February 23, 2018

வெள்ளையாக முடியுமா..?

‘வெள்ளையாக வேண்டும் டாக்டர்...’ - பெரும்பாலான சரும நல மருத்துவர்கள் இன்று அதிகம் சந்திக்கும் கேள்வி இதுதான். நம்மில் பெரும்பாலானோரின் ஆசையின்படியே வெள்ளையாக முடியுமா என்பதைத் தெரிந்துகொள்ளும் முன், எதனால் கருப்பு நிறம் ஏற்படுகிறது? நமக்கும் வெள்ளைக்காரர்களுக்கும் என்ன வித்தியாசம் என்ற அடிப்படையான சில விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

மெலனோசைட் (Melanocyte) என்கிற செல் நம் மேல் தோலின் அடிப்பகுதியில் உள்ள அடுக்கான Stratum basale-ல் உள்ளது. ஒவ்வொரு 10 கெரட்டினோசைட்டுக்கும் ஒரு மெலனோசைட் உள்ளது. இந்த மெலனோசைட்டானது தன் உடலில் வேர் போன்ற Dendrites-ஸினைப் பெற்றுள்ளது. இந்த மெலனோசைட் தன்னில் இருந்து ‘மெலனின்’ என்ற நிறமூட்டியை(Pigment) தயாரிக்கும்.

ஒவ்வொரு மனிதருக்கும் அது ஆசியாவைச் சேர்ந்தவராக இருப்பினும், அமெரிக்காவைச் சேர்ந்தவராக இருப்பினும், ஆப்பிரிக்காவை சேர்ந்தவராக இருப்பினும் மெலனோசைட்டின் எண்ணிக்கை ஒன்றுதான். நமக்குள் ஏற்படும் இந்த நிற பேதம் இந்த மெலனோசைட் யூமெலனின்(Eumelanin) ஐ சுரக்கிறதா அல்லது பியோமெலனின் (pheomelanin) ஐ சுரக்கிறதா என்பதைப் பொறுத்துதான்.

பொதுவாக ஒரு மெலனோசைட் கிட்டத்தட்ட 36 கெரட்டினோசைட்டுக்கு இந்த மெலனினை அந்த Dendrites வழியாகக் கொடுக்கும். இந்த விகிதத்தை அதாவது 1 மெலனோசைட் : 36 கெரட்டினோசைட்-ஐ Epidermal Melanin Unit என்று அழைப்பார்கள். இந்த ‘யூமெலனின்’ கறுப்பு நிறத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிகம் இருக்கும்.

பியோமெலனின் வெள்ளைக்காரர்களின் உடலில் இருக்கும். இந்த பிக்மென்டை அது மெலனோசோமில் சேர்த்து வைக்கும். இந்த மெலனோசோமின் அளவு பெரிதாக இருந்தாலும் நிறம் கறுத்துவிடும். இந்த மெலனோசைட் நம் சருமத்தில் மட்டுமல்ல, விழித்திரையிலும், உள் காது மற்றும் நரம்பு மண்டலத்திலும், இதயம் போன்ற மற்ற உறுப்புகளிலும் உள்ளது.

* வெண் புள்ளி நோயில் - இந்த மெலனோசைட் அழிந்துவிடும்.
* அல்பினிஸம் - முகம், உடல், கண், இமை, தலை முடி இவையெல்லாம் சிலருக்கு பிறப்பிலிருந்தே வெளுத்து இருக்கும்.

இவர்களுக்கு மெலனோசைட்ஸ் எண்ணிக்கை சரியாக இருந்தாலும், முழுமையாக நிறம் பெற்ற மெலனோசோமை தயாரிப்பதில் குறை இருக்கும். நம் உடலில் தோன்றும் மச்சம், மங்கு இவையெல்லாம் மெலனோசைட்ஸின் மாறுபாட்டால் உண்டாவதுதான்.சரி... நாம் விஷயத்துக்கு வருவோம்.

கடந்த இதழில் பார்த்திருந்ததுபோல Kligman Regime கொண்ட க்ரீம்கள் மங்குவின் நிறத்தை மங்க வைப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. இதில் Hydroquinone என்ற மருந்து மெலனின் பிக்மென்ட் உருவாகும் வேதிப்பாதையில் ஒரு முக்கியமான படியை நிறுத்திவிடும். அதனால், மெலனின் உருவாவது தடைபடும். இந்த மருந்து சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம்.

அந்த எரிச்சலை நீக்க ஒரு ஸ்டீராய்டு மருந்தும் இதில் சேர்க்கப்படுகிறது.
அதேபோல் தோலில் இந்த Hydroquinone மருந்தை எளிதாக உள் செலுத்த தோலை கொஞ்சம் மெலிதாக Tretinoin என்ற மருந்தும் சேர்க்கப்படும்.

இந்த மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைக்கும்போது ஆரம்ப நிலையில் சில வாரங்கள் உபயோகப்படுத்தினாலும், அதை நிறுத்திவிட்டு பல நாட்கள் உபயோகித்தாலும் எந்த பாதிப்பும் தோலுக்கு ஏற்படுத்தாத களிம்புகளை பின்னர் பரிந்துரை செய்வார்கள்.

இந்த மருந்து எல்லோருக்கும் ஒரே மாதிரி செயல்படாது. (எந்த மருந்தும் எல்லோருக்கும் ஒரே மாதிரி செயல்படாது). அதனால்தான் 2-4 வாரத்துக்கு ஒரு முறை நோயாளியை திரும்பவும் வர சொல்வார்கள்.

மருத்துவரிடம் வர வேண்டாம் என்று நினைத்து மங்கு சரியானவுடன் இந்த மருந்தை திடீரென்று நிறுத்தி விட்டால், திரும்பவும் தோல் கருத்துவிடும். மங்கு சரியாகி விட்டது என்று தொடர்ந்து மருத்துவர் ஆலோசனை இல்லாமல் உபயோகித்தாலும் வம்பு.

இப்போது பிரச்னை என்னவென்றால் இந்த மருந்தையே இளம்வயதினர், பள்ளி செல்லும் பிள்ளைகள் அனைவரும் முகம் சிவப்பாவதற்காக தற்போது உபயோகப்படுத்துகிறார்கள். முதலில் இந்த மருந்தை உபயோகப்படுத்தும்போது வாழ்க்கை மிகவும் நன்றாகத்தான் இருக்கும். எல்லோரும் பார்க்கும்போது ‘ஹே ரொம்ப கலராகிட்டீயே’, ‘முகம் பளிச்சுனு இருக்கே’ என்று சொல்வார்கள்.

ஆனால், நாளாகநாளாக தோல் இந்த மருந்துக்கு அடிமையாகிவிடும். இந்த மருந்தை போட்டால்தான் நன்றாக இருப்பது போலும், நிறுத்தினால் முகம் மிகவும் கருத்து போனது போலவும் ஆகிவிடும்.

இந்த மருந்தில் ஸ்டீராய்டு இருப்பதினால், தோல் மிகவும் மெலிந்து, சிவந்து, பருக்கள் நிறைய தோன்றி முகமே பார்ப்பதற்கு மிகவும் விகாரமாக மாறி விடும். இந்த Hydroquinone மருந்தை அதிக நாட்கள் பயன்படுத்தினால் முரண்பாடாக எந்த மருந்து நிறத்தை குறைத்ததோ, அதே மருந்து முகத்தை கருமையாக்கிவிடும்.

இதை Exogenous Ochronosis என்று கூறுவர். இந்த மாதிரி கூட இருக்கும் சக ஊழியர்கள் அல்லது தோழிகளின் ஆலோசனையின்படி Lite, Lite என்று முடியும் க்ரீம்களை மருத்துவர்கள் பரிந்துரைக்காமல் உபயோகப்படுத்தும் போது வம்பை விலை கொடுத்து வாங்குவது போல் ஆகிவிடும்.

நம்முடைய தீய உணவு பழக்கத்தினால் உடல்பருமன் போன்ற நோய்கள் எவ்வாறு தோன்றி நம்மை தொல்லைப்படுத்துகிறதோ, இந்த ஸ்டீராய்டு க்ரீம்களை மக்களே தானாக பயன்படுத்துவதினால் Post Steroid Dysmorphic Facies(PSDF) என்ற புது நோயும் தோன்றி தொல்லைப்படுத்த ஆரம்பித்துவிட்டது.

இந்த நோய் தோன்றிய பின் அந்த மருந்தை நிறுத்தி சில நாட்கள் அவர்கள் வெளியே முகம் காட்டவே முடியாத அளவுக்குக் கஷ்டப்பட்டு கொஞ்சம்கொஞ்சமாக தோலை சரி செய்வதற்குள் மருத்துவருக்கே மூச்சு முட்டிவிடும்.

ஒரு சில விஷயங்களை சரி செய்து விட்டாலும், சிலருக்கு முகத்தில் உள்ள சிறு ரத்த குழாய்கள் நிலையாகவே விரிவடைந்துவிடும். அதை சரி செய்யவே முடியாது. க்ரீம்களிலும், மருந்துகளிலும் பிரச்னை என்றால் பின்பு எப்படிதான் நான் வெள்ளையாவது டாக்டர் என்று கேட்பீர்கள் என்றால், அதைப் பற்றி விரிவாக அடுத்த இதழில் பார்ப்போம்...

1 கருத்துரைகள்:

Post a Comment