Header Ads



மஹிந்த எப்படி வெற்றியீட்டினார்..?

ஒப்பீட்டளவில் அமைதியாக நடந்து முடிந்திருந்தாலும் இலங்கையின் இந்த உள்ளூராட்சி தேர்தல் இரண்டு விசயங்களை வலுவாக கோடிகாட்டிச் சென்றிருக்கிறது. ஒன்று தென்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கணிசமான வெற்றி. அடுத்தது வடக்கு கிழக்கு தமிழ் பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பின்னடைவு.

வன்முறை, ஊழல் போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வீழ்த்தப்பட்டார். தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கணிசமாக அவருக்கு எதிராக அப்போது வாக்களித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த உள்ளூராட்சி சபை தேர்தல்களில் அவரது பொதுஜன பெரமுன கட்சி அமோக வெற்றியை பெற்றிருக்கிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி பாரம்பரியமாகவே பலமாகத்திகழும் தலைநகர் கொழும்பு போன்ற இடங்களைத் தவிர ஏனைய இடங்களில் ராஜபக்ஷவே பெருவெற்றியை பெற்றுள்ளார். தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் சொந்த ஊரான பொலன்நறுவையிலும் சில இடங்களில் மஹிந்த அணி ஊடுருவி உள்ளது.

பொதுவாக மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்தில் மஹிந்த அணிக்கு பெரிய ஆதரவு இருப்பதாக கூறமுடியாது. ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது அரசாங்கத்தில் அங்கம் வகுக்கும் மலையக கட்சிகளான அமைச்சர் திகாம்பரத்தின் கட்சி மற்றும் மலையக மக்கள் முன்னணி கூட்டணி அங்கு பலம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஆனால், இந்த தேர்தலில் மலையகத்தில் பல சபைகளில் அங்கு பலம் வாய்ந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் சேர்ந்து மஹிந்த அணி ஆட்சியமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அரசியலில் நிரந்தர நண்பனோ, பகைவனோ கிடையாது என்று கூறும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரான கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன், இ.தொ.கா - மஹிந்த அணி கூட்டாக பல சபைகளில் ஆட்சி அமைத்தாலும் மக்களுக்கு நன்மை பயப்பதாக அது இருக்க வேண்டும் என்று கூறினார்.

மஹிந்த வெற்றிக்கான காரணம்

'வெள்ளைவான் கடத்தல் கலாச்சாரம், ஊழல் ஆகியவைதான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வைத்த குற்றச்சாட்டு. அவரது ஆட்சி மாறிய பின்னர், இங்கு அப்படியான வன்செயல்கள் குறைந்திருக்கின்றன அல்லது இல்லாது போய்விட்டன என்பது உண்மைதான்' என்று கூறும் கொழும்பில் உள்ள ஒரு இந்திய செய்தியாளர், ஆனால் தற்போதைய அரசில் எந்த விதமான முன்னேற்றமும் நடக்கவில்லை என்பது தற்போது மக்களுக்கு பெரும் சுமையாக தெரிவதாகக் கூறுகிறார். போருக்கு பின்னர் இலங்கை முழுவதும் பெருந்தெருக்களை அமைத்து வசதி செய்தார் மஹிந்த ராஜபக்ஷ. ஆனால், இப்போது மாநகர சபைக்கு உட்பட்ட தெருக்கள் கூட சீரமைக்கப்படாமல் இருப்பதாக கொழும்பில் வாழும் அந்தச் செய்தியாளர் குறைகூறுகிறார். இதுவே சிங்கள மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு மஹிந்த அலை ஏற்படக் காரணம் என்கிறார் அவர்.

தொழில் உருவாக்கம், பொருளாதார முன்னேற்றம் என எந்த விதத்திலும் ஒரு முன்னேற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு தற்போதைய அரசு ஏமாற்றத்தையே தந்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

No comments

Powered by Blogger.