Header Ads



சோமாலிய கடற்கொள்ளையர்கள் போன்று இலங்கை - அநுரகுமார

(ஆதில் அலி சப்ரி)

ஊழல் தொடர்பான அறிக்கைகளை கையில் வைத்துக்கொண்டு, ஊழலில் ஈடுபட்டவர்களை ஆட்சியமைக்க அழைப்பது ஜனாதிபதியின் ஊழலுக்கெதிரான போராட்டமே ஊழல் மிக்கதாக மாறியுள்ளதா? என்ற சந்தேகம் ஏற்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 

பிணைமுறி மோசடி மற்றும் பாரிய நிதி மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

ஊழல் தொடர்பான ஆணைக்குழுக்களின் சில அறிக்கைகள் இரண்டு வருடங்களுக்கு முன்னரே ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தாலும் அவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமல் இப்போது அரசியல் இலாபம் பெறவே பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 

விவாதத்தில் கலந்துகொண்டு அவர் தொடர்ந்தும் கூறியதாவது,

பிணைமுறி மோசடி இந்த நாட்டுக்கும் மக்களையும் எவ்வாறு பாதித்துள்ளது என்பது குறித்து கவனம் செலுத்தப்படுவதில்லை. கடந்த 10 வருடங்களில் ஊழலால் இந்த நாடு 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய்களுக்கு அதிகமான நிதியை இழந்துள்ளது. ஊழல் காரர்களை தண்டிக்கவே மக்கள் இந்த அரசாங்கத்தை ஆதரித்தனர். எனினும் இந்த அரசாங்கம் தாபிக்கப்பட்டு சிறிது காலத்திலேயே பெரும் ஊழலில் ஈடுபட்டது. சிலர் இன்று வரை ஊழலில் ஈடுபட்டவர்களை பாதுகாக்க முயற்சிக்கின்றனர். 

பிணைமுறி மோசடி 2015ஆம் ஆண்டு பெப்பவரி மாதம் 27ஆம் திகதி இடம்பெற்றது. நாம் இதுகுறித்து பாராளுமன்றில் மார்ச் மாதம் 17ஆம் திகதி கேள்வியெழுப்பினோம். இன்று மூன்று வருடங்களை நெருங்கியுள்ளது. இவ்விடயத்தில் பிரதமர் அப்போதே கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அவ்வாறில்லாது நல்லாட்சி தொடர்பாக இன்று கதைக்க தகுதியில்லை. இப்போது கழுத்து இருகிய பின்னர் தப்பிக்க முற்படுவது சாத்தியமாகாது. பிணைமுறி மோசடிக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று பிரதமர் அப்போது கூறினாலும் அது ஜனாதிபதி அறிக்கையில் பொய்யாகியுள்ளது. பிரதமர் மஹேந்திரனை பாதுகாத்தார் என்பது தெளிவாகியுள்ளது. மக்களே ஊழலில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும். முன்னாள் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற 34 பாரிய நிதி மோசடி குறித்த அறிக்கையும் வெளியாகியுள்ளன. குறித்த 34 மோசடிகளைத் தவிர மேலும் எவ்வளவோ பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளது. 

முன்னாள் ஜனாதிபதியின் ஊழலொன்று குறித்து பிரபலமாக பேசப்படுகின்றது. அவரது குடியுரிமை நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளையும் கண்டோம். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். எனினும் அரசியல் காரணங்களுக்காக பாராளுமன்றம் தண்டனை வழங்கும் இடமாக மாறுவதை நாம் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம். சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய கப்பலை போன்று 70 வருடங்களாக இலங்கைத் தீவு கொள்ளையர்களிடம் சிக்கியுள்ளது- என்றார். 

No comments

Powered by Blogger.