January 15, 2018

முஸ்லிம்களைத் திடுக்கிடச்செய்யும் 2 உண்மைகள்


– ரவூப் ஸய்ன்–

2018 ஐ ஒரு தேர்தலுடன் எதிர்கொண்டுள்ளோம். உள்ளூராட்சித் தேர்தலை நாடு எதிர்நோக்கியுள்ள இத்தருணத்தில் மக்களின் மனோநிலையிலும் செயற்பாடுகளிலும் புரட்சிகரமான மாற்றம் அவசியமாகியுள்ளது.

வழமை போன்று தேர்தல் காலங்களில் பிரச்சார மேடைகளில் முன்வைக்கப்படும் எதிரும் புதிருமான விவாதங்கள், வெற்று வாக்குறுதிகள் மக்களுக்கு புளித்துப் போய்விட்டன. எதை மறக்க வேண்டும் என்று அறிந்து வைப்பதே அரசியல்வாதியின் ஞாபகம் என்பார்கள். அது போல் இறந்த கால வாக்குறுதிகள் காற்றில் கரைந்த நிலையில் மீண்டும் தேர்தல் களத்திற்கு வந்துள்ளார்கள். பிரச்சாரம் சூடு பறக்கத் தொடங்கியுள்ள உள்ளூராட்சித் தேர்தல், சுமாராக ஒரு பாராளுமன்றத் தேர்தலின் முக்கியத்துவத்தைப் பெற்று வருகின்றது.

தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் மஹிந்தவை பிரதமராக்கும் பயணத்தை ஆரம்பிக்கிறோம் என்று முன்னாள் பொருளியல் டியூஷன் மாஸ்டர் பந்துல குணவர்தனவும், முன்னாள் மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் கூறியிருப்பது 2018 இன் முதல் அரசியல் நகைச்சுவையாகக் கொள்ளப்படலாம்.

“50 ஆண்டுகளாக சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராக இருக்கும் என்னை முடியுமானால் கட்சியிலிருந்து நீக்கட்டும் பார்க்கலாம்” என மஹிந்த சவால் விடுத்துள்ளார். மஹிந்த அணியினர் தனித்துப் போட்டியிட்டால் தராதரம் பார்க்காமல் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பேன் என்ற மைத்ரியின் கூற்றுக்கு மஹிந்த இப்படி எதிர்வினையாற்றுகிறார்.

தேர்தல் என்று வந்துவிட்டால் பிரச்சார மேடைகள் வதந்திகளாலும் பரஸ்பர குற்றச்சாட்டுக்களாலும் போலியான வாக்குறுதிகளாலும் நிரம்பி வழிவதுண்டு. எதிர்த் தரப்பினரை ஊழல் மோசடிக்காரர்கள் எனவும் அபிவிருத்தியில் ஒரு துளியையும் செய்யாதவர்கள் என்றும் ஒவ்வொருவரும் அடுத்தவரை குறை கூறுவது வழக்கம். ஆனாலும், உணர்ச்சிக் கொந்தளிப்பின்போது வேட்பாளர்களில் சிலர் சில உண்மைகளைக் கசிய விடுவதும் உண்டு.

வவுனியா நகர சபை மண்டபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டணியின் உள்ளூராட்சி வேட்பாளர்களுக்கு மத்தியில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழ்க் காங்கிரஸை நோக்கிக் கூறிய உணர்ச்சிகரமான வார்த்தைகள் தேர்தல் தருணத்தில் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியவை.

“112 பக்கங்களைக் கொண்ட இடைக்கால அறிக்கையில் 110 பக்கங்களை விட்டு விடுங்கள். முதல் இரண்டு பக்கங்களைப் பாருங்கள். சமஷ்டி, ஒற்றையாட்சி என்பன என்னவென்று வர்ணித்து உடனடியாக ஒரு கூற்று முன்வைக்கப்படுகின்றது. ஒற்றையாட்சி இலங்கைக்கு உகந்ததல்ல எனக் கூறப்படுகின்றது. இது மூன்று மொழிகளிலும் இருக்கின்றது. இது எமது பின்னிணைப்பில் இல்லை. அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து எழுதிய இடைக்கால அறிக்கையில் ஒற்றையாட்சி நாட்டுக்குப் பொருத்தமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது” என்கிறார் சுமந்திரன்.

தமிழ்க் காங்கிரஸ் தலைவர் கஜேந்திர குமாருக்கு சுமந்திரன் ஆற்றும் இந்த எதிர்வினையில் முஸ்லிம்களைத் திடுக்கிடச் செய்யும் இரண்டு உண்மைகள் உள்ளன. இடைக்கால அறிக்கை சமஷ்டியை ஆதரிக்கின்றது என்பது மிகத் தெட்டத் தெளிவான உண்மை. இரண்டாவது, அனைத்துக் கட்சிகளும் சேர்ந்தே இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளன என்பது இன்னொரு ஆபத்தான விடயம்.

தற்போது யானைச் சின்னத்தில் இணைந்து கேட்கும் முஸ்லிம் காங்கிரஸ் தானைத் தளபதிகளும் சேர்ந்துதான் இந்த அறிக்கையை எழுதியுள்ளனர். அதாவது அவர்களின் சம்மதமும் இங்கு பெறப்பட்டுள்ளது. ஒற்றையாட்சியை முடித்து சமஷ்டியை தமிழர்களிடம் கையளிப்பதற்கு ஒப்புதல் வாக்குமுலம் வழங்கியுள்ளது முஸ்லிம் காங்கிரஸ். அதன் மூலம் வடக்கு கிழக்கு முஸ்லிம் சமூகத்தை நடுத்தெருவில் நிறுத்தப் போகின்றது. இந்த இலட்சணத்தில்தான் அது இன்று உள்ளூராட்சித் தேர்தலில் வாக்குப் பிச்சைக்காக கதவைத் தட்டுகின்றது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் தேர்தல் என்பது ஒரு தெருக்கூத்து. துரோகத்தின் தருணம். சந்தர்ப்பவாத கூட்டுகளின் சதிகாரத் திருவிழா. எதிரிகளை நண்பர்களாகவும் நண்பர்களை எதிரிகளாகவும் தற்காலிகமாக மாற்றிக் கொள்ளும் நாடகம். இந்த அரசியல் சூதாட்டத்திற்கு இறுதியில் பலியாக்கப்படுபவர்கள் அப்பாவி மக்கள்தான்.

முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமன்றி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துப் பாரம்பரிய முஸ்லிம் கட்சிகளும் வெறும் கொள்கையற்ற கூடாரங்களாகவே இருந்து வருகின்றன. எந்த முற்போக்கான கொள்கையும் செயல்திட்டமும் அவர்களிடம் இல்லை. சமூகத்தைப் பலியாக்கி, அதிகாரக் கதிரையை பத்திரமாய் பாதுகாப்பதே அவற்றின் ஒரே அக்கறை. பெரும்பாலும் அவை அறிக்கை வீரர்களையும் வாய் வீரர்களையுமே உருவாக்கியுள்ளன. சுயநலமே அவர்களின் மூலதனமாகியுள்ளது.

அன்று கட்சியுடன் ஒட்டிக் கொண்டு தேசியப் பட்டியல் மூலம் அமைச்சர் பதவியை அனுபவித்து வந்த பஷீர் சேகுதாவூத் இன்று மறைந்த தலைவரின் விமான விபத்து குறித்து அறிக்கை கோருகிறார். அன்று முஸ்லிம் காங்கிரஸின் செயலாளராக இருந்த ஹஸன் அலி இன்று முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பை உருவாக்கிக் கொண்டு, ஹக்கீம் தலைமைக்குப் பொருத்தமற்றவர் என்கிறார். வேதாந்தி என்று அறியப்படும் சேகு இஸ்ஸதீன் எந்த முஸ்லிம் கட்சியிடமும் கொள்கை இல்லை என்று குறை கூறுகிறார். இவர்கள் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். மிகப் பெரும் சந்தர்ப்பவாதிகள். ஆளுக்கொரு கட்சி, வேளைக்கொரு கொள்கை என்று ‘இழிச்சவாய் அரசியல்’ செய்தவர்கள். அறம் சார் நிலைப்பாடுகளோ விழுமியம் சார் கோரிக்கைகளோ இல்லாத அரசியல் வியாபாரிகளையே பாரம்பரிய முஸ்லிம் கட்சிகள் உற்பத்தி செய்தன. இன்று அவர்கள் ‘அதிரடி அபிவிருத்தி’யைக் காட்டி (100 மீற்றர் வீதி செப்பனிடல், பாடசாலைக்கு மலசல கூடம் கட்டுதல், மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பி வழங்குதல்) மக்களின் வாக்குகளுக்காக நாக்கை வெளியே நீட்டிக் கொண்டு அலைந்து திரிகின்றனர்.

வழமைபோன்று தேர்தல் காலங்களில் அபிவிருந்தி அரசியல் எனும் பூச்சாண்டியைக் காட்டி வாக்குகளைக் கொள்ளையடிக்கும் கட்சி ஐ.தே.க. என்பது யாரும் அறிந்ததே. நுவரெலியா தேர்தல் மேடையொன்றில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “அபிவிருத்தியை அதிகப்படுத்துவதானால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளியுங்கள்” என்று கூறியுள்ளார்.

சந்திரிக்கா பதவி ஏற்கும்வரை 17 ஆண்டு காலம் தொடர்ச்சியாக அதிகாரத்திலிருந்த ஐ.தே.க. அபிவிருத்திக்கு பெயர் பெற்ற கட்சியல்ல. மாறாக, ‘பட்டலந்த’ வதை முகாமுக்கு பெயர் போனது கட்சி. குறைந்தபட்சம் இலங்கையின் நான்கு நெடுஞ்சாலைகள் கூட அவர்களது ஆட்சியில் செப்பனிடப்படவில்லை. வெளிநாடுகளில் கடன்பட்டு உள்ளூரில் பாதை போடுவதை அபிவிருத்தி என்று அவர்கள் அர்த்தப்படுத்துகிறார்கள்.

முதலீட்டு சூதாட்டக்காரர்களுக்கு நாட்டின் வளங்களைத் தாரைவார்த்து விட்டு உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிப்பது அபிவிருத்தியாகுமா? நாட்டின் அருஞ் சொத்துக்களை 100 ஆண்டுகளுக்குக் குத்தகைக்குக் கொடுத்து விட்டு, வெளிநாட்டுக் காசோலைகளால் நாட்டைக் கட்டியெழுப்பலாம் என்பது அவர்களின் நம்பிக்கை. வெறும் முழக்கங்களால் மக்களை பகடைக்காய்களாய் பலிகொள்கின்றனர்.

இரு பெரும் கட்சிகளுள் ஒன்றான சிறி லங்கா சுதந்திரக் கட்சியோ மக்கள் ஐக்கிய முன்னணியோ கூட யோக்கியதையான அரசியல் கலாசாரமொன்றை இந்நாட்டுக்கு அறிமுகம் செய்யவில்லை. சமீபத்தில் பிரச்சார மேடையொன்றில் பேசிய ஜனாதிபதி மைத்ரி, எனது வாளுக்கு மிக விரைவில் பலர் இரையாகுவர். அவர்கள் எனது குடும்பத்தவராக இருந்தாலும் சரியே என்று கர்ச்சித்துள்ளார். இந்த வாய் வீரம் அவருக்கு ஒன்றும் புதிதல்ல. ஊழல் மோசடிக்காரர்களை தண்டிக்கப் போகிறேன் என்பதுதான் இதன் அர்த்தம்.

2009 இற்குப் பின்னர் நிகழ்ந்த ஒவ்வொரு தேர்தலிலும் ‘புலிகளை நான் வெற்றி கொண்டேன்’ என்று கூறிக் கூறியே மஹிந்த சிங்கள வாக்குகளை தக்கவைத்துக் கொண்டார். மைத்ரி 2014 டிசம்பர் முதல் வாக்கு வங்கிகளைக் கொள்ளையடிப்பதற்குப் பயன்படுத்தி வரும் ஒரு மந்திரமே ‘ஊழல் மோசடிக்காரர்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன்’ என்பது.

மஹிந்தவின் கூட்டு எதிரணி தேர்தலில் தனித்துக் கேட்பதைத் தடுப்பதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்து இறுதியில் மூக்குடைந்து போன மைத்ரி, யாராக இருந்தாலும் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வேன் என்று கூறிவந்தார். திடீரென்று வாள் வீச்சு வீரர் போன்று அவர் களத்திற்குக் குதித்துள்ளமை மைத்ரியும் விழுமிய அரசியலுக்கு அப்பால்தான் சுற்றிச் சுழல்கிறார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.


இதே வெற்றுக் கோஷங்களை இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் நாம் அவரது வாயிலிருந்து செவிமடுத்தோம். எல்லை மீறிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பேன் என்று கூறி இரண்டரை ஆண்டுகளாக அவர்களைக் காப்பாற்றி வந்தவரும் அவரே. இன்று வாள் வெட்டுக் குறித்துப் பேசுகிறார். கோத்தாவை கைதுசெய்ய வேண்டாம் என்று நேரடியாகத் தலையிட்டுத் தடுத்தவரும் அவரே. ஊழல் மோசடிக்காரர்கள் எவரையும் அவர் தண்டிக்கவில்லை.

புறம்பாக, சில் துணிகளை விநியோகிப்பதற்கு காரணமாயிருந்தார் என்று மஹிந்தவின் செயலாளர் லலித் வீரதுங்க கைதுசெய்யப்பட்டார். தற்போது மைத்ரி தன்னை ஒரு விழுமியம் சார் அரசியல்வாதி என்று காட்டிக் கொள்வதற்குக் கையில் எடுத்துள்ள ஒரே ஆயுதம் மத்திய வங்கி பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையாகும்.

மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை உடனடியாக வெளியிடுமாறும், சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்குமாறும் கூட்டு எதிரணியினரும் அரசாங்கத்தில் அங்கத்துவம் பெறும் சுதந்திரக் கட்சி அமைச்சர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

பெப்ரவரி 10 இல் உள்ளூராட்சித் தேர்தல் திகதி குறிக்கப்பட்டமையால் இக்காலத்தில் இவ்அறிக்கையை வெளியிடுவது ஐ.தே.க.வுக்கு பாதகமானது என்று அதன் மூத்த உறுப்பினர்கள் வலுவாக உணர்கின்றனர். ஜனாதிபதி ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டோரை சட்டத்தின் மூன் கொண்டு வருவேன் என்று 2014 டிசம்பரில் கர்ச்சித்தது ஆட்சிக்குப் பின்னர் நியமிக்கப்பட்ட அர்ஜுன் மஹேந்திரனையோ அவரோடு சம்பந்தப்பட்ட ஐ.தே.க. அமைச்சர்களையோ குறித்து நிற்கவில்ல. அவர் கருதியது முன்னாள் ஊழல் மோசடி மிக்க ஆட்சியாளர்களையே. குறிப்பாக, மஹிந்தவின் குடும்பத்தினரையே.

இன்று மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குற்றச்சாட்டுடன் சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்கப் போவதாக அவர் கூறி வருவது அவரது கட்சிச் சார்பையும் ஒரு பக்க சாய்வையுமே எடுத்துக் காட்டுகின்றது. கூட்டு எதிரணியினரோ இத்தேர்தல் தருணத்தில் பிணைமுறி அறிக்கையை முன்னிட்டு குதூகலிக்கின்றனர். ஏதோ தமது கரங்கள் சுத்தமானவை என்று அவர்களுக்கு ஒரு நினைப்பு.

ஒப்படைக்கப்பட்டுள்ள அறிக்கையில் உள்ள விடயங்கள் பொது மக்களின் பார்வைக்கு மங்கலாகவே உள்ளது. இதுவரை கசிந்துள்ள தகவல்களின் படி ஐ.தே.க. வைச் சேர்ந்த 9 முக்கிய அரசியல்வாதிகள் இந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். இதனால் அறிக்கையை தாமதப்படுத்தி வெளியிடுமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியில் ஏற்கனவே ஐ.தே.க. ஈடுபட்டுள்ளது.

நாட்டு நலன்களை விட தனது கட்சியே முதன்மையானது என்றும் முக்கியமானது என்றும் கருதி வரும் ஜனாதிபதி, சுஜீவி சேனசிங்க கேட்பது போன்று, தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப முன்னாள் ஆட்சியாளர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்குத் தயங்குவது ஏன்?

இலங்கை அரசியலில் பிரதேசம், கட்சி, இனம் என்பவற்றைக் கடந்து தேச நலனை முதன்மைப்படுத்தி விழுமிய அரசியல் செய்தவர்களை விரல் விட்டும் எண்ண முடியாது. இதுதான் எமது நாட்டின் அபிவிருத்திக்குக் குறுக்காகவுள்ள பெரும் சவாலாகும். அரசியலில் நம்பிக்கை, நாணயம், மக்கள் நலன், ஊழல் மோசடிகளற்ற வெளிப்படைத் தன்மை போன்ற விழுமியங்களைப் பின்பற்றும் அரசியல்வாதிகள் நமது நாட்டில் மொத்தமாகவே இல்லை என்று கூறலாம்.

அரசியலை பணம் பண்ணும் நிறுவனமாகவும் வியாபாரமாகவும் கருதும் எவரும் விழுமிய அரசியல்வாதியாக இருக்க முடியாது. இலங்கைக்கு இன்று தேவை விழுமிய அரசியல் கலாசாரமாகும். தேசிய அரசியலை விழுமியமயமாக்குவதற்கான ஒரு ஆரம்ப அடித்தளம் நமக்குக் கிடைத்துள்ளது. அதுதான் உள்ளூராட்சித் தேர்தல். மக்களின் குரலாக, மக்களின் தேவைக்காக, மக்களின் மனச்சாட்சியாக இயங்கும் அங்கத்தவர்களையே மக்கள் தமது பிரதிநிதியாகத் தெரிவுசெய்ய வேண்டும்.

பாரம்பரியமாக யானைக்கும் கைக்கும் புள்ளடிபோடும் நாம், இதற்கு மேலும் அவர்களுக்குப் புள்ளடி போட வேண்டுமா என்று சற்று நிதானித்துப் பார்க்க வேண்டும். அரசியல் களம் மாற்றத்தை வேண்டி நிற்கின்றது. இன்றைய உடனடித் தேவை ஒரு மாற்று அரசியல் கலாசாரம். அங்கு அரசியல்வாதிகள் மக்களின் எஜமானர்களாக அன்றி பணியாளர்களாக இருக்க வேண்டும்.

அபிவிருத்திக்கு ஒதுக்கப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் மக்களுக்கு வகை கூறக் கூடியவர்களாக அரசியல்வாதிகள் இருக்க வேண்டும். நம்மிடம் வாக்குக் கேட்டு வரும் கட்சிகளையும் நபர்களையும் நாம் பரிசீலித்துப் பார்ப்போம். வாக்களித்தல் என்பது உண்மைக்கு சான்று பகரும் ஒரு செயற்பாடு. திருடர்களுக்கும் கொள்ளையர்களுக்கும் நாம் நமது தனிப்பட்ட நலன்களுக்காக வாக்களிப்போமானால் அது அற ரீதியான கண்ணோட்டத்தில் பெரிய பாவமாகும். இன்னொரு புறம் சமூகத்திற்குச் செய்யும் ஒரு துரோக்கமாகும். யார் சரியானவர்கள் என்பதை மட்டுமன்றி, யார் நேர்மையானவர்கள் என்பதையும் நாம் இனங்காண வேண்டும். அவர்கள்தான் நமது உண்மையான பிரதிநிதிகளாய் இருக்க வெண்டும். வெற்று அரசியல் கோஷங்களுக்கு இடையில் நிதானித்துப் பார்க்க வேண்டிய ஒரே விடயம் இதுதான்.

0 கருத்துரைகள்:

Post a Comment