Header Ads



"கொழுக்கட்டையும், மோதகமும்"

எமக்கு இறுதியாக கிடைத்த மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகிய இரண்டு ஜனாதிபதிகளும் கொழுக்கட்டையும் மோதகமுமாகவே இருக்கின்றனர் என கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இணைப்பாளர் லீலாவதி தெரிவித்துள்ளார்.

உருவம் வேறாக இருந்தாலும் அவர்களின் செயற்பாடுகள் ஒன்றாகவே இருக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் மேற்கொள்ளும் இடத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தினால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் எவ்வித மாற்றத்தினையும் எதிர்ப்பார்க்க முடியவில்லை.

இரண்டு ஜனாதிபதியும் எமது பிள்ளைகள் தொடர்பில் பல கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். மாறாக அவர்களால் எமக்கு எவ்வித முடிவுகளையும் பெற்று தர முடியாதுள்ளது. எமக்கு எமது பிள்ளைகளே வேண்டும்.

நாம் வீதி போராட்டத்தினை ஆரம்பித்து எதிர்வரும் 20ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. இதுவரை எமக்கு உதவிய அனைத்து சிவில் அமைப்புக்கள், பொதுமக்கள், வர்த்தகர்கள், அரசியல்வாதிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றோம்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாம் பாரிய அளவிலான போராட்டம் ஒன்றை ஐ.நாவிற்கு கேட்கும் வகையில் முன்னெடுக்க உள்ளோம்.

இதற்கு ஒத்துழைக்கும் வகையில் வர்த்தகர்கள், பொதுமக்கள், சிவில் அமைப்புக்களினுடைய ஒத்துழைப்பினையும் வேண்டி நிற்கின்றோம். அன்றைய தினம் வடக்கில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி எமது போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.