துக் குடும்பங்களுக்கும் அவர்களது உறவுகளுக்கும்; எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன், மேற்கொள்ளப்பட்ட அனைத்து வன்முறைச் சம்பவங்களையும் இச்சந்தர்ப்பத்தில் நான் மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன். அந்த அசம்பாவிதங்களை கண்டிக்கின்ற அதேவேளை அச்செயல்களில் ஈடுபட்ட தனி மனிதர்கள், அமைப்புக்கள், குழுக்கள் ஆகிய அனைத்து தரப்புக்களுக்கும் எதிராக சட்டத்தினை மிக நேர்த்தியாக செயற்படுத்த வேண்டுமென நான் பொலிஸ் துறைக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறேன். 



அதேபோல் ஏற்பட்டிருக்கின்ற இந்த நிலைமையினை சாந்தப்படுத்துவதற்கும், இந்த பதற்ற நிலைமையினை போக்குவதற்கும், அப்பிரதேசங்களின் சமாதானத்தை ஏற்படுத்தி நாட்டின் அனைவருக்கும் சுதந்திரமாகவும், அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்கு பொலிஸ், விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் அரச அதிகாரிகள், பிரதேச அரசியல்வாதிகள் ஆகியோரை ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஆலோசனை வழங்கியிருக்கிறேன்.

அதேபோன்று ஏற்பட்டிருக்கும் இந்நிலைமையினை கருத்தில்கொண்டு நாம் நமது நாட்டினுள் மிகத் தெளிவாக ஏற்படுத்தவேண்டிய தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் அன்னியோன்னிய புரிந்துணர்வு, இனங்களுக்கிடையிலான நட்பு ஆகியவற்றை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஒரு அரசு என்றவகையில் எடுக்கவேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதை நான் இங்கே கூறவிரும்புகிறேன். வணக்கத்துக்குரிய மகாநாயக்கர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினரதும், இந்து இஸ்லாம் கிறிஸ்தவ மதத் தலைவர்களினதும் வழிகாட்டலும் பங்களிப்பும் இச்சமயத்தில் மிக முக்கியமாக தேவைப்படுகின்றது என்பதை மிகுந்த கௌரவத்துடன் வலியுறுத்துகின்ற அதேவேளை, பிரதேச அரசியல் தலைமைகளுக்கு இம்மோதல்களை தடுப்பதற்கும், பதற்றத்;தினை தணிப்பதற்கும் தேவையான வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொடுக்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். 

அதேபோல் பொலிஸ், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படை, நேற்றுமுதல், இன்றும் எதிர்வரும் நாட்களிலும் 24 மணித்தியாலங்களும் தொடர்ச்சியாக செயற்படுவதன் மூலம் இப்பிரதேசங்களில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும்; மேற்கொள்ள வேண்டுமென நான் ஆலோசனைகளை வழங்கியிருக்கிறேன்.

ஏற்பட்டுள்ள இந்த நிலைமையைப்பற்றி கலந்தாலோசிப்பதற்காக விசேட தேசிய பாதுகாப்பு சபை கூட்டமொன்றை நடத்தி தேவையான தீர்மானங்களை எடுத்திருப்பதுடன், கௌரவ பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையுடன் கலந்தாலோசித்து எதிர்காலத்தக்கு தேவையான முறையான திட்டத்தினையும் வகுத்திருக்கின்றோம். அதனால் அனைவரும் சமாதானத்துடனும் அமைதியாகவும் வாழ முயற்சிக்கும் அதேவேளை, குறிப்பாக, பௌத்த நாடு என்ற வகையில் 'குரோதத்தால் குரோதம் தணியாது', 'பழிதீர்ப்பதால் பகைமை தீராது' என்ற பௌத்த சிந்தனையை அறிந்தவர்கள் என்றவகையில், எந்தவிதமான துன்புறுத்தல்களிலோ வன்முறைகளிலோ ஈடுபடுவதன் மூலம் எமது நாட்டுக்கே அவப்பெயரும் களங்கமும் ஏற்படும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். 

அதேபோன்று இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களைச் சேர்ந்த நம்நாட்டவர்கள் தத்தமது மதங்களின் வழிகாட்டல்களுக்கமைய சமாதானத்துடனும் சகவாழ்வுடனும்; வாழ்வதன் மூலம் உருவாக்கப்பட்டிருக்கின்ற இந்த சுதந்திரமான சூழலை மென்மேலும் பலப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை மேலோங்கச் செய்து, நம்நாட்டின் எதிர்கால நடவடிக்கைகளை ஐக்கியத்துடனும் சமாதானத்துடனும் ஒன்றுபட்டு சமாதானமான முறையில் முன்னெடுப்போம் என்ற வேண்டுகோளை விடுக்கின்றேன். நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் ஒற்றுமையை பலப்படுத்தவும்;, இனங்களுக்கிடையில் ஐக்கியம், அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தவும் ஓர் அரசு என்றவகையில் எடுக்கவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து, வன்முறையில் ஈடுபடும் தரப்பினருக்கு எதிராக எடுக்கப்படக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதை இங்கு நான் கூறிவைக்க விரும்புகிறேன். அத்தோடு பல்வேறு வதந்திகiளையும் கட்டுக்கதைகளையும் சமூக ஊடகங்கள், இணையத்தளங்கள், தொலைபேசி ஆகியவற்றின் ஊடாக பரப்பி, மிக மோசமாக மக்கள் மத்தியிலும் நாட்டினுள்ளும் சமாதானத்தை சீர்குலைக்க முயலும் சில தரப்பினர் இருப்பது என்பது தெரிய வந்திருக்கின்றது. அவ்வாறானவர்களுக்கு எதிராக மிக உறுதியான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்தக் கொள்கிறேன். 

சுதந்திரமான சுமுகமான சூழலில் மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய எமது தாய்நாட்டை கட்டியெழுப்புவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் அரசு என்ற வகையிலும் அரச தலைவர் என்றவகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பேன் என்பதை உங்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக இதனை நான் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறேன். 
நன்றி, வணக்கம்!

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2018.03.06

3 comments:

  1. you are very good in writing a statement but, action is zero. it is not only now, since you elected as president your action is zero.

    ReplyDelete
  2. இலங்கை வரலாற்றிலே அரசாங்கம் தோல்வியில் எடுத்து கொண்டும் செல்லும் ஜனாதிபதி இவன் தான்.He´s waste president ever an Sri lankan history!

    ReplyDelete
  3. If your elect GS as a President of the country, this is the outconme....

    ReplyDelete

Powered by Blogger.