Header Ads



பிரதமர் ரணில் இன்று, வெளியிட்ட விஷேட அறிக்கை

மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு முழுமையாக நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங் கூறியுள்ளார். 

பிரதமரினால் இன்று -18- வௌியிடப்பட்ட விஷேட அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. பிரதமர் வௌியிட்டுள்ள விஷேட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; 

நாங்கள் அதிகாரத்திற்கு வந்தது ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கே. கட்சி பேதமின்றி ஊழல்வாதிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கே. 

பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரணை செய்வதற்கு ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தி ஜனாதிபதி ஆணைக்கழுவை நியமித்ததுடன் அந்த ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினோம். எமது அமைச்சர்களும் நானும் ஆணைக்குழுவுக்கு சென்று சாட்சியமளித்தோம். 

குற்றச்சாட்டுக்கள் எழுந்த சமயத்தில் எந்தவொரு முன்னைய அரசாங்கங்களும் இதுபோன்று நடந்து கொண்டதில்லை என்று பிரதமரின் விஷேட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

கடந்த அரசாங்கத்தில் பல சந்தர்ப்பங்களில் இதுபோன்ற குற்றச்சட்டுக்கள் எழுந்துள்ளன. எனினும் அவை தொடர்பில் எந்த சந்தர்ப்பத்திலும் விசாரணை செய்யப்படவில்லை. பாராளுமன்றத்துக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. 

இந்த பிணைமுறி விநியோகத்தால் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனம் சட்டவிரோதமாக 9.2 பில்லியன் ரூபா நிதியை சம்பாதித்துள்ளதாக ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்காரணமாக ஆணைக்கழுவின் பரிந்துரைப்படி செயற்பட்டு 9.2 பில்லியன் ருபா நிதியை மீளப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 

அந்த முழுமையான நிதியையும் அரசாங்கத்துக்கு மீளப் பெற முடியும். இதனால் அரசாங்கத்துக்கு எவ்வித நட்டமும் ஏற்படமாட்டாது. 

அதேபோன்று இந்த மோசடியில் எந்த அதிகாரிகள் தொடர்புபட்டிருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும். 

அதுமாத்திரமன்றி ஆணைக்குழுவின் அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள எமது கட்சியின் உறுப்பினர்கள் இருந்தால், அவர்கள் தொடர்பில் தேடிப் பார்த்து தீர்மானம் எடுப்பதற்கு திலக் மாரப்பன தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆணைக்கழுவின் பரிந்துரைப்படி நாம் நடவடிக்கை எடுப்போம். 

நாங்கள் தேடிப்பார்ப்பது கடந்த அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் சம்பந்தமாக மட்டுமல்ல. தற்போது குற்றம்சுமத்தப்படுகின்ற ஊழல் மோசடிகள் சம்பந்தமாகவும் தேடிப் பார்க்கின்றோம். விசாரணை நடத்துகின்றோம். சரியான நடவடிக்கையும் எடுப்போம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க வௌியிட்டுள்ள விஷேட அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.