Header Ads



யேமன் மீது, சவூதி அரேபியா குண்டு மழை


யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள தலைநகர் சனா மீது சவூதி தலைமையிலான கூட்டுப் படை விமானங்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை குண்டு மழை பொழிந்தன.

சனா நகரில் சலே ஆதரவுப் படையினருடன் ஒரு வாரமாக நடைபெற்று வந்த சண்டையில் வெகு வேகமாக முன்னேறிய ஹூதி படையினர், அந்த நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, ஹூதி கிளர்ச்சியாளர்களிடமிருந்து சனா நகரை மீட்குமாறு தனது படையினருக்கு சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அதிபர் அப்துர்ரபோ மன்சூர் ஹாதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் கடுமையான சண்டையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 234-ஆக உயர்ந்ததாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், மோதலில் 400 பேர் காயமடை ந்ததாக அந்த அமைப்பு செவ்வாய்க்கிழமை கூறியது.

கடந்த 2014-இல் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் யேமனில் கணிசமான பகுதியைக் கைப்பற்றியதுடன் தலைநகர் சனாவையும் கைப்பற்றினர். கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதங்கள் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மீண்டும் ஆட்சியைப் பிடிக்கத் திட்டமிட்ட முன்னாள் அதிபர் சலே, ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். 

யேமன் ராணுவத்திலிருந்து வெளியேறிய வீரர்கள் சலே தலைமையை ஏற்றனர். இதைத் தொடர்ந்து வெடித்த உள்நாட்டுச் சண்டையில் லட்சக்கணக்கானோர் தங்கள் இருப்பிடங்களை இழந்தனர். 

தற்போது சலே -ஹூதி கிளர்ச்சியாளர்கள் கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் தீவிர சண்டை நடந்து வரும் நிலையில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நிகழ்த்திய தாக்குதலில் அப்துல்லா சலே உயிரிழந்ததாக திங்கள்கிழமை தகவல்கள் வெளியாகின.

No comments

Powered by Blogger.