January 13, 2018

நபிகளார் நுகர்ந்த, மாஷித்தா என்ற அற்புத வாசனை


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ல்லம் அவர்கள் மிஹ்ராஜ் பயணத்தின் போது ஒரு இடத்தில், கஸ்தூரியை விட மிக்க வாசனையை கொண்ட அதிசயமான மணமொன்றினை நுகர்ந்தார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ல்லம் அவர்கள் வானவர் கோமான் ஜிப்ரயீல் அலைஹி வஸ்ல்லம் அவர்களிடம் அந்த அற்புதமான வாசனையைப் பற்றி கேட்டார்கள்.

அதற்கு ஜிப்ரயீல்  அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ''இந்த அற்புதமான வாசனை 'மாஷித்தா'வும் அவருடைய குடும்பத்தினர்களும் இருக்கக் கூடிய (கப்ர் அல்லது சுவர்க்க மாளிகை) இடத்திலிருந்து வருகின்ற வாசனை'' என்று கூறினார்கள்.

தொடர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ல்லம் அவர்கள் மாஷித்தாவின் வரலாறை விவரிக்கும் படி கேட்க, ஜிப்ரயீல்  அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

"மாஷித்தா"- பிர்அவ்னின் குடும்பத்துப் பெண்களுக்கு தலை வாரி விட்ட பெண்.

ஒரு நாள் அவர் பிர்அவ்னின் மகளுக்கு தலை வாரிக் கொண்டிருந்த போது தற்செயலாக சீப்பு கீழே விழுகிறது.

உடனே மாஷித்தா "பிஸ்மில்லாஹ்- அல்லாஹ்வின் திருநாமம் கொண்டு" என்று கூறினார்.

அப்போது அந்த பிள்ளை "நீ அல்லாஹ் என்று கூறியது என் தந்தை பிர்அவனைத் தானே?" என்று வினவினாள்.

அதற்கு மாஷித்தா "இல்லை! என்னையும், உன் தந்தையையும் படைத்து பரிபாலிக்கும் அந்த இறைவன் அல்லாஹ்வை" என்று கூறினார்.

(மாஷித்தா; வணக்கத்திற்குரிய நாயனாக அல்லாஹ்வையும், இறைத்தூதராக நபி மூஸா அலைஹி வஸ்ல்லம் அவர்களையும் ஈமான் கொண்டு அதை மனதில் மறைத்து வைத்திருந்த பெண்ணாவார்.)

உடனே அந்த பிள்ளை போய் தன் தந்தை பிர்அவ்னிடம் குற்றஞ் சொல்ல அவன் மாஷித்தாவை சபைக்கு அழைத்து முழு விடயத்தையும் வினவினான்.

பிர்அவ்ன் கேட்டான் "என்னைத் தவிர உனக்கு வேறு யாரும் கடவுள் உண்டோ?" என்று!

அதற்கு மாஷித்தா "ஆம்! நிச்சயமாக என்னையும் உன்னையும் படைத்து பரிபாலிக்கும் அந்த அல்லாஹ்தான் என் இறைவன்" என்றார் உறுதியோடு.

கோபங் கொண்ட பிர்அவன் நெருப்பை மூட்டி செம்பால் ஆன பெரும் பாத்திரத்தில் எண்ணையைக் கொதிக்க வைத்து மாஷித்தாவுடைய கணவனிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு பிள்ளைகளாக நெருப்பில் எரிந்து கொண்டிருந்த எண்ணெய் பாத்திரத்தில் எறிந்தான். ஆனால் மாஷித்தா மனந்தளறவுமில்லை, அவருடைய ஈமானில் சற்றேனும் உறுதி குறையவுமில்லை.

கடைசியாக பிர்அவன் மாஷித்தாவையும் அவருடைய மார்பில் பால் குடித்ததுக் கொண்டிருந்த கைக் குழந்தையையும் தூக்கி எறியும் படி கூறினான்.

அப்போது மாஷித்தா "எனது கடைசி ஆசை ஒன்று இருக்கிறது" என்று கூறினார்.

பிர்அவ்ன் "என்ன, சொல்?" என்று கேட்டான்.

மாஷித்தா "என்னையும் என் கைக்குழந்தையையும் எண்ணையில் தூக்கி எறிந்த பின் கடைசியாக எமது எலும்புகள் எதுவெல்லாம் மிச்சமாகுமோ அவற்றையெல்லாம் ஒன்றாக ஒரு புடவையினுள் சுற்றி ஒரே கப்றில் அடக்கஞ் செய்யவேண்டும்" என்று.

கொடிய பிர்அவன் மாஷித்தாவுடைய வேண்டுகோளிற்கு இணக்கம் தெரிவித்தான்.

அப்போது மாஷித்தா தன் மார்பில் பால் குடித்ததுக் கொண்டிருந்த கைக் குழந்தையை பார்த்து "ஒரு பாவமும் அறியாத இந்த பிஞ்சும் சேர்ந்து எண்ணையில் கருகப் போகிறதே" என்று தயங்கினார்.

அப்போது வல்ல அல்லாஹ் அந்த குழந்தைக்கு பேசும் சக்தியை கொடுத்தான். அது "கவலைப்படாதே தாயே! நீ சத்தியத்தில் இருக்கிறாய், பொறுமைக் கொண்டு முன்னேறிச் செல், மறுமையுடைய வேதனைகளும் தண்டனைகளும் இதை விடக் கொடியது" என்று ஆறுதல் கூறியது. கடைசியில் மாஷித்தாவும் அவரது கைக் குழந்தையுடன் எண்ணைப் பாத்திரத்தில் எறியப்பட்டார்கள்.

வல்லவன் அல்லாஹ் மாஷித்தாவையும் அவருடைய குடும்பத்தையும் பொருந்திக் கொணடு வாக்களித்த உயர்ந்த சுவர்க்கத்தை அளித்துவிட்டான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் "ரலியல்லாஹு அன்ஹு" அவர்கள்

ஹதிஸ் எண்: 309, 12280, 2903, 496.

நூல்கள்: முஸ்னத் அஹ்மத், தபறானி, இப்னு ஹிப்பான், ஹாகிம்.

4 கருத்துரைகள்:

இந்த ஹதீஸை வாசிக்கும் போதே கையிலுள்ள முடிகள் நிலை நிட்கின்றன யா அல்லாஹ் அவர்களின் மரணத்தையும் உலகத்தில் உள்ள எல்லா முஸ்லிம்களினதும் பிழைகளையும் பொருந்திக்கொள்வாயாக.

இந்த ஹதீஸை வாசிக்கும் போதே மேய் சிலிர்க்கின்றன யா அல்லாஹ் அவர்களின் மரணத்தையும் உலகத்தில் உள்ள எல்லா முஸ்லிம்களினதும் பிழைகளையும் பொருந்திக்கொள்வாயாக.

மாஷா அல்லாஹ், Jaffna Muslim இப்படியான நல்ல ஹதீஸ்களை பிரசுரிப்பதுக்கு ஜசாக்கல்லாஹ்.

No words to compare with anyone by her belief. Oh Allah forgive all our sins and show the way to paradise.

Post a Comment