Header Ads



எனக்கு அமைச்சுப் பதவி, வழங்குவதாக உத்தியோகபூர்வமாக கூறவில்லை - ஹிஸ்புல்லா

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் கீழ் உள்ள நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அமைச்சுப் பதவிகளில் செய்யப்பட்ட மாற்றத்தின் போதும் குறித்த இராஜாங்க அமைச்சுப் பதவி எவ்வித மாற்றங்களுமின்றி தொடர்ந்தும் அவர் வசமே உள்ளது. 

எனினும், குறித்த இராஜாங்க அமைச்சுப் பதவி அஜித் பீ. பெரேராவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ள போதிலும் அதில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை. அவருக்கு “சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சமூக மறுசீரமைப்பு” இராஜாங்க அமைச்சுப் பதவியே வழங்கப்பட்டுள்ளது.  

இவ்வாறு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

இந்த விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,

“ இன்று ஞாயிற்றுக்கிழமை அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும் அது ஐக்கிய தேசிய கட்சி சார்ந்த உறுப்பினர்களது அமைச்சுக்களிலேயே மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.  விரைவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களது அமைச்சுக்களிலும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக கட்சித் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எனக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படுவதாக உத்தியோகபூர்வமாக எதுவும் கூறப்படவில்லை. நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலைகள் காரணமாக அவ்வாறு வழங்குவதற்கான வாய்ப்புக்களும் மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, தொடர்ந்தும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சராக நான் கடமையாற்றுவேன். – என்றார்.

No comments

Powered by Blogger.