Header Ads



2020, முஸ்லிம்களுக்கு எப்படி இருக்கும்..??

-பைஸ்-

போர் முடிவுக்கு வந்த உடனேயே "தமிழர்களை ஒரு கை பார்த்துவிட்டார்கள்; இனி அடுத்த இலக்கு முஸ்லிம்கள்தான்" என்ற ஆரூடத்தை பலரும் சர்வசாதாரணமாகவே பேசிக் கொண்டதை நாம் அறிவோம். அதனை நிஜமாகவே உணரச் செய்வதாகவே அளுத்கம, கிந்தோட்டை, திகன சம்பவங்கள் அமைந்திருந்தன.

2009 இல் போர் முடிவுக்கு வந்த பின்னர் பௌத்த இனவாத சக்திகளின் கவனம் மத ரீதியான சிறுபான்மையினர் பக்கம் திரும்பியதே இவற்றுக்கு காரணமாகும். குறிப்பாக முஸ்லிம், கிறிஸ்தவ மத தலங்கள் தீவிரமாக இலக்கு வைக்கப்பட்டன. இதில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்குமளவுக்கு நடந்த சம்பவமே  2012 தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதல் சம்பவமாகும்.

அன்று முதல் முஸ்லிம்களுக்கு எதிரான விசமப் பிரசாரங்கள் நாடெங்கும் முன்னெடுக்கப்பட்டன. இதற்காகவே பொது பல சேனா அமைப்பு அப்போதைய ஆட்சியாளர்களின் பூரண அனுசரணையில் தோற்றுவிக்கப்பட்டது. 

பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் இந்த பிரசாரத்தில் பிரதான பாத்திரமேற்றார். முஸ்லிம்கள் இந்த நாட்டில் தீவிரவாதத்தை போதிப்பதாகவும் இந்த நாட்டை கொள்ளையடிக்க வந்தவர்களென்றும் பள்ளிவாசல்களில் ஆயுதப் பயிற்சி வழங்கப்படுவதாகவும் கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டார். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஹலால் சான்றிதழ் வழங்க கூடாது என முன்னெடுத்த பிரசாரத்தில் ஞானசார தேரர் வெற்றியும் கண்டார். 

இதற்கப்பால் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை குறிவைக்கும் பிரசாரங்களும் வன்முறைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன. பல முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் ஆங்காங்கே தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

பத்திரிகையாளர் மாநாடுகள் மூலமாக இவ்வாறான விசமப் பிரசாரங்களை முன்னெடுத்து வந்த பொது பல சேனா ஊர் ஊராகச் சென்று மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யத் தொடங்கியது. அதன் உடனடி வெளிப்பாடாகவே 2014 அளுத்கம வன்முறைகள் அமைந்தன. தர்கா நகரில் நடந்த கூட்டத்தில் ஞானசார தேரர் ஆற்றிய உரை பௌத்த அடிப்படைவாத சக்திகளை தூண்டிவிட்டது. மூவரைப் பலியெடுத்து பல கோடிக் கணக்கான சொத்துக்களை அழிக்க இந்த வன்முறைகள் காரணமாக அமைந்தன.இந்த வன்முறைகளை இனவாத சக்திகள் முன்னெடுத்தாலும் இதற்கான அனுசரணையை அப்போதைய அரசாங்கம் வழங்கி வந்தததையிட்டு முஸ்லிம்கள் கவலையடைந்தனர்.  இது ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களையும் சிந்திக்க வைத்த து. ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதுதான் இலங்கையில் இனவாத சக்திகளை கட்டுப்படுத்த வழி என முஸ்லிம் அரசியல் தலைமைகளும் பொது மக்களும் உறுதியாக நம்பினர்.
இந்நிலையில்தான் 2015 ஜனவரியில் நடந்த ஜனாதிபதித் தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கான சிறந்த வாய்ப்பாக அமைந்தது. பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட மைத்திரிபால சிறிசேனவை சிறுபான்மை மக்கள் நம்பினர். தமது நீண்ட காலப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வை மைத்திரி தருவார் என தமிழர்களும் பௌத்த இனவாத சக்திகளின் அச்சுறுத்தல்களிலிருந்து தம்மை பாதுகாப்பார் என முஸ்லிம்களும் நம்பினர். அதனைத் தொடர்ந்துவந்த பொதுத் தேர்தலிலும் முஸ்லிம்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் சாய்ந்த்தும் மேற்படி நம்பிக்கையிலேயே ஆகும்.

ஆனாலும் நாட்கள் செல்லச் செல்ல எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்பதை முஸ்லிம்கள் உணருமளவுக்கு நிகழ்வுகள் நடக்கத் தொடங்கின. 2017 நவம்பரில் மற்றுமொரு 'மினி அளுத்கம' காலி மாவட்டத்தின் கிந்தோட்டையில் அரங்கேறியது. அளுத்கமவில் எவ்வாறு படையினர் பார்த்திருக்க, ஊரடங்குச் சட்ட காலத்தில் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டதோ அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் கிந்தோட்டை சம்பவம் நடந்து முடிந்தது. இது முஸ்லிம்களை மேலும் கவலைக்குள்ளாக்கியது.

இது நடந்து சரியாக மூன்று மாதங்களில் கண்டி மாவட்டத்தை மையப்படுத்தி மிகப் பாரியளவில் வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டன. சுமார் 24 பள்ளிவாசல்களும் 450 வீடுகள், கடைகளுமாக சேதமாக்கப்பட்டன. 60 வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.

கண்டியின் பல பகுதிகளிலும் நடந்த இந்த வன்முறைகள் 1983 இல் தமிழ் மக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஜூலைக் கலவரத்தையே கண்முன் கொண்டு வந்தன. வன்முறைகள் கண்டிக்கு வெளியேயும் பரவ ஆரம்பித்த போதுதான் அரசாங்கம் விழித்துக் கொண்டது. அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியும் சமூக வலைத்தளங்களை தடை செய்தும் ஊரடங்குச் சட்டத்தை தொடராக அமுல்படுத்தியும் கட்டுப்படுத்த வேண்டிய நிலை வந்தது. 

இந்த வன்முறைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இதுவரை 280 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் வன்முறைகளை தூண்டிய மஹசொஹன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங க உட்பட பலர் அடங்குகின்றனர். இவர்களுக்கு எதிராக ஐசிசிபிஆர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான் இந்த வன்முறைகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு வழிநடாத்தப்பட்டுள்ளமையும் இதன் பின்னால் அரசியல் மறைகரங்கள் இருந்துள்ளமையும் தற்போது வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்துள்ளன. புதிதாக களத்துக்கு வந்த பழைய முகங்களைக் கொண்ட கட்சி மாத்திரமன்றி பிரதான தேசியக் கட்சிகளின் உள்ளூர் பிரதிநிதிகளும் இந்த வன்முறைகளுக்குப் பின்னால் இருந்த தை பாதிக்கப்பட்ட மக்கள் உறுதிப்படுத்துகிறார்கள். 

அப்படியானால் இதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன என்ற கேள்விக்கு விடை காணப்பட வேண்டும். எங்களுக்கு வாக்களிக்காத முஸ்லிம்களை இந்த நாட்டில் வாழ விடமாட்டோம் எனும் செய்தியை இந்த வன்முறைகள் மூலமாக இக் கட்சிகள் சொல்கின்றனவா? அப்படியானால் இதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் சொல்லப்போகின்ற பதில் என்னவாக அமையப் போகிறது?

இன்று பாராளுமன்றத்தில் உள்ள 21 முஸ்லிம் எம்.பி.க்களும் ஐக்கிய தேசியக் கட்சியுடனும் சுதந்திரக் கட்சியுடனுமே பின்னிப் பிணைந்துள்ளனர். இதுவே பிரச்சினைகளின் போது முஸ்லிம் எம்.பி.க்களால் ஒரு கட்டத்தைத் தாண்டி செயற்பட முடியாத நிலைக்குத் தள்ளியுள்ளது. கண்டியில் இவ்வளவு நடந்தும் கூட 21 முஸ்லிம் எம்.பி.க்களும் ஒரே மேசையில் இருந்து ஊடக மாநாடு ஒன்றை நடத்தமுடியவில்லை. மூடப்பட்ட அறைகளில் ஒன்றாக இருந்து பேசினாலும் வெளியில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்வகையில் ஏதேனுமொரு சமிக்ஞையை வெளிப்படுத்த முடியாதளவு அவர்களது கைகள் கட்டப்பட்டுள்ளன. எதிரணியில் ஒரு முஸ்லிம் எம்.பி.யும் இல்லாத தன் குறையை இந்த நாட்களில் முஸ்லிம் சமூகம் நன்கு உணரத் தலைப்பட்டது. ஆளும் தரப்பிலுள்ள முஸ்லிம் எம்.பி.க்கள் ஆக்ரோசமாகப் பேசினாலும் அரசாங்கத்தினுள் அதனால் எந்த அதிர்வுகளையும் ஏற்படுத்த முடியவில்லை. மாறாக முஸ்லிம்களால் மாத்திரம் 'தைரியமான பேச்சு' என கொண்டாடவே முடிந்தது. 

இப்போது முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பாதை 2020 ஐ நோக்கியதாக திட்டமிடப்பட வேண்டியுள்ளது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவும் சம்பிக்க ரணவக்கவுமே பிரதான வேட்பாளர்களாக களமிறங்குவார்கள் என்பதற்கான சமிக்ஞைகளும் இப்போது தெரிய ஆரம்பித்துள்ளன. பௌத்த மதவாதத்தையும் பௌத்த தேசியவாதத்தையும் மூலதனமாக கொண்ட அரசியலுக்குத்தான் இந்த நாட்டில் எதிர்காலம் இருக்கிறது என்பதை கண்டி வன்முறைகளும் அதன் பின்னரான சிங்கள மக்களின் மனோ நிலையும் கட்டியம் கூறுகின்றன. அப்படியானால் இந்த தீவிரப் போக்காளர்களுடன் முஸ்லிம் சமூகம் எவ்வாறு சமரசம் செய்யப் போகிறது? அதற்கான காய் நகர்த்தல்கள் எவ்வாறு அமையப் போகின்றன?  இதற்காக முஸ்லிம் சமூகம் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளுமா? இன்றேல் 2020 ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர்தான் விழித்துக் கொள்ளுமா?

வீரகேசரி 17.03.2018

3 comments:

  1. I like to copy this massage nd send on wahtsapp what . I can't copy. Please don't freeze like that massage. BECAUSE this is very good massage for Muslim's. Can u unfreeze

    ReplyDelete
  2. இதன் முன் ஏற்பாடா இருக்கலாம் சம்பிக்க முஸலிம்களை கூட்டமைப்பாக இருக்கும்படி அறிவுரை செய்கிறார்

    ReplyDelete
  3. It's a very good article, composed well. If it is enough, the experience, then Muslims will choose a different platform in the next election. Perhaps JVP is the only next replacement.

    ReplyDelete

Powered by Blogger.