Header Ads



அலி அன்வர் காணாமல் போனமை, சடலங்களை கடலில் அழிக்க உதவிய அதிகாரி கைது

கொழும்பு நகரப் பகுதியில் 2008ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் கடற்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்கா கடற்படையில் சீவ் பெற்றி ஒவ்விசராகப் பணியாற்றிய, லுதுவகன்டிகே துசார மென்டிஸ் என்ற இந்த முன்னாள் புலனாய்வு அதிகாரி கடந்த 23ஆம் நாள் கைது செய்யப்பட்டு, மறுநாள் கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரி, சிறிலங்கா கடற்படையின் லெப்.கொமாண்டர் சுமித் ரணசிங்கவின் கீழ் இயங்கிய, சிறப்பு புலனாய்வு பிரிவில் பணியாற்றியிருந்தார்.

கட்டுநாயக்கவில் 2009ஆம் ஆண்டு அலி அன்வர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் இவர் தொடர்புபட்டுள்ளார்.

கடற்படையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல்களை வழங்கும் முகவராக, அலி அன்வர் செயற்பட்டிருந்தார். எனினும் பின்னர் அவரும் காணாமல் ஆக்கப்பட்டார்.

அத்துடன் கடத்தப்பட்டு கொழும்பு, சைத்திய வீதியில் உள்ள கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இளைஞர்களை, திருகோணமலை கடற்படைத்தளத்தில் உள்ள கன்சைட் முகாமுக்கு கொண்டு சென்ற கடற்படை சிறப்பு புலனாய்வுக் குழுவிலும் துசார மென்டிஸ் இடம்பெற்றிருந்தார்.

சடலங்களைக் கடலில் கொண்டு போய் அழிப்பதற்கு, கடற்படையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவுக்கு உதவுவதற்காக, வழங்கப்பட்டிருந்த படகுக்குப் பொறுப்பான அதிகாரியாக மென்டிஸ் பணியாற்றினார் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவர் பராக்கிரம கடற்படைத் தளத்தில் லெப்.கொமாண்டர் ரணசிங்கவின் கீழ், 2008-2009 காலப்பகுதியில் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.