Header Ads



ரவி கருணாநாயக்கா, தூசுக்கு ஒப்பானவர் - மனோ

"மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டேயாகவேண்டும்'' என்று தேசிய சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிரடி உரையானது கூட்டரசின் உறவுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியால் தெரிவிக்கப்பட்ட கருத்தானது தற்போது அரசியல் வட்டாரத்தில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், இந்த மோசடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரிய நடவடிக்கையை எடுக்கத் தவறிவிட்டார் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமையானது கூட்டரசில் விரிசலை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

"மத்திய வங்கியில் பிணைமுறி மோசடி இடம்பெற்றுள்ளது என்பது தெரிந்தும் அதுதொடர்பில் விசாரணைகள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட காரணத்தாலேயே நாம் இவ்விடயத்தில் இதுவரை அமைதியாக இருந்தோம்.

தற்போது நல்லாட்சி அரசின் கொள்கைக்கிணங்க இதன் விசாரணைகள் நிறைவுசெய்யப்பட்டு உண்மையும் வெளியுலகத்துக்கு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், பேர்ப்பச்சுவல் நிறுவனத்தின் அதிகாரி கசுன் பலிஹேன ஆகியோர் இதில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாகவும் தற்போது இனங்காணப்பட்டுள்ளனர்.

எனவே, இனியும் இதில் தாமதம் செய்யாது இவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று நாம் தெரிவித்துக்கொள்கிறோம்.

அதேநேரம், இதனால் கூட்டரசுக்குப் பாதிப்பு என்பதை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. 10 வருட எமது போராட்டத்தின் பயனாகவே இந்த அரசு வெற்றிபெற்றது.

இவ்வாறு நாம் கடுமையாகப் போராடி பெற்றுக்கொண்ட இந்த நல்லாட்சியை அவ்வளவு எளிதாகக் கவிழ்க்கவிடமாட்டோம். நல்லாட்சி அரசைப் பொறுத்தவரை ரவி கருணாநாயக்க எல்லாம் தூசுக்கு ஒப்பானவர்.

இவரையெல்லாம் துடைத்துவிட்டு எமது அரசு 2020 வரை முன்னோக்கி நகரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை'' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.