Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு உதவுவதாக நோர்வே, மலேசியா உறுதியளிப்பு - JMC - I சந்திப்பில் இணக்கம்


(ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்)

இலங்கை முஸ்லிம்கள் ஆயுதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல என சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் பாதிப்புகள் குறித்து விபரங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவவை வந்தடைவதில்லை எனவும் கவலை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கான ஆசிய பசுபிக் பிரிவின்  பிரதிப் பணிப்பாளர் தோமஸ் குனகேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை, 1 ஆம் திகதி, ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற, சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இச்சந்திப்பின் போது, அவர்  மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கையில் பாதிக்கப்பட்ட தரப்பினரில் ஒரு பகுதியினரான முஸ்லிம்களை சந்திப்பதில் நாம் மகிழ்வடைகிறோம். இலங்கை முஸ்லிம்கள் கவனத்தை நாம் தற்போது படிப்படியாக குவித்து வருகிறோம். எதிர்வரும் மார்சில் ஜெனீவாவில் இலங்கை முஸ்லிம்கள் குறித்து முக்கிய அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டு, அதுபற்றிய விவாதம் நடைபெறவுள்ளது. இதில் முஸ்லிம் விவகாரத்தையும் உள்ளீர்த்து அதுபற்றி ஆராய்வோம்.

இலங்கையில் 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதாக அறிகிறோம். இலங்கை முஸ்லிம்களிடம் போதிய வாக்குப் பலம் இருந்தும், அவர்கள் தமது வாக்குப் பலத்தை உரியவகையில் பயன்படுத்துவதில்லை என உணர்கிறோம்.

இலங்கை முஸ்லிம்கள் ஆயுத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல என்பதை நாம் அறிவோம். எனினும் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் பாதிப்புகள் குறித்து விபரங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவை வந்தடைவதில்லை. இந்நிலை மாற்றப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இச்சந்திப்பில் கலந்துகொண்ட சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் பிரதிநிதிகள் பொதுபல சேனாவுக்கு மியன்மாரின் பௌத்த தீவிரவாத அமைப்பான 996 அமைப்புடன் ஏற்பட்டுள்ள நெருங்கிய உறவை சுட்டிக்காட்டியுள்ளதுடன், இலங்கை முஸ்லிம்கள் விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு போதிய கவனம் செலுத்தவில்லை என்றால், மியன்மாரை ஒத்த நிலை, இலங்கை முஸ்லிம்களுக்கும் ஏற்படலாமென சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பூட்டும் பேச்சுகள் மற்றும் பிரச்சாரங்களில் சிங்களவர்கள் மாத்திரமின்றி, தமிழர்களும் ஈடுபடுவதாகவும் எனினும் பொலிஸார் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வதில்லை எனவும், சட்டத்தை சரிசர பயன்படுத்தாது பொலிஸார் பாரபட்சம் காண்பிப்பதாகவும் இதன்போது  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கான ஆசிய பசுபிக் பிரிவின்  பிரதிப் பணிப்பாளர் தோமஸ் குனகே உரியவகையில் குறிப்பெடுத்துக் கொண்டுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் சிறுபான்மை விவகார, சிறப்பு அறிக்கையாளர்

யாழ்ப்பாண சர்வதேச முஸ்லிம் அமைப்பின் பிரதிநிதிகள் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சிறுபான்மை விவகார சிறப்பு அறிக்கையாளராக தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள டொக்டர் பெர்னான்ட் டீ. வேனஸினையும் சந்தித்தனர். இதன்போது அவர் தெரிவித்த விடயங்களாவன,

இலங்கையில் அரசியலமைப்பு மாற்றம் பற்றிய விவகாரம் பேசப்படுகிறது. இதில் முஸ்லிம்களுக்கு பாரபட்சம் நிகழும் என்று நீங்கள் நம்புவீர்களாயின் இதுபற்றிய உரிய ஆதாரங்களிளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிடடம் சமர்ப்பியுங்கள். 

மேலும் முஸ்லிம்களின் காணிகளை பெரும்பான்மை சிங்கள சமூகமோ அல்லது வடக்கிழக்கில் பெரும்பான்மையாக விளங்கும் தமிழர்களோ ஆக்கிரமித்திருந்தால் அதுபற்றியும் இலங்கை முஸ்லிம்கள் முறையிடலாம். இதுபற்றி கவனம் செலுத்த ஐ.நா. மனித உரிமைகள் சிறுபான்மை விவகார சிறப்பு அறிக்கையாளர் அலுவலகம் தயாராக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

நோர்வே, மலேசியத் தூதுவர்களுடன் சந்திப்பு

ஜெனீவாவுக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ், ஜெனீவாவுக்கான மலேசியத் தூதுவர் செய்யது எட்வான் ஆகியோரையும் ஜெனீவாவில் வைத்து யாழ்ப்பாண முஸ்லிம் சமூக சர்வதேசப் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.

இதன்போது யாழப்பாண முஸ்லிம்களின் வரலாறு, புலிகளினால் அந்த முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டமை., தற்போது அவர்கள் எதிர்கொண்டுள்ள அவலமான வாழ்வு, மீள்குடியேற்றத்தில் பாரபட்சம், மத்திய அரசினதும், மாகாண அரசாங்கத்தினதும் புறக்கணிப்பு, யாழ்ப்பாண முஸ்லிம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திகள், அதற்கு குறித்த இரு நாடுகளும் உதவ வேண்டுமெனவும் இதன்போது யாழ்ப்பாண முஸ்லிம்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது தம்மால் முடிந்த உதவிகளை யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு செய்வதாக நோர்வே மற்றும் மலேசியத் தூதுவர்கள் உறுதியளித்துள்ளனர்.

அறிக்கைகள் கையளிப்பு

அதேநேரம் மேற்குறிப்பிட்ட இந்த பிரமுகர்களுடனான சந்திப்பின் போது, இலங்கையில் சட்டத்தை பாரபட்சிமின்றி அமுல்படுத்துதல், ஐக்கிய நாடுகள் அமைப்பின் மேற்பார்வையில் யாழ்ப்பாண மற்றும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய ஆவணமும் இதன்போது கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. www.jaffnamuslim.com





1 comment:

  1. Jaffnamuslim may indicate the names of the officials participated as International Jaffna muslim's representatives.

    ReplyDelete

Powered by Blogger.