Header Ads



"எமக்கு சிறப்பு, கவனிப்பு தேவை" - விக்னேஸ்வரன்

அரசாங்கம் போதிய நிதியை வழங்காததால், வடக்கு மாகாணசபையின் பெரும்பாலான அபிவிருத்தித் திட்டங்கள் முடங்கிப் போனதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“2016ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபை  12,000 மில்லியன் ரூபாவைக் கோரியிருந்தது. ஆனால், மத்திய அரசாங்கம், 2,500 மில்லியன் ரூபாவை மாத்திரமே, 2017ஆம் ஆண்டில் வழங்கியிருந்தது.

மத்திய அரசாங்கம் நிதியை வழங்கும் போது, எதற்காக  இந்த நிதியைச் செலவிட வேண்டும் என்றும் கூறுகிறது. இந்த நிதியை எதற்காக செலவிடுவது என்று தெரிவு செய்யும் உரிமையும் எமக்கு இல்லை.

வடக்கு மாகாணம் முழுவதற்கும் ஒரே ஒரு தீயணைப்புப் படைப்பிரிவு தான் உள்ளது. அண்மையில் கிளிநொச்சியில்  ஏற்பட்ட தீணை அணைக்க, ஒரு மணிநேரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் அங்கு சென்ற போது எல்லாம் எரிந்து சாம்பராகியிருந்தது.

நாங்கள் நிதியைக் கோருகின்ற போது, வடக்கு மாகாணசபைக்கு சிறப்பு கவனிப்பை வழங்க முடியாது என்று மத்திய அரசாங்கம் கூறுகிறது. ஆனால்,  எமது பிரதேசம் போரினால் பாதிக்கப்பட்டது. இது உண்மை. எமக்கு சிறப்பு கவனிப்பு தேவை. ஏனைய மாகாணங்களுடன் வடக்கை ஒப்பிட முடியாது.

வடக்கு மாகாணசபைக்கு கனடியத் தமிழர்கள் 50 ஆயிரம் டொலர்  நிதியை வழங்க முன்வந்தனர். ஆனால் முதலமைச்சர் நிதியம் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை.  அதனால் அந்த நிதியைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது.

முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிப்பதற்கான அனுமதியை வழங்காமல் மத்திய அரசும் மாகாண ஆளுனரும் இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றனர். ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.