Header Ads



"தமிழ் கூட்டமைப்பு முதலமைச்சர் பதவியை, முஸ்லிம் காங்கிரசுக்கு தாரைவார்த்துக் கொடுத்தது"

07 உறுப்பினர்களைக்கொண்ட முஸ்லிம் காங்கிரசுக்கு கிழக்கு மாகாணசபையில் 11 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் பதவியை தாரைவார்த்துக் கொடுத்தது என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பி.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில், எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் எட்டு உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பு மனுவில் கையெழுத்திடும் நடவடிக்கை நேற்று மாலை மேற்கொள்ளப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து தமது கட்சி உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக, அரசியல்வாதிகளும், ஊடகங்களும் கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.

மேலும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி இம்முறை தனித்து படகுச் சின்னத்திலேயே மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 208 வேட்பாளர்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் படகு சின்னத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தனித்துவமாக போட்டியிடுகின்றது.

இம்முறை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் வேட்பாளர் தெரிவின்போது மக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றி வருகின்றனர்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பின்னால் தமிழ் மக்கள் அணி திரள்வதை பொறுக்கமுடியாத சில ஊடகங்களும் அரசியல் தலைமைகளும் எமது கட்சியின் நற்பெயருக்கு களங்கத்தினை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தனித்துவமாக படகு சின்னத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி போட்டியிடவுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வழிநடத்தலில் போட்டியிடுவதாகவும், படகுசின்னம், மொட்டுச்சின்னம் என தொடர்புபடுத்தி பல்வேறு வகையான செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தனித்துவமாக படகு சின்னத்திலேயே போட்டியிடுகின்றது. ஆட்சியமைக்கும்போது மக்களுக்கு சேவையாற்ற ஆளும் அரசுடன் மக்களுடன் சேவையாற்றுவதற்காக எந்த கட்சி ஆட்சியமைத்தாலும் இணைந்து பணியாற்ற தயாராகவிருக்கின்றோம்.

அதிகார பரவலாக்கலுக்கு எதிராக பேசும், செயற்படும் கட்சிகளுடன் இணைந்து தமிழர்களுக்கு துரோகம் செய்வதற்கு நாங்கள் தயாராக இல்லை.

இணக்க அரசியல் செய்யும்போதும் தமிழர்களுக்கு சாதகமான முடிவுகளை எடுத்தே செயற்பட்டு வந்தோம்.

07 உறுப்பினர்களைக்கொண்ட முஸ்லிம் காங்கிரசுக்கு கிழக்கு மாகாணசபையில் 11 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முதலமைச்சர் பதவியை தாரைவார்த்துக் கொடுத்தது.

பல்வேறு பிரச்சினைகள் கொண்ட உள்ளூராட்சிசபைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளில் கொடுத்தால் தமிழர்களுக்கு எவ்வாறான சேவைகளை செய்யப்போகின்றார்கள் என்பது கேள்விக்குறியாகும்.

அதனை உணர்ந்தே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பின்னால் தமிழ் மக்கள் அணி திரண்டு உள்ளனர்.

மத்திய அரசியலில் மிகவும் பலம்பொருந்திய சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளபோதிலும் அது தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை.

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் பல்வேறு கோசங்களை முன்வைத்தவர்கள் கடந்த வரவுசெலவு திட்ட முன்மொழிவின்போது அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான எந்த அழுத்தத்தினையும் வழங்கவில்லை. எந்தவித கோரிக்கையினையும் வைக்காமல் ஆதரவு வழங்கினர்.

இவ்வாறான நிலையில் உள்ளூராட்சி அதிகாரங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வழங்கினால் இருக்கின்ற தமிழர்களின் எல்லைக்கிராமங்களை வரைபடத்தில் பார்க்கும் நிலையினை உருவாக்குவார்கள் என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழ் மக்கள் இம்முறை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் என்பதே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கோரிக்கையாகும் என குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. இம்முறையாவது தேர்தலில் நீங்கள் போட்டி போடாமல் இருந்தால் போதும். தமிழ் பிரதிநித்துவம் தானாக கூடும.் நீங்கள் போட்டி போடுகிறேன் எண்டு மஹிந்த ஓடு சேந்து கள்ள வாக்கு போடு சுமார ஆறு ஆசனங்களை இழந்தோம் இறுதி கிழக்கு மாகாண சபை தேர்தலில். இறுதியில் அந்த ஆறு ஆசனங்களும் ஐ. தே. க மற்றும் ஸ்ரீ. ல. சு. க போட்டி போட்டமுஸ்லிம்களுக்கு தரைவது முதலமைச்சர் பதவியையும் கொடுத்தது நீங்கள் தன. உங்களூடூய அரசியலை தயவு செய்து நிறுத்தி கொள்ளுங்கள் . உதவி செயதிலும் உபத்திரம் செய்யாமல் இருங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.