Header Ads



தமிழ் கூட்டமைப்பினர் மீது, ரிஷாட்டுக்கு எழும் கேள்வி

-பாறுக் ஷிஹான்-

சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தேர்தல் திருத்தத்தை அரசு கொண்டு வந்தபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆதரவு வழங்கினர். இவ்வாறான சில நடவடிக்கைகள் தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் கூட்டமைப்பினர் உண்மைத் தன்மையுடன்தான் செயற்படுகின்றார்களா? என்ற கேள்வியை எழுப்புகிறது.

இவ்வாறு கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், தனது கட்சி சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் நிகழ்வுக்காக இன்று(3) யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார். 
இந்த நிகழ்வின் இறுதியில் பத்திரிகையாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  அவர் மேலும் தெரிவித்ததாவது:

அரசியல் தீர்வை கேட்டு நிற்கின்ற அல்லது அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவோம் என்று மக்களிடம் ஆணையைப் பெற்று கடந்த உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை ஆட்சியைக் கைப்பற்றியவர்கள் - அதேபோன்று கடந்தகால எல்லாத் தேர்தல்களிலும் மக்களிடம் ஆணையை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே பெற்றனர். 

அவர்கள் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை இறுதி வடிவம் காண முன்னர், வடக்கு - கிழக்கில் வாழுகின்ற முஸ்லிம் சமூகத்துக்கு உள்ள சந்தேகங்களைக் களையவேண்டும். முஸ்லிம் மக்களின் விருப்புக்களை அறிந்து இணக்கப்பாட்டுடன் செயற்படுகின்ற போது மாத்திரம்தான் அரசியல் தீர்வு வெற்றி பெறமுடியும். 
அரசிடம் தீர்வைக் கேட்டு நிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஆயுதம் ஏந்தாமல் பல அழிவுகளைச் சந்தித்திருக்கும் முஸ்லிம் இனத்தின் பிரதிநிதிகளுடனும் நியாயபூர்வமான விட்டுக்கொடுப்புகளுடன் பேசியிருக்கவேண்டும். இதுவரையில் அவ்வாறானதொரு பேச்சு முன்னெடுக்கப்படவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பை பேச்சுக்கு வருமாறு நாம் பகிரங்க அழைப்பை விடுத்திருந்த போதும் அது நடக்கவில்லை.

அண்மையில் மாகாண சபைத் தேர்தல் திருத்தம் நாடாளுமன்றுக்கு வந்தபோது, சிறுபாண்மை மக்களை அது பாதிக்கும் என நாம் கடுமையாக எதிர்த்தோம். எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சிறுபான்மையினரின் குரலைக் கேளாது, அதனை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தனர்.

கடந்த 70 ஆண்டுகளாக தீர்வைப் பெற்றுத் தருவோம் என்று கூறியே தமிழ் தலைவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் மக்களிடம் ஆணையைப் பெறுகின்றனர். இவ்வாறானவர்கள் மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம் மக்களைப் பாதிக்கும் தேர்தல் முறை மாற்றத்துக்கு எதிராக குரல் எழுப்பவில்லை.


இவ்வாறான சின்னச் சின்ன விடயங்களுக்கே உதவி செய்யாதவர்கள், தமிழ் மக்களின் நிரந்தரத் தீர்வைப் பெறும் விடயத்தில் எவ்வாறு உண்மைத் தன்மையுடன் செயற்படுவார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது - என்றார்

1 comment:

  1. தேர்தல் திருத்தத்தை எதிர்தவரு கேள்வி கேட்கிறாரு

    ReplyDelete

Powered by Blogger.