February 07, 2018

இலங்கை காற்பந்தை, கலக்கும் முஸ்னி


– அனஸ் அப்பாஸ் –

19 வயதிற்கு கீழ்பட்ட பிரிவில் இலங்கை சார்பில் ஈரான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளில் தனது திறமையை பறைசாட்டிய ஒரு இளம் காற்பந்து வீரர் A.M.M. முஸ்னி.

19 வயதேயான முஹம்மது முஸ்னி, நீர்கொழும்பு பலஹத்துறையைச் சேர்ந்த அப்துல் முத்தலிப் – பாத்திமா நஸ்ரியா தம்பதிகளின் அன்பு மகன் ஆவார். இவர் நீர்/ அல்-ஹிலால் மத்திய கல்லூரியில் கல்வியைத் தொடரும்போதே கல்லூரியின் காற்பந்துக் கழகத்தில் இணைந்தார். 13 வயதிலேயே கல்லூரி காற்பந்து கழகத்தில் அபார திறமையை வெளிப்படுத்திய இவர், தனது 14 வயதில் பெரியமுல்லை Western காற்பந்து கழகத்தில் இணையும் வாய்ப்பைப் பெற்றார். Milo Matches, Socker Tournaments, National Jersey Meets என பல போட்டிகளில் இவரால் தொடர்ந்து தனது திறமைகளை வெளிக்காட்ட முடிந்தது.

ஈரானில் இடம்பெற்ற சர்வதேச போட்டிக்கு இலங்கையில் இருந்து 800 பேரில் திறமை அடிப்படையில் தேசிய ரீதியாக தெரிவாகிய 18 பேரில் முஸ்னியும் இடம்பிடித்தார். ஈரானில் இரு போட்டிகள் தோல்வியும், ஒரு போட்டியில் வெற்றியையும் சுவீகரித்தது இலங்கை. அடுத்து, தஜிகிஸ்தானில் நடைபெறும் சர்வதேச போட்டிக்கு இலங்கையில் தேசிய ரீதியாக 700 பேர் போட்டியிட்டு 23 பேர் தெரிவாகினர். இத் தெரிவிலும் உள்வாங்கப்பட்டார் முஸ்னி.  (ஈரானுக்கு தெரிவான 18 பேரில் 8 பேர் மாத்திரமே இம்முறை தஜிகிஸ்தான் போட்டிக்கு தகுதி பெற்றனர்.) தஜிகிஸ்தானில் இன்னும் முன்னேற்றம் கண்ட இலங்கை அணி ஒரு முறை தோல்வியும், இரு முறைகள் வெற்றியையும் சுவீகரித்தது.

சர்வதேச ரீதியான போட்டிகளில் தனது அபார திறமையை வெளிப்படுத்திவிட்டு நாடு திரும்பிய முஸ்னிக்கும் இன்னும் மூவருக்கும் இலங்கை பொலிஸ் காற்பந்து கழகத்தில் இணையுமாறு அழைப்பு கிடைத்தது. இதன்படி இப்போட்டிகளில் பங்கெடுத்த முஸ்னியும், அவரது சக வீரர் ஒருவரும் தற்போது மாத சம்பளத்துடன் தொடர் பயிற்சி பெற்று இலங்கை பொலிஸ் காற்பந்து கழக போட்டிகளில் கலக்கி வருகின்றனர்.

காற்பந்து விளையாட்டில் மாவட்ட மட்டத்திலும், தேசிய ரீதியிலும் ஒரு காலத்தில் நீர்/ அல்-ஹிலால் மத்திய கல்லூரி பிரகாசித்து வந்தது. காற்பந்து விளையாட்டில் அதன் அடைவுகள் காலம் கடந்தாலும் கனி தருகின்றமை மகிழ்ச்சிக்குரிய அம்சம்.

இயல்பிலேயே கடல், ஆறு, கழிமுகம் என பல வளங்களுடன் சிறந்து விளங்கும் பலஹத்துறை கிராமத்தில் முஸ்னி போன்ற பல திறமைகள் இலை மறை காயாக மறைந்து கிடக்கின்றமையை மாலை வேளைகளில் பலஹத்துறை கடற்கரை திடலிலும், ஏனைய மைதானங்களிலும் அவதானிக்கலாம்.

சமையல் தொழில் செய்யும் ஒரு சாதாரண தொழிலாளியின் மகனாகப் பிறந்த முஸ்னியின் நகர்வுகள் பாராட்டத்தக்கவை. சர்வதேச ரீதியாக இளம் காற்பந்து வீரர்களின் நட்சத்திரமாக விளங்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோவையே தனது முன்மாதிரி விளையாட்டு நட்சத்திரமாக முஸ்னி கூறுவதுடன், எதிர்காலத்தில் இன்னும் பல சர்வதேச போட்டிகளில் இலங்கையின் காற்பந்து திறமையை வெளிப்படுத்தும் ஒரு தேசிய வீரராக தன்னை உருவாக்கவே இவர் முயல்கின்றார்.

தனது பாடசாலை விளையாட்டுக் கழகம் ஹிலாலியன்ஸ், பெரியமுல்ல “Western” காற்பந்துக் கழகம், பயிற்றுனர்களான தாஜுதீன், அஜ்மல் ஆசிரியர், பெற்றோர், பலஹத்துறை ஊர் மக்கள், நண்பர்கள், நலன்விரும்பிகள் என சகலருக்கும் தனது நன்றிகளை சமர்ப்பிக்கின்றார் முஸ்னி.

பண்டைய காலம் தொட்டு, உலகம் முழுவதும் மக்கள் பந்தை உதைத்தல் அல்லது நகர்த்தல் சார்ந்த விளையாட்டுக்களை விளையாடி இருக்கின்றனர். இருந்தாலும் கால்பந்தின் பெரும்பாலான நவீன நெறிமுறைகள் அவற்றின் பிறப்பிடமான இங்கிலாந்தில் தோன்றியவை. 1952 இல் FIFA (Federation Internationale de Football Association) பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பில் அங்கத்துவம் பெற்ற இலங்கை, Football Federation of Sri Lanka எனும் இலங்கை அரச அமைப்பினால் கண்காணித்து பயிற்றுவிக்கப்படுகின்றது. FIFA சர்வதேச தரப்படுத்தலில் இலங்கை தற்போது 200 ஆவது இடத்தில் இருப்பதுடன், ELO சர்வதேச தரப்படுத்தலில் 219 ஆவது இடத்தையும் வகிக்கின்றது.

சர்வதேச ரீதியாக கிரிக்கட் போட்டிகளில் இலங்கை அணியின் பெயர் பிரசித்தம்பெற்ற போதும், காற்பந்து விளையாட்டுத் துறையில் அதன் அடைவுகள் மேலோங்க இன்னும் பல முஸ்னிகள் இந்த நாட்டுக்குத் தேவை.

0 கருத்துரைகள்:

Post a Comment