January 09, 2018

"லசந்தவின் கொலையாளி ஜனாதிபதியாகவோ, பிரதமராகவே பதவி வகிக்கக்கூடும்"

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையாளி ஜனாதிபதியாகவோ, பிரதமராகவே எதிர்காலத்தில் பதவி வகிக்கக்கூடிய சாத்தியங்கள் உண்டு என லசந்தவின் சகோதரர் லால் விக்ரமதுங்க தெரிவித்துள்ளார்.

லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் ஒன்பது ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. லசந்தவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வில் லால் விக்ரமதுங்கவின் விசேட செய்தியொன்று, மகள் மினேல் விக்ரமதுங்கவினால் வாசிக்கப்பட்டது.

அந்த செய்தி பின்வருமாறு…

லசந்த விக்ரமதுங்க மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு ஒன்பது ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. ஒன்பது ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் நீதி நிலைநாட்டப்படவில்லை.

லசந்த மட்டும் கொலை செய்யப்படவில்லை, ஏனைய ஊடகவியலாளர்களும் அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டனர், இந்த அடக்குமுறைகளுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடித்து வருகின்றது.

உயர்ந்த ஆட்சி தொடர்பில் மக்களின் கரிசனை குறைவடைந்துள்ளது. தற்போதைய அரசாங்கம் விசாரணைகளை கையாள்கின்ற விதம் நம்பிக்கையீனத்தை உருவாக்கியுள்ளது.

கொலைக் குற்றச் செயல் தொடர்பிலான விசாரணைகளை அரசியல் அதிகாரம் வழிநடத்த வேண்டுமா என ஒருவர் கேள்வி எழுப்பக்கூடும்? இந்தக் கொலைகளுக்கு நீதி வழங்குவதாக பிரச்சாரம் செய்தே ஆட்சியாளர்கள் வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்கள் எனவே விசாரணைகளை நடத்த வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடு என மற்றுமொருவர் வாதிடக்கூடும்.

கடந்த கால ஆட்சியின் கொடூரத்தன்மையை விளக்குவதற்கு இந்தக் கொலைகள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. எனினும் குற்றவாளிகளுக்கு தண்டனை விதிப்பது தொடர்பிலான நிலைப்பாடு என்ன?

இவ்வாறான அநேகமான விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளன. குற்றவாளிகளை கைது செய்து கொலைக் குற்றச் செயலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

காலத்திற்கு இடமளித்து இதற்காக காத்திருப்பது நேர்எதிர் விளைவுகைளயே ஏற்படுத்தும் வரலாற்றில் இதற்கான சான்றுகள் உண்டு. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில், இந்த நாட்டின் அனைத்து மனித செயற்பாடுகளையும் கட்டுப்படுத்திய தரப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தியிருந்தனர்.

இவ்வாறான சூழ்நிலையில் சில ஊடகவியலாளர்கள் தங்களது உயிரைத் தியாகம் செய்து உண்மைகளை வெளிக்கொணர்ந்தனர்.

ஒருவருக்கான உதவியாக நீதி நிலைநாட்டப்பட வேண்டியதில்லை, மாறாக இனி வரும் காலங்களில் தவறுகள் இழைக்கப்படுவதனை தடுக்கவே நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

அரசியலுக்கு அப்பாலான கொலைக் குற்றச் செயல்கள் தொடர்பில் கிரமமான விசாரணை நடத்தி ஓரிரு ஆண்டுகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றனர்.

லசந்த விக்ரமதுங்க படுகொலையுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படாவிட்டால் அவர்கள் இந்த நாட்டின் பிரதமராகவோ அல்லது ஜனாதிபதியாகவோ மாறக்கூடிய சாத்தியமும் சந்தர்ப்பமும் காணப்படுகின்றது.

யாருக்குத் தெரியும், எதிர்காலத்தில் இவ்வாறு நடைபெறலாம். வேறு எவரும் தைரியத்துடன் போராடா காலத்தில் லசந்த விக்ரமதுங்க இலங்கையின் ஊடகப் பரிமாணத்தில் புரட்சிகரமான மாற்றங்களை சிருஸ்டித்தார்.

ஊழல் மோசடிகளுக்கு எதிராக மிகுந்த துணிவுடன் லசந்த போராடினார். லசந்த கொலையாளிகளுக்கு எதிராக அதிகாரிகளினால் நடவடிக்கை எடுக்க முடியாத போதிலும், மக்களுக்காக தன்னுயிரை தியாகம் செய்த லசந்தவின் பெயர் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துக் கொண்டுள்ளது.

லசந்தவின் துணிகரமான ஊடகப் பணியை வியந்து பாராட்டிய உலகின் பல அமைப்புக்கள் அவரது மறைவின் பின்னர் அவரை கௌரவித்திருந்தன. எனினும் இலங்கையில் அவ்வாறான கௌரவிப்புக்கள் வழங்கப்படவில்லை.

ஒவ்வொரு ஆண்டிலும் லசந்தவின் நினைவஞ்சலி நிகழ்வுகளில் பங்கேற்கும் அனைவருக்கும் எனது நன்றிகள். லசந்தவிற்காக நாம் பிரார்த்தனை செய்வோம் என லால் விக்ரமதுங்க தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

1 கருத்துரைகள்:

What is the reply from MY3 and Ranil ? for not taking action even after evidences are made on the table.

Post a Comment