Header Ads



தேசிய அரசு என்பது, கணவன் - மனைவி குறித்த விடயமல்ல, பாராளுமன்றில் சுவாரசிய விவாதம்


தேசிய அரசாங்கத்தை தொடர்ந்து முன்கொண்டு செல்வதில் எந்த சிக்கலும் இல்லை என்று பிரதமர் ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று -21- தேசிய அரசாங்கம் தொடர்பில் விளக்கமளிக்கும்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் இணைந்து தொடர்ந்து தேசிய அரசாங்கத்தை முன்கொண்டு செல்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், தேசிய அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு விலகவில்லை என்று, கூட்டமைப்பின் பொதுசெயலாளர், அமைச்சர் மகிந்த அமரவீர சபையில் விளக்கமளித்தார்.

இதன்படி ஐக்கிய தேசிய கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கும் இடையில் தேசிய அரசாங்க உருவாக்கத்துக்காக ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கை தொடர்ந்தும் செல்லுபடியாகும் என்று அவர் கூறினார்.

இதனை அடுத்து எழுத்த ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தேசிய அரசாங்கத்துக்கான ஒப்பந்தம் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்துடன் காலாவதியாகியுள்ள நிலையில், மீண்டும் ஒப்பந்தம் செய்துக் கொள்ளாமல் தற்போதைய அமைச்சரவையை அங்கீகரிக்க முடியாது என்று கூறினார்.

இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் பைசர் முஸ்தபா, உடன்படிக்கையுடன் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பு சபையில் குறித்த உடன்படிக்கையை நீடிப்பதாக அறிவித்ததன் பின்னர் அது குறித்து மூன்றாம் தரப்பு கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.

தொடர்ந்து எழுந்த அமைச்சர் லக்ஷ்மண் கிரியெல்ல, ஒப்பந்தம் செய்து கொண்ட இரண்டு கட்சிகளும் ஒப்பந்தத்தை நீடிப்பதாக அறிவித்துள்ள நிலையில் இது குறித்து மேலும் விவாதிக்க வேண்டியதில்லை என குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் இது கணவன் மனைவி குறித்த விடயம் அல்லவென்றும் அரசாங்கம் சம்பந்தப்பட்டது என்பதால் தற்போது தேசிய அரசாங்கத்தின் பங்குதாரிகள் இணக்கம் கண்டுள்ளநிலையில், எதிர்வரும் தினங்களிலேனும் புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்து, நாடாளுமன்றத்தில் முன்வைக்குமாறு அவர் கோரினார்.

இதற்கு பதில் வழங்கிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு எந்த விதமான ஆவணங்களும் அவசியமில்லை என்று குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தில் பல சந்தர்ப்பங்களில் தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கான எந்த ஆவணங்களும் இல்லை.

இலங்கையில் முதன்முறையாக அவ்வாறான அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டதாலேயே தாம் ஒப்பந்தம் செய்துக் கொள்வதற்கு அனுமதித்தாக பிரதமர் குறிப்பிட்டார்.

இதன்போது எழுந்த பிவித்துரு ஹெல உறுமயவின் செயலாளர் உதயகம்மன்பில, தேசிய அரசாங்கத்தை உருவாக்க ஆவணங்கள் தேவையில்லை என்ற பிரதமரின் கூற்று, பிழையான முன்னுதாரணமாக பின்பற்றப்படக்கூடும் என்று சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில் அரசாங்கங்கள் தேசிய அரசாங்கத்தை உருவாக்கிவிட்டதாக வாய்மூலம் அறிவித்து விட்டு, தமக்கு ஏற்றாற்போல அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள வாய்ப்புகள் உள்ளன.

எனவே இந்த விடயத்தில் அரசியல் யாப்புக்கு அமைவாக பிரதமர் செயற்பட வேண்டும்என்று கம்மன்பில கோரினார்.

இதற்கு பதில் வழங்கிய பிரதமர், தாம் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தை உதாரணமாக மேற்கோள்காட்டியது, தேசிய அரசாங்கத்தை உருவாக்க ஆவணங்கள் அவசியம் இல்லை என்பதை எடுத்துக்காட்ட மாத்திரமே என்றும், அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பாக இல்லை என்றும் விளக்கமளித்தார்.

எவ்வாறாயினும், இந்த விடயத்தில் சட்டரீதியான பிரச்சினைகள் இருப்பின் அது குறித்து ஆராய்ந்து அறிவிப்பதாக, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.