Header Ads



“முழங்கால் இட்டு கெஞ்சிக்கொண்டு போவதுதான், உனது பாதையென்றால் நீ போ"

-க. அகரன்-

“தியாகத்தின் உச்சமான இந்த மண்ணில் இருந்து கேட்கின்றேன் நடக்கப்போகின்ற சதித்திட்டங்களுக்கு துணை போகாமல் உரிமையைப் பெற்றெடுப்பதற்கான பங்காளர்களாகவும் செயற்பாட்டாளர்களாகவும் முன்வாருங்கள்.  எங்களது மக்களை ஏமாற்றி அழிக்காதீர்கள்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வவுனியா பாவற்குளம் ஆறாம் வட்டாரத்தில் இடம்பெற்ற அக்காங்கிரஸின் செட்டிக்குளம் பிரதேச சபைக்கான பிரசார கூட்டத்தில் மிகவும் ஆவேசமாக உரையொன்றை ஆற்றியுள்ளார்.

அவர் தனது உரையில்,

“எமது விடுதலை போராட்டமானது பயங்கரவாதமாக சித்தரிக்கப்பட்ட போது இந்த போராட்டத்தை ஒரு விடுதலைப்போராட்டமாக வெளியுலக்குக்கு கொண்டுச் சென்றதோடு இப்போராட்டத்தை பயங்கரவாதமாக கொச்சைப்படுத்த எண்ணிய தரப்புக்கும் அது பெரும் சவாலாகவே இருந்தது.  

“ஆயுதப் போராட்டம் பலம் பொருந்தி வந்த காலத்தில் ஜனநாயக தலைமை என்னுடைய தந்தையின் கைகளுக்கு மாறிவிடும் என்ற பயத்தில் அவரை சுட்டுக்கொலை செய்தார்கள். ஆகவே எங்களுக்கு தியாகம் என்றால் என்ன என்று தெரியும்” என்றார்.

“இலட்சக்கணக்கான மக்கள் உயிரைக்கொடுத்தது ஒற்றையாட்சிக்கு ஆதரவளிப்பதற்காக அல்ல. அவ்வாறெனின் எப்பொழுதே இலட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியிருக்கலாம். உயிர்போனாலும் பரவாயில்லை சரணடையாது இப்போராட்டம், முள்ளிவாய்க்காலில் போய் முடிந்தமையானது எட்டு வருடங்கள் கழித்து நாங்கள் இந்த இலட்சியத்தை கைவிடுவதற்காக அல்ல” என்றார்.

“சம்பந்தனுக்கு முடியா விட்டால் விட்டு போ. வேறு யாரும் வருவார்கள். நாங்கள் வருவோம் எங்களுக்கென்று ஓர் அணுகுமுறை உள்ளது. நாங்கள் சர்வதேச அரசியலை படித்தவர்கள். எங்களது மக்களது உரிமைகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது தொடர்பாக ஒரு திட்டம் எங்களிடம் இருக்கின்றது” என்றார்.

“முழங்கால் இட்டு கெஞ்சிக்கொண்டு போவதுதான் உனது பாதையென்றால் நீ போ. இதை விட்டு போங்கள். எங்களது மக்களை ஏமாற்றி அழிக்காதீர்கள். தியாகத்தின் உச்சமான இந்த மண்ணில் இருந்து கேட்கின்றேன் நடக்கப்போகின்ற சதித்திட்டங்களுக்கு துணை போகாமல் உரிமையை பெற்றெடுப்பதற்கான பங்காளர்களாகவும் செயற்பாட்டாளர்களாகவும் முன்வாருங்கள்” என்றார். 

No comments

Powered by Blogger.