Header Ads



கஹட்டோவிட்டாவில் தாக்குதல் முறியடிப்பு - பெற்றோல் குண்டை போட்டுவிட்டு ஓட்டம்

-Dc-

குற்றவாளி யார் என்பதை சரியாக இனங்கண்டு நடவடிக்கை எடுக்க முடியுமான வகையில் எமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்வோம் என கஹட்டோவிட்ட, ஓகொடபொல வாழ் மக்களிடம் நிட்டம்புவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தில்ருக் தெரிவித்தார்.

கஹட்டோவிட்டவில் இன்று அதிகாலை 3.00 மணிக்கு இடம்பெற்ற அசம்பாவித நிகழ்வொன்று குறித்து பொது மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் கஹட்டோவிட்ட பாதுகாப்பு குழுவினால் ஏற்பாடு செய்த கூட்டம் இன்று காலை 8.30 மணிக்கு கஹட்டோவிட்ட முஹியுத்தீன் ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.  கிராமவாசிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் பொலிஸ் அதிகாரி இதனைக் கூறினார்.

கம்பஹா மாவட்டத்திலுள்ள 14 பொலிஸ் பிரிவுகளில் முஸ்லிம்கள் அதிகம் வாழக்கூடிய பொலிஸ் நிலையம் எமது நிட்டம்புவ பொலிஸ் நிலையமாகும். இப்பகுதியில் இரு இனங்களையும் சேர்ந்த மக்கள் நீண்ட காலமாக அமைதியாக வாழ்ந்து வருகின்றனர்.

நாம் இந்த நாட்டில் கடந்த 30 வருட கசப்பான அனுபவத்தை பெற்றவர்கள். இபோன்ற ஒரு நிலைக்கும் நாம் சென்றுவிடக் கூடாது. குறுகிய நோக்கம் கொண்ட ஒரு சில குழுக்கள் தமது நோக்கங்களை அடைந்துகொள்வதற்கே இவ்வாரான இனவாத நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். நாம் அந்த தீய சக்திகளை சேர்ந்து நின்று தோற்கடிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கஹட்டோவிட்ட பாதுகாப்புக் குழுவின் தலைவர் நூருல்லா ஆசிரியரின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கஹட்டோவிட்ட, ஓகொடபொல, வை.எம்.எம்.ஏ. மாவத்தை உட்பட மூன்று ஜும்ஆ பள்ளிவாயல்களையும் சேர்ந்த பள்ளி நிருவாகத்தினர், ஜமாஅத்தினர், பிரதேச அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இன்று அதிகாலை 3.00 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை மறைத்துக்கொண்டு பெற்றோல் குண்டு, தடிகள் என்பனவற்றுடன் வந்த ஐந்து இளைஞர்கள் வந்த நோக்கத்தை நிறைவு செய்ய முடியாமல் தப்பியோடினர். இரவு நேரத்தில் பொலிஸாருடன் இணைந்து ஊரின் பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் ஊர் மக்களின் பாதுகாப்பு முயற்சியினால் கையில் எடுத்துவந்த தடி, பெற்றோல் குண்டு என்பவற்றை வீதியில் போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பான கடுமையான விசாரணையை நிட்டம்புவ பொலிஸார் முன்னெடுத்தனர். சம்பந்தப்பட்டவர்களைப் பிடிப்பதற்கு விசேட மோப்ப நாயின் உதவியும் பெறப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.