Header Ads



ஊடகவியலாளர் ஹாஜியானி திம்ஸி பாஹிமின் மறைவு - ஊடகத் துறைக்கு பேரிழப்பு!

-ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடிய போரம் இரங்கல்-

சிரேஷ்ட முஸ்லிம் பெண் ஊடகவியலாளரான ஹாஜியானி திம்ஸி பாஹிமின் மறைவையிட்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த இரங்கலையும் கவலையையும் தெரிவிக்கிறது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடிய போரத்தின் முன்னோடி அமைப்பான முஸ்லிம் மீடியா அலைன்ஸின் ஸ்தாபக தலைவரும் “த எகனொமிக் டைம்ஸ்” சஞ்சிகையின் ஸ்தாபக ஆசிரியருமான மூத்த ஊடகவியலாளர் மர்ஹூம் ஏ.ஸீ.ஏ. கபூர் அவர்களின் மூத்த புதல்வியான ஹாஜியானி திம்ஸி பாஹிம் தனது தந்தையின் மறைவையடுத்து கடந்த நான்கு தசாப்தங்களாக அதன் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர்.

ஊடகவியல் துறையில் முஸ்லிம் பெண்கள் அரிதாகவே பணியாற்றி வரும் நிலையில், கடந்த நான்கு தசாப்தங்களாக அவர் ஆற்றி வந்த ஊடகப் பணி மகத்தானது. மார்க்க விழுமியங்கள், ஒழுக்கங்களைப் பேணிய நிலையில் அவர் தொய்வின்றி இறுதி வரை தனது ஊடகப் பணியைத் தொடர்ந்தமை சாதனை என்றே சொல்ல வேண்டும். இவரது கணவன் அல்ஹாஜ் பாஹிம் கரீம் அவர்களும் ஓர் ஊடகவியலாளராக இருந்து அவரது பணிக்கு ஒத்துழைப்பு நல்கி வந்தார்.

இலங்கையின் பொருளாதார செய்திகளை சர்வதேசமயப்படுத்தியதில் த எகனொமிக் டைம்ஸின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகங்களின் கவனத்தை ஈர்த்த ஒரு சஞ்சிகை என்பதும் கவனிக்கத்தக்கது. 

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம், அதன் வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் “த எகனொமிக் டைம்ஸ்” சஞ்சிகையின் ஊடகப் பணியையும் அதன் ஆசிரியரான ஹாஜியானி திம்ஸி பாஹிமையும் கௌரவித்து பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.

ஓர் ஊடகத் துறை ஆளுமை எம்மிடருந்து விடை பெற்று விட்டார். அவரது  இழப்பு வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிரிவுத் துயரினால் வாடும் அவரது கணவன் மற்றும் குடும்பத்தினருக்கு இறைவன் அழகிய பொறுமையை வழங்குவானாக. அவரது மண்ணறை வாழ்விலும் மறுமை வாழ்விலும் ஈடேற்றம் பெற்று உயர்ந்த சுவன பாக்கியத்தை வழங்குவானாக!

என்.எம். அமீன்
தலைவர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடிய போரம்
17.01.2018

No comments

Powered by Blogger.